உங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்!!
சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்து வருகிறோம். அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக சுற்றுச் சூழலை எப்படி பாதுகாப்பது என்பதை பள்ளி மாணவர்களுக்கு குறும்படங்கள் மூலம் ஜெர்மன் கலாசார நிறுவனம் அறிவியல் திரைப்பட விழாவை சென்னையில் நடத்தியது. உலகம் முழுக்க 23 நாடுகள் அக்டோபர் 6 முதல் 18 வரை இவ்விழாவை நடத்துகின்றன. இந்தியாவில் சென்னை, மும்பை, ெடல்லி, புனே ஆகிய நகரங்களில் இவ்விழாவை ஜெர்மன் கலாசாரத் துறை நடத்தியது. பள்ளிகளில் உள்ள 9 முதல் 12 வயதுடைய மாணவர்களுக்கான 11 குறும்படங்களும், 12 வயது முதல் 16 வயதுடைய மாணவர்களுக்கான 8 குறும்படங்களும் வெளியிடப்பட்டன.
தமிழகத்திலிருந்து 110க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் அறிவியல் சார்ந்த குறுந்தகடுகளை பெற்றுக் கொண்டனர். இதில் 70க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளும் குறுந்தகடுகளை பெற்றுக் கொண்டன. சுற்றுச்சூழல் பாதிப்பு, வாகன நெரிசல், நவீன முறை விவசாயம், கலாசாரம், வரலாறு, வாய்மொழி வரலாறு தொடர்பான குறும்படங்கள் வழங்கப்பட்டன. அறிவியல் சார்ந்த இந்த குறும்படங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் (கிழக்கு) அமைப்பு ஈடுபட்டுள்ளது. இது குறித்து பேசிய ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, “மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் குறித்த அறிவியல்பூர்வமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் பிரம்மாண்டமான அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும் சுற்றுச்சூழல் விவசாயம் படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் மாற்றங்களை நாம் மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். மாணவர்கள் அறிவியல் சார்ந்த விவரங்களை திரையில் பார்க்கும்போது எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்கிற நோக்கத்தில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்றார். சுற்றுச்சூழல் ஆய்வாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளப் பேரிடரை சந்தித்தது.
2016 ஆம் ஆண்டு புயலால் பாதித்தது. இப்போது வெள்ள அபாயம் ஏற்படும் சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். இதற்கெல்லாம் என்ன காரணம்? அறிவியல் சார்ந்து சிந்திப்பதற்கு நாம் தவறிவிட்டோம். மழை நீர் தேங்கும் ஏரி, குளங்களில் மக்கள் குடியேறி விட்டனர். இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து முற்றிலுமாக இயற்கை வளங்களை நாம் சுரண்டி விட்டோம். இதை ஆந்த்ரோபோன்ஸ் என்று கூறுகிறோம். இது போன்ற நேரங்களில் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
அதன் தேவையை உணர்ந்து அறிவியல் குறும்படங்களை மாணவர்களிடத்தில் கொண்டு ெசல்லும் முயற்சியில் அறிவியல் திரைப்பட விழா துவங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த குறும்படங்கள் திரையிடப்படவேண்டும். பள்ளி நிர்வாகங்கள் தானாக முன்வந்து இந்த குறும் படங்களை பெற்று வருகின்றனர். ேமலும் தமிழகம் முழுவதும் இயங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பெற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்” என்றார். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் இத்தகைய குறும்படங்களை காணச் செய்வதன் மூலம் அறிவியல்பூர்வமான சிந்தனையை வளர்த்தெடுக்கலாம்தானே?
Average Rating