‘பரு’வப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
நான் கல்லூரி மாணவி. என்னுடைய கன்னம், நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் சின்னச் சின்ன பருக்கள் அதிகமாக உள்ளது. வெளியே முகம் காட்ட முடியவில்லை. மிகவும் தாழ்வு மனப்பான்மையாக உணர்கிறேன். பலவித சோப்புகளை பயன்படுத்திவிட்டேன். பலனில்லை. பருக்கள் நீங்க என்ன சோப் பயன்படுத்தலாம்? சிலர் கடலைமாவு மற்றும் பயத்தம் மாவு பயன்படுத்த சொன்னார்கள். அதையும் செய்து பார்த்தேன். ஆனால், பருக்கள் அதிகமானதே தவிர குறையவில்லை. முகப்பரு இருந்தால் ஃபேஷியல் செய்யலாமா. அவ்வாறு செய்தால் பருக்கள் அதிகமாகுமா. வைட்டமின் இ மாத்திரையை முகத்தில் பயன்படுத்தலாமா. அதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? இந்த ‘பரு’வப் பிரச்னைக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லுங்களேன் அக்கா…- சு.லீலா, சிவகங்கை.
‘‘பருவம் அடைந்த பெண்களின் முக்கிய பிரச்னை பருக்கள் தான்’’ என்று பேச துவங்கினார் கிரீன் டிரண்ட்ஸ் அழகுக் கலை நிலையத்தின் முதன்மை அழகுக் கலை நிபுணர் சுமதி. பொதுவாக ஒருவரின் சருமம் மூன்று வகைப்படும். சாதாரண சருமம், வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் பசை சருமம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு பருக்கள் பிரச்னை அதிகமாக இருக்கும். அவர்கள் தங்களின் சருமத்தை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களின் சருமம் எந்த வகையை சார்ந்தது என்று தெரிந்துக் கொள்ள அதற்கான சின்ன ஆய்வினை வீட்டில் இருந்த படியே செய்யலாம். காலை எழுந்ததும், முகத்ைத கழுவாமல், ஒரு டிஷ்யு பேப்பரை முகத்தில் வைத்து நன்கு அழுத்தி எடுக்க வேண்டும். அதில் நெற்றி மற்றும் மூக்கு பகுதியில் அதிக எண்ணெய் பசை இருந்தால், எண்ணெய் பசை சருமம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். எண்ணெய் பசை இல்லை என்றால், வறண்ட சருமம். மிதமான எண்ணெய் பசை இருந்தால் சாதாரண சருமம். இதன் மூலம் உங்கள் சருமம் என்ன வகை என்று முதலில் தெரிந்துக் கொண்ட பிறகு
அதற்கேற்ற சிகிச்சை முறைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாம்.
எண்ணெய் பசை சருமம் மட்டுமே இருந்தால் பருக்கள் அதிகமாக தோன்றும் என்றில்லை. டீஹைட்ரேஷன் இருந்தாலும் முகத்தில் பருக்கள் தோன்றும். ஒரு சிலருக்கு உடல் சூட்டின் காரணமாக சூடு கட்டி கூட பருக்கள் போல் தோன்றும். உடல் சூட்டின் காரணமாக ஏற்பட்ட கட்டிகள் என்றால், அவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் அல்லது பழச்சாறுகள், பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும்.
பருக்கள் என்றால், வீட்டில் உள்ள சந்தன கட்டையை அரைத்து பரு உள்ள இடத்தில் இரவு படுக்கும் முன் வைக்கலாம். பருக்கள் உள்ள இடத்தில் ஏற்படும் வலி குறைந்து நாளடைவில் காய்ந்து போகும். பருக்கள் உடைந்து அதில் உள்ள சீழ், சருமத்தில் படரும் போது மேலும் பரவும் வாய்ப்புள்ளது. வேப்பிலையுடன் மஞ்சளையும் சேர்த்து அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்தாலும் பருக்கள் பரவாமல் பாதுகாக்க முடியும். சிலருக்கு மாதவிலக்கின் போது பருக்கள் ஏற்படும். அந்த நேரத்தில் சந்தனம் வைத்தால் சரியாகிவிடும்.
சோப் உடலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முகத்திற்கு ஃபேஷ்வாஷ் பயன்படுத்தலாம். பருக்கள் அதிகம் இருந்தால் வேப்பிலை கொண்ட ஃபேஷ்வாஷ் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது, உங்கள் சருமத்தின் தன்மை என்ன என்று அறிந்துக் கொண்டு பயன்படுத்துவது நல்லது. கடலைமாவு முகத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கக்கூடியது. அதே போல் பயத்தம் மாவு முகத்திற்கு பொலிவை ஏற்படுத்தும். தினமும் குளிக்கும் போது இதனை பயன்படுத்தலாம். ஆனால், உங்களுக்கு இதனால் பருக்கள் தோன்றுகிறது என்றால், அதை தவிர்ப்பது நல்லது.
முகத்தில் ஒன்று இரண்டு பருக்கள் இருந்தால் ஃபேஷியல் செய்துக் கொள்ளலாம். ஆனால், அதிகமாக இருப்பின் ஃபேஷியலை தவிர்க்க வேண்டும். காரணம் ஃபேஷியல் செய்யும் போது பயன்படுத்தப்படும் ஸ்கிரப் மற்றும் கிரீம்கள் பருக்கள் மேல் உராய்ந்து அது மேலும் அதிக அளவில் பரவும் வாய்ப்புள்ளது. ஃபேஷியலுக்கு பதில் முகத்திற்கு பேக் போடுவதன் மூலம் உங்கள் சருமம் இறுக்கமாகி பொலிவுடன் காணப்படும்.
சில குறிப்பிட்ட அழகு நிலையத்தில் முகப்பருக்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனை மேற்கொள்ளலாம் அல்லது சரும நிபுணரை அணுகி சிகிச்சை பெறலாம்.
வைட்டமின் இ, எண்ணெய் சருமத்தில் ஈரப்பதம் மற்றும் பொலிவை அளிக்கும் என்பதால், தினமும் குளிக்கும் முன் முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து கழுவலாம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவினையும் இவர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் அதிக அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ளலாம். உணவில் கீரை மற்றும் பச்சை காய்கறிகளும் சேர்த்துக் கொள்வது நல்லது’’ என்றார் அழகுக் கலை நிபுணர் சுமதி.
Average Rating