வெள்ளறுகு :மூலிகை மந்திரம்!!
இந்தியா, மேற்கிந்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விளையக்கூடிய ஒரு மூலிகை வெள்ளறுகு ஆகும். 40 செ.மீ. உயரம் வரை வளரும் இத்தாவரம், 4 பட்டை வடிவமுள்ள தண்டினைப் பெற்றிருக்கும். பெரும்பாலும் மலைப்பகுதிகளில்கூட வளரக்கூடியது இம்மூலிகை. துளசிச் செடியைப் போன்ற வடிவமுடையதாயும், குறுகிய நீண்ட அம்பு போன்ற வடிவமுடைய இலைகளை உடையதாகவும் காட்சியளிக்கும்.
தண்டும், இலையும் சேரும் இடத்தினின்று காம்பில்லாத கொத்தான மலர்களை இச்செடி பெற்றிருக்கும். இந்திய மண்ணில் இத்தாவரம் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கி கங்கையாற்றின் தென்கரைப் பகுதி ஊடாகப் பரவி தென்னிந்தியப் பகுதிகளிலும் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது.
சாதாரணமாக, இத்தாவரம் சற்று நீர்ப்பாங்கான பகுதிகளில் தழைத்து வளரக்கூடிய ஒன்று ஆகும். இது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. இதன் விதைகள் ஒரு குப்பியில் அடைக்கப்பட்டது போன்று பளபளப்பான அமைப்பைக் கொண்டிருக்கும்.
வெள்ளறுகு Enicostema Axillare என்று தாவரவியலில் குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Indian Gentian என்று அழைக்கிறார்கள். Gentianaceae என்னும் தாவரக் குடும்பத்தை சேர்ந்த வெள்ளறுகு, ஆயுர்வேதத்தில் சமஸ்கிருதப் பெயராக நாகஜிஹ்வா என்று அழைக்கப்படுவதுஉண்டு.
எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது வெள்ளறுகு. உடலுக்கு உரம் ஊட்டும் டானிக்காக அமைவது, ரத்தத்தை சுத்திகரிப்பது, வாத நோயை போக்குவது, வீக்கத்தைக் கரைப்பது, மனக்கோளாறை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது, இதயத்துக்கு பலமூட்டுவது, பசியைத் தூண்டுவது, மலத்தை இளக்குவது, உடல் வெப்பத்தைப் போக்குவது என எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது வெள்ளறுகு. உடலில் கலந்த நச்சுக்களை நீக்குவதாகவும் வெள்ளறுகு விளங்குகிறது.
தற்போது புகழ்பெற்றிருக்கும் நிலவேம்புக்கு இணையாகச் சொல்லப் படுகிறது வெள்ளறுகு. சில சமயங்களில் நிலவேம்புக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளறுகு மலேரியா காய்ச்சலைப் போக்குவதில் தலைசிறந்த ஒரு மூலிகை என மருத்துவ நூல்களால் குறிக்கப்பெறுகிறது.
வெள்ளறுகில் Oxalic acid என்னும் மருத்துவப் பொருளும், Chiratin என்னும் மருத்துவ வேதிப் பொருளும் மிகுதியாக அடங்கியுள்ளது. வெள்ளறுகின் வேர்ப்பகுதி கொடிய நச்சுக் காய்ச்சல்களைப் போக்குவதில் முதன்மையானது என பல்வேறு மருத்துவ ரசாயனப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வெள்ளறுகில் Alkaloids எனப்படும் மருத்துவ வேதிப் பொருட்களான Gentianine, Erythrocentaurin, Enicoflavine, Gentiocrucine ஆகியனவும், Flavonoids, Apigenin, Genkwanin iso-vitaxin, Swertisin, Saponarin, Swertiamarin ஆகியனவும் மிகுதியாக காணப்படுகிறது.
வெள்ளறுகு பற்றிய அகத்தியர் பாடல் :
குன்மமொடு வாய்வு குடல்வாதம்
சூலையிவை
சென்மம்விட் டோடிச் சிதையுங்காண் வன்முலையாய்
உள்ளுறுகி ரந்திசொறி யொட்டிய
சிரங்குமறும்
வெள்ளறுகு தன்னை விரும்பு
– அகத்தியர் குணபாடம்.
குன்மம் என்னும் வயிற்றுப்புண், வாய்வு பிடிப்பு, குடல்வாதம், வயிற்றுப்பொருமல், கடுமையான வயிற்றுவலி ஆகியன இவ்வுடலை விட்டு விலகிப் போவதோடு இந்த ஜென்மம் எனப்படுகிற இப்பிறவி காலம் முழுமைக்கும் ஒருவரைத் தொடர்ந்து விட்டு விலகியோடும். மேலும் குருதியைப் பற்றி உள்ளுறுப்புகளையும் உடலின் மேற்பகுதியையும் பாதிப்பவையான கிரந்திப்புண், சொறியும் அதனுடன் வடிய சிரங்கும் வேருடன் அற்றுப் போகும். ஆகையினால் வெள்ளறுகு மூலிகையை விரும்பித் தேடிப் பாதுகாத்து வைத்தல் நன்று என்பதாம்.
வெள்ளறுகு சூரணத்தைப் பயன்படுத்துவதால் வாத நோய்கள், மூட்டு வலிகள், மலச்சிக்கல், சர்க்கரை நோய் ஆகியன குணமாகும் என்று பழமைவாய்ந்த சித்த மருத்துவ நூல்கள் தெரியப்படுத்துகின்றன.
வெள்ளறுகு மனிதனுக்கு ஆரோக்கியம் அளிக்கவல்ல அருமையான மூலிகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. வெள்ளறுகின் இலை, வேர் போன்றவற்றை நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்தி மலேரியா காய்ச்சல், சரும நோய்கள், ெதாழுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப்படுத்த வந்தனர்.
வெள்ளறுகின் இலை சர்க்கரை நோயைத் தணிக்கவல்லது, புற்றுநோயைத் தவிர்க்க வல்லது, கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் பலம் சேர்க்க வல்லது, மேலும் இது உடலில் சேர்ந்துள்ள கொழுப்புச் சத்துவத்தைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்க வல்லது. வெள்ளறுகை உள்ளுக்குப் பயன்படுத்துவதால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படுவது கிடையாது. மிகவும் பாதுகாப்பானதும் பணம் செலவில்லாததும்கூட என்பது இதன்
சிறப்பம்சம் ஆகும்.
வெள்ளறுகு சமூலத்தை உலர்த்திப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பல ஆண்டுகள்கூட கெடாமல் நின்று பயன்தரக்கூடியது. வெள்ளறுகில் இரும்பு சத்துவம், பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைட், சல்பேட், பாஸ்பேட் மற்றும் வைட்டமின்களான ‘சி’ மற்றும் ‘பி’ ஆகியன செறிந்து அடங்கியுள்ளன.
ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளறுகோடு ஒத்த மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைச் சேர்த்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கின்றனர். இதனால் ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரை சத்துவத்தைக் கட்டுப்படுத்த இயலுகிறது. ரத்தத்தில் இன்சுலின் என்னும் சத்துவத்தை சமன்படுத்த இது மருந்தாகிப் பயன்தருகிறது. மேலும் சிறுநீரகத்தைச் சீர்செய்கிறது. அதன் இயக்கம் தூண்டப் பெறுகிறது. கொழுப்பு சத்துவம் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சமன் செய்கிறது. மேலும் இதயத்துடிப்பைச் சீர்செய்கிறது.
மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் வெள்ளறுகு வீக்கத்தை வற்றச் செய்ய வல்லது என்றும், புற்றுநோய் கட்டிகளையும் புறந்தள்ள வல்லது என்றும் மத்திய நரம்பு மண்டலத்துக்கு அமைதி தரவல்லது என்றும் பசியைத் தூண்ட வல்லது என்றும் தெரிய வருகிறது.
வெள்ளறுகு மருந்தாகும் விதம்
* வெள்ளறுகு சமூலம் (இலை, பூ, தண்டு, வேர் அனைத்தும்) கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீர்விட்டு அரை டம்ளர் அளவாகச் சுருக்கி இனிப்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கடுமையான வயிற்றுப்புண், வயிற்றுப் பொருமல், வாயு பிடிப்பு, நரம்புகளைப் பற்றிய வீக்கம், வலி, சொறி, சிரங்கு ஆகியன குணமாகும்.
* வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து விழுதாக்கி உடலில் காணும் நமைச்சல் (தினவு), அரிப்பும் அருவெருப்பும் தரும் சிரங்குகள் இவற்றின் மேல் பூசிவர சில நாட்களிலேயே குணம் தரும்.
* வெள்ளறுகு இலையை எடுத்து சுத்திகரித்து அரை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி அதனோடு சிறிது மிளகுத்தூளும் ஒரு திரி பூண்டுப்பல்லும் சேர்த்து காலையில் பாலில் கலந்து கொடுத்து வருவதால் மேக நோய் எனப்படும் வெள்ளை ஒழுக்கு, சீழ் ஒழுக்கு ஆகியன குணமாகும்.
* வெள்ளறுகு சமூலத்தை விழுதாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பேற்றித் தைல பதம் வரும்படிக் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்திக் கொண்டால் படை, சொறி, சிரங்கு இவற்றுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். தலைப் பொடுகுக்கும் இதைப் பூசி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க குணம் தரும்.
* வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து வெண்மிளகு 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பசுவின் வெண்ணெய் சேர்த்து உள்ளுக்குப் பருகுவதால் உடல் வெப்பம் தணியும். சிறுநீர்த்தாரை எரிச்சல், மூலச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியன தணியும். சிறுநீரும் தாராளமாக வெளியேறும்.
* மாதவிலக்கான முதல் மூன்று நாட்களுக்கு வெள்ளறுகு சமூலத்தை அரைத்து விழுதாக்கி எலுமிச்சம் கனி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவர பெண் மலட்டுக்குக் காரணமான கருப்பைப் புழு வெளியேறுவதோடு மாதவிலக்குக் கோளாறுகள் பலவும் தீரும்.
* பல கொடுமையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் போக்கவல்லது வெள்ளறுகு என்று ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.
Average Rating