குழந்தைகளிடம் பாலியல் தொல்லை – மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா!!

Read Time:3 Minute, 25 Second

பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாகஅவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில் பல்லாயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து தேசிய மன்னிப்பு குறித்த அவரது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேவாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டு மன்றங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில் பல பத்தாண்டுகளாக இந்த தொந்தரவுகள் நிகழ்ந்துள்ளன. தேசிய மன்னிப்பு இந்தாண்டு இறுதியில் கோரப்படும் என்று டர்ன்புல் கூறியுள்ளார்.

இந்த தொந்தரவுகளில் தப்பிப் பிழைத்தவர்களின் விருப்பார்வங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்வை ஒரு தேசமாக நாம் அனுசரிக்கவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு உரிய கண்ணியத்தை அவர்களைப் பாதுகாக்கவேண்டியவர்களே மறுத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

“இந்த சம்பவங்களை ஏதோ சில அழுகிய ஆப்பிள்கள் என்று புறக்கணித்துவிட முடியாது. சமூகத்தின் பெரிய நிறுவனங்கள் மோசமாகத் தோல்வியடைந்துள்ளன,” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய மன்னிப்புச் செய்தியில் என்ன இடம் பெறவேண்டும் என்பது குறித்து இந்த தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் டர்ன்புல் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான குறைதீர்வுத் திட்டத்தில் இணையும்படி அவர் மாநில அரசுகளையும், நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு ஏற்கெனவே 3 கோடி அவுஸ்திரேலிய டொலர்களை இந்த திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளது. பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 1.5 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படுவதோடு, இந்த நிதியில் இருந்து ஆலோசனைகளும் பிற சேவைகளும் வழங்கப்படும்.

இந்த நான்காண்டு விசாரணையின்போது 8 ஆயிரம் பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியாது என்று விசாரணை முடிவில் கூறப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21.!!
Next post அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!