யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள்!!

Read Time:14 Minute, 14 Second

C.V. Wigneswaran, Chief Minister of the Northern Provincial Council in Sri Lanka, addresses members of the media at a press conference in Markham, Ontario, Canada, on January 14, 2017. During his trip to formalize a friendship agreement between the City of Markham and district of Mullaitivu, Northern Province in Sri Lanka Chief Minister C.V. Wigneswaran spoke about the importance of issues of transitional justice and post-war development to diaspora Tamils in Canada. (Photo by Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Images)
கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு!

பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன்’ (க.வி.விக்னேஸ்வரன்) என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று, பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன்.

தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத வடிவில் முனைப்புப் பெற்றிருந்த காலத்திலும், அந்தச் சூழலுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தினால் மரியாதையோடு கொண்டாடப்பட்ட ஒரு சிலரில் தாங்களும் ஒருவர்.
அது, தங்களை 2013ஆம் ஆண்டு ஜுலை நடுப்பகுதியில், தமிழ்த் தேசிய அரசியலுக்கு நேரடியாக அழைத்து வருவதற்கு முக்கியமான காரணியாகவும் இருந்தது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘பொது வேட்பாளர்’ என்கிற அந்தஸ்து, தங்களை ஒவ்வொரு தமிழரின் வீட்டுக்குள்ளும் கொண்டுவந்து சேர்ந்தது.

யாழ். தேர்தல் மாவட்ட வரலாற்றில், அதிக விரும்பு வாக்குகளைப் பெற்றவர் என்கிற அங்கிகாரம் தங்களிடம் வந்து சேர்ந்தது. அந்த ஓர் இலட்சத்து முப்பதாயிரத்துச் சொச்ச வாக்குகளை அளித்தவர்களில் ஒருவனால், இந்தக் கடிதம் எழுதப்படுகின்றது.

இதனை, ஒட்டுமொத்த வாக்காளர்களின் குரலாகவும் கொள்ள வேண்டியதில்லை; தனி ஒருவனின் குரலாகக் கொண்டால் போதுமானது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் மக்களினால் அளிக்கப்பட்ட வாக்குகள், தமிழ்த் தேசிய அரசியலின் மீளெழுச்சியை உறுதிப்படுத்துவது சார்ந்தது. அத்தோடு, முள்ளிவாய்க்கால்க் கோரங்களை நிகழ்த்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான, பழிதீர்க்கும் போக்கிலானது.

ஆனாலும், மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாமல், அப்போதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தாங்கள் பதவியேற்றது, வாக்களித்த மக்களின் மனங்களில் ஈட்டியைப் பாய்ச்சியது.
தங்களின் அரசியல் வருகையைக் கடுமையாக எதிர்த்தவர்கள், அந்தத் தருணத்தில் அதிக புளகாங்கிதப்பட்டு, தமிழ் மக்களை நோக்கி ‘ஏமாளிகள்’ என்று பேசிக் கொண்டிருந்தார்.

அந்தக் காயத்துக்கு நீங்கள், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இன அழிப்புத் தீர்மானத்தை மாகாண சபையில் நிறைவேற்றியதன் மூலம் மருந்திட முனைந்தீர்கள்.

கடந்த காலத் தவறுகளை மன்னிப்பது அல்லது தாண்டி வருவது என்கிற நிலையில், தமிழ் மக்களில் பெரும்பான்மையினர், இன அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியவர் என்கிற நிலையில், தங்களை ஒரு முனைப்புப் பெற்ற அரசியல் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், அந்த விடயம் நிகழ்ந்து சிறிய காலத்துக்குள்ளேயே, சுன்னாகம் பகுதி கிணறுகளில் எண்ணெய்க் கழிவுகளின் கசிவு தென்பட்டபோது, அந்த விடயத்தை சரியாகக் கையாளாத ஒரு முதலமைச்சராக, மக்களின் நம்பிக்கையீனத்தைப் பெற்றீர்கள்.

எப்போதுமே, தங்களைக் குறித்த ஒரு கூற்று உண்டு. ‘முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவரைச் சுற்றியிருப்பவர்களினால் தவறாக வழிநடத்தப்படுகின்றார். அதனாலேயே அவர் தவறான முடிவுகளை எடுக்கின்றார்.’ என்று.

இது உண்மையோ, பொய்யோ; தங்களின் நிலை தங்களுக்குத்தான் தெரியும். ஆனால், சுன்னாகம் கழிவு எண்ணெய் விடயத்தில், மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும், அது சமர்ப்பித்த அறிக்கையும் எவ்வளவு நம்பகத்தன்மையற்றதாக இருந்தது என்பது பற்றிய காட்சிகளை, அதன் பின்னர் கண்டோம். தங்களின் நான்கரை ஆண்டுகால முதலமைச்சர் பதவிக்காலத்தில், இந்த மூன்று விடயங்களும் முக்கியமானவை. ஒரு முதலமைச்சராக நீங்கள் பெற்றிருக்கின்ற மறுக்கமுடியாத சில அடையாளங்கள்.

முதலமைச்சராகத் தாங்கள் இன அழிப்புத் தீர்மானத்தை முன்வைத்து நிறைவேற்றிய போதிலும், அந்தத் தருணத்திலிருந்து தங்களை முதலமைச்சர் என்கிற அடையாளங்களுக்கு அப்பால், ஓர் ஆளுமையுள்ள அரசியல்த் தலைவராகக் கருதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வந்திருக்கின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில், அந்த எண்ணிக்கையில் ஏற்ற இறக்கங்கள் மாறி மாறி நிகழ்ந்தாலும், தங்களை ஓர் அரசியல்த் தலைமையாக முன்னிறுத்த வேண்டும் என்கிற கோசங்கள் வலுப்பேற்றே வந்திருக்கின்றன.
குறிப்பாக, கடந்த ஆண்டில் தங்களுக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையிலான பிணக்குகள் வலுப்பெற்றதை அடுத்து, அந்தக் கோசங்கள் பெரியளவில் வலுப்பெற்றன. ஆனால், அந்தக் கோசங்களை மற்றவர்கள் அடக்குவதற்கு முன்னரேயே தாங்கள் அடக்கிவிட்டீர்கள் என்பதுதான், தங்களுக்குப் பின்னால் திரளத் தயாராக இருந்தவர்களின் கோபம்.

எனக்கு அந்த விடயத்தில் எந்த வருத்தமும் இல்லை. ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமையாக நீங்கள் வருவீர்கள் என்று நான் என்றைக்கும் நம்பியதில்லை. அதனால், ஏமாற்றமும் இருக்கவில்லை.

ஆனால், கூட்டமைப்பின் தீர்மானங்களை மேற்கொள்கின்ற தலைவர்களில் ஒருவராக நீங்கள் அங்கம் வகித்திருப்பீர்கள் என்று நம்பினேன். ஆனாலும், அது கையை மீறிப்போய் விட்டது.

கூட்டமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக நீங்கள் விலகாவிட்டாலும், நடைமுறை அரசியலில் நீங்கள் கூட்டமைப்புக்கு வெளியிலேயே இருக்கின்றீர்கள். கூட்டமைப்புக்கு மாற்றாக பலமான அணியொன்றை கட்டமைக்க வேண்டும் என்கிற நிலைப்பாடுகளின் போக்கில் நீங்களும் இருக்கின்றீர்கள்.

ஆனால், அதனை உறுதியாகவும் ஒருங்கிணைப்பாகவும் ஏன் செய்கிறீர்கள் இல்லை என்பதுதான் இப்போதையை கேள்வி? கூட்டமைப்பை நோக்கிய விமர்சனங்களை எழுப்புவது மட்டுந்தான் தங்களுடைய கடமையா? அதைத்தானே,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றன. அந்தக் குரல்களுடன் இன்னொரு குரலாக ஒலிப்பது மாத்திரந்தானே தங்களை அரசியல் தலைமையாக ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றவர்களுக்குத் தாங்கள் செய்ய நினைப்பது? தமிழ்த் தேசிய அரசியலில் கூட்டமைப்புக்கு மாற்றான அணிக்குத் தலைமையேற்க வருமாறு தங்களை நோக்கிப் பல தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டுவிட்டது. அதுவும், தங்களைப் பல தடவைகள் தாங்கி நின்றவர்களினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், நீங்கள் அதையெல்லாம் நிராகரித்துவிட்டு, இன்றைக்குப் பலமான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, அரசியலைப் பலப்படுத்துவது சார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.

தமிழ்த் தேசிய அரசியலில், மக்கள் இயக்கங்கள் பல கட்டங்களிலும் பிரதான பங்கை வகித்திருக்கின்றன. அது, உரிமைகளுக்காக வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்தது முதல், எல்லைப் படைகளாகக் காவல் காத்தது வரை, பல பரிமாணங்களை எடுத்திருக்கின்றது. அதற்கு, அந்தக் காலத்தில் ஆளுமையுள்ள – உறுதியான தலைமைகளும் காரணமாக இருந்தன.

அதற்கு, அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர்களும் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய திட்டங்களும் வேண்டும். அதனைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட நீங்கள் தலைமையேற்றிருக்கும் தரப்பினாலும் செய்ய முடியவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. அப்படியானால், மேடைப் பேச்சுகளின் வழி விடுக்கப்படும் மக்கள் இயக்கங்களுக்கான அழைப்பு எவ்வகையானது?

இறுதியாக, கடந்த 20ஆம் திகதி வெளியான பத்திரிகைச் செய்திகளில், ‘…தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்கப்பட்ட விடயங்களைப் பெற முடியவில்லை என்றால், கூட்டமைப்பின் தலைமைகள் தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கைளித்துவிட்டு, ஒதுங்கிக் கொள்வதே நல்லது. நாம் கேட்டவை கிடைக்காது. ஆகவே, தருவதை ஏற்போம் என்பது தர்மம் ஆகாது. நாம் போராடுவது தார்மீக உரிமைகளுக்காக….’ என்கிற தொனிப்படும் தங்களின் கருத்தைக் கண்டேன். தமிழ் மக்களுக்குக் கூட்டமைப்பு மீது அதிருப்தி உண்டு. குறிப்பாக, தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டவைக்கும், கூட்டமைப்பின் நடைமுறை அரசியலுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்கின்றது என்கிற பெருங்கோபமும் உண்டு. ஆனால், அந்தக் கோபங்களைக் கூட்டுக் கோபங்களாக மாற்றி, கூட்டமைப்பின் மீதான அழுத்தமாக மாற்றுவதற்கான வழிகளையோ, அல்லது புதிய தலைமைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதையோ நீங்கள் உள்ளிட்ட யாருமே செய்யவில்லை.

அப்படியிருக்க, இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமைகளை நோக்கி, “இயலாதுவிட்டால் ஒதுங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவதனால் மாத்திரம், அரசியல் மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்ந்துவிடுமா? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள்.

இந்தக் கேள்வி, ஒவ்வொரு சாதாரண தமிழ் மகனிடமும் மகளிடமும் உண்டு. அந்தக் கேள்விக்கான பதிலைத் தெளிவாகவும் உறுதியாகவும் நீங்கள் கூறும்போது, சிலவேளை நீங்கள் முன்வைக்கும் அரசியல் எழுச்சி பெறலாம்.

தமிழ்த் தேசிய அரசியலை என்றைக்கும் காப்பாற்றி வந்திருப்பது, கொள்கைப் பிடிப்போடு இருக்கின்ற மக்களே. ஆனால், அவர்களைச் சரியாக ஒருங்கிணைக்காது, வழிநடத்தாது தவறவிட்டது தலைமைகளே.
அவ்வாறான நிலையே, இப்போதும் தொடர்கின்றது. அந்தத் தலைமைகளில் ஒருவராகவே நீங்களும் இருந்து கொண்டிருக்கின்றீர்கள் என்கிற ஆதங்கத்தில் இந்தக் கடிதம் எழுதப்படுகின்றது.

பதில்களைத் தங்களின் அரசியல் – செயற்பாட்டின் வழியே எதிர்பார்க்கிறேன்.

நன்றி,

ஓர்இலட்சத்து முப்பதாயிரத்து சொச்சத்தில் ஒருவன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்!!
Next post யாழில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!!