பெண்கள் தங்களை தாழ்த்திக்கொள்ளக் கூடாது!!
சல்மா என்றால் இலக்கிய உலகில் தெரியாதவர் யாரும் இல்லை. ‘இரண்டாம் ஜாமத்து கதைகள்’ என்கிற ஒரே நாவலில் உச்சம் தொட்டவர் சல்மா. ஒரு சிறு கிராமத்தில், வீட்டுக்குள் அடைபட்டு கிடந்தவர் இன்று இலக்கியம் சார்ந்து உலகளவில் பயணிக்கிறார். இவரது எழுத்து வெளிநாட்டுக் கல்லூரியில் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கெல்லாம் காரணம் எழுத்து. இஸ்லாமிய பின்னணி கொண்ட சல்மா பெண்ணின் மன உணர்வுகளை, வலிகளை, தேவைகளை வெளிப்படையாக பதிவு செய்தவர். பெண் உடல் சார்ந்த விஷயங்களை தன் கவிதைகளில் காத்திரமாக பதிவு செய்பவர். அவர் தன் எழுத்துலக பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டவை.
“சொந்த ஊர் துவரங்குறிச்சி. அப்பாவுக்கு ஜவுளி வியாபாரம். விவசாயமும் செய்து வந்தார். சிறுவயதில் இருந்தே எனக்கு வாசிக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. அந்த வயதிற்குரிய ‘அம்புலிமாமா’, ‘பூந்தளிர்’, ‘பாலமித்ரா’ மற்றும் நிறைய காமிக்ஸ் என புத்தகங்கள் வாசிப்பேன். அதன் பிறகு குமுதம், ராணி போன்ற புத்தகங்கள், இரும்புக்கை மாயாவி, துப்பறியும் சாம்பு என எல்லாவற்றையும் வாசிப்பேன்.
விடுமுறை தினங்களில் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பேன். நாங்கள் இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எனக்கு 13 வயதாகும் போது நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பெரியவளானதும் என்னை பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். வெளியே போவதற்கும் தடை விதிக்கப்பட்டது. அப்போது என்னுடைய பெரிய பொழுதுபோக்காக இருந்தது வாசிப்பு மட்டும்தான்.
சிறுவயதில் இருந்தே வாசிக்கும் பழக்கம் இருந்ததால் படிப்பு நின்ற பிறகும் நூலகத்தில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து வாசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் இருந்து வெளியே போக அனுமதி இல்லை என்பதால் என் அண்ணன் மகன் நூலகத்தில் இருந்து புத்தகங்களைக் கொண்டு வருவார். நூலகர் புத்தகங்களை தேர்வு செய்து தருவார். வீட்டைப் பொறுத்தமட்டில் ‘சும்மா என்னவாச்சும் படிச்சிட்டு இருக்கிற…’ என்று கடிந்து கொள்வார்களே தவிர, தீவிர எதிர்ப்பு எல்லாம் இருந்தது இல்லை. அதனால் நிறைய படிக்க முடிந்தது.
அப்படி அறிமுகம் ஆனவைதான் ரஷ்ய இலக்கியங்கள், துன்பியல் இலக்கியங்கள். டால்ஸ்டாய், செக்காவ் என எல்லாரையும் படிக்க ஆரம்பித்தேன். ரஷ்ய இலக்கியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இப்படி மேலும் வாசிக்க வாசிக்க நாமும் எழுதினால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. எழுத ஆரம்பித்தேன். முதலில் கவிதைகள் எழுதினேன்.
கையெழுத்துப் பிரதி நூல் ஒன்றிற்கு கவிதை எழுதி அனுப்பினேன். கவிதை வெளிவந்தது. மெல்ல மெல்ல சிறு பத்திரிகை உலகம் அறிமுகமானது. அவற்றிற்கும் கவிதைகள் எழுதி அனுப்புவேன். உறவினரான அண்ணன் ஒருவர்தான் கவிதைகளை அஞ்சல் செய்வார். கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. முதலில் கவிதைகள் வெளிவந்தது வீட்டிற்கு தெரியாது. எனது நிஜப்பெயர் ராசாத்தி ரோக்கய்யா. நான் சல்மா என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன்.
நான்தான் எழுதியது என்று தெரிய ஆரம்பித்ததும் வீட்டில் இருந்து கேள்விகள் எழுந்தன. வெளியில் இருந்து நிறைய விமர்சனங்களும் வந்தன. ‘என்ன உங்க பொண்ணு இப்படி பண்றா?’ என்று கேள்விகள் வந்தன. இப்படி சிக்கல்கள் இருந்தாலும் ஒரு கவிஞர் என்ற முறையில் இலக்கியவாதிகளுக்கு என் மேல் ஒரு கவனமும் வந்தது. அதனால் என்னைப் பற்றி விமர்சிப்பவர்களை ‘புரியா தவர்கள் ஏதோ அறியாமையில் பேசுறாங்க’ என்று விட்டு விட்டு மறுபடி எழுத ஆரம்பித்துவிடுவேன்.
தொண்ணூறுகளில் பெண் உடல் சம்பந்தப்பட்ட கவிதைகளை எழுதிய பெண் கவிஞர்கள் வெகு சிலரே. அதில் நான் முக்கியமானவளாக இருந்தேன். அந்த சமயத்தில் அதே ஊரில் எனக்கு திருமணம் நடைபெற்றது. புகுந்த வீட்டிலும் வெளியே வரும் சுதந்திரமில்லை. அங்கேயும் வீட்டிற்குத் தெரியாமல் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். காலச்சுவடு பத்திரிகையில் கவிதைகள் வெளிவந்தன. ஒரு நாள் காலச்சுவட்டில் இருந்து ‘கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
இதனை ஒரு தொகுப்பாக்கலாம்’ என்று சொன்னார்கள். பின்னர் அவர்களே அந்தத் தொகுப்பையும் கொண்டு வந்தார்கள். ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற தலைப்பில் அந்தப் புத்தகம் வெளிவந்தது. எனது நிஜப்பெயரோ, போட்டோவோ அதில் இருக்காது. கவிதைத்தொகுப்பு வந்த விஷயம் வீட்டிற்கு தெரியாது. ரகசியமாகவே வைத்திருந்தேன். அதில் இருந்த புதிய மொழி, புதிய விஷயம், பெண்ணிய பார்வை எல்லோருக்கும் பிடித்திருந்ததால் அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது.
என் கவிதைத் தொகுப்பு வெளியானதை என்னால் நம்ப முடியவில்லை. முதல் கவிதைத் தொகுப்பு வந்த சந்தோஷத்தைக் கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை. என் நிலைமை அப்படி. என் கணவருக்கு அரசியலில் ஈடுபாடு இருந்தது. அதனால் 2001ல் பஞ்சாயத்து தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி கேட்டுக்கொண்டதால் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அப்போது ஒரு பேட்டியில்தான் நான் ஒரு எழுத்தாளர் என்பதையும் எனது கவிதைத் தொகுப்பு வெளிவந்ததையும் சல்மா என்ற பெயரில் எழுதுவது நான்தான் எனவும் அறிமுகம் செய்தேன்.
அப்போதுதான் என் கவிதைப் புத்தகம் வெளிவந்த விஷயம் வீட்டிற்கும் ஊர் மக்களுக்கும் தெரிய வந்தது. பின்னர் எழுத்தையும் கூடவே படிப்பையும் தொடர்ந்தேன். அரசியலில் எழுத்தாளர் என்ற எனது அறிமுகம் எனக்கு உதவியாக இருந்தது. ஊருக்காக எதாவது தேவையின் பொருட்டு அரசு அலுவலகங்களுக்குப் போகும் போது நான் அரசியல்வாதி என்பதை விடவும் எழுத்தாளர் என்கிற இந்த அடையாளம் எனக்கு உதவியாக இருந்தது. வீட்டிலும் எதிர்ப்பு குறைய ஆரம்பித்தது.
அதற்குப் பிறகு கவிதையை தாண்டி யோசிக்க ஆரம்பித்தேன். சுற்றி நடக்கும் விஷயங்களை, நான் கவனிக்கும் விஷயங்களை எழுதிப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. முதல் நாவலை வழக்கம்போல வீட்டிற்குத் தெரியாமல் எழுத ஆரம்பித்தேன். வீட்டில் நிறைய பேர் இருப்பார்கள். கிட்டதட்ட மூன்று, நான்கு வருடங்கள் வீட்டு வேலை எல்லாம் முடித்த பிறகு உள்ளே போய் கதவை சாத்திக்கொண்டு எழுத ஆரம்பித்து விடுவேன்.
கதவைத் தட்டினால் உடனே திறக்க மாட்டேன். எழுதிக்கொண்டிருப்பதை மூடி பீரோவில் வைத்துவிட்டு வந்து திறக்க தாமதமாகிவிடும். ‘உள்ள இருந்துக்கிட்டு அப்படி என்னதான் பண்றே? கதவைத் தட்டினா திறக்க பத்து நிமிஷம் ஆகுது’ என வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள். ஆனால் என் கணவருக்கு மட்டும் தெரியும் நான் எதாவது எழுதிக்கொண்டுதான் இருப்பேன் என்று.
அப்படி கொஞ்சம் கொஞ்சமாக எழுதி பலமுறை திருத்தி முதல் நாவலை எழுதி முடித்தேன். நாவல் வெளிவரும் வரை ரகசியமாகவே வைத்திருந்தேன். இஸ்லாமிய சமூகப் பெண்களின் வாழ்க்கை, குடும்பத்திற்குள் அவர்களுக்கு ஏற்படும் அவல நிலையைப் பற்றி வெளிப்படையாக எழுதி இருந்ததால், இதற்குப் பிறகு எழுத முடியுமோ முடியாதோ என்ற பயம் இருந்தது. எனவே எழுத நினைத்தவற்றை மொத்தமாக எழுதி விட வேண்டும் என்று பெரிய நாவலாக எழுதிவிட்டேன்.
சிக்கலான விஷயங்களையும் எழுதினேன். எனக்கு முன்னர் இந்த சமூகத்துப் பெண்களின் அவலநிலை குறித்து எழுதியவர்கள் இல்லை. அதனால் தயக்கத்தோடும் பயத்தோடும்தான் எழுதினேன். ஆனால் இதை எழுதலாமா? வேண்டாமா? என்றெல்லாம் யோசிக்கவே இல்லை. நடக்கும் விஷயங்களை வெளிப்படையாக எழுதினேன். பார்க்கிற விஷயங்களை பதிவு செய்தேன். சில கோபங்கள் இருந்தன. அதையும் பதிவு செய்தேன். பொய்யை எழுதவில்லை.
உண்மைத் தன்மையை தான் எழுதினேன். நூல் வெளிவந்த போது பயத்தோடுதான் இருந்தேன். இஸ்லாமிய பின்புலத்தில் இருந்து புதிதாக பெண் சார்ந்த விஷயங்களை எழுதி இருந்தேன். அதனால் நல்ல வரவேற்பும் இருந்தது. நிறைய எதிர்ப்பும் இருந்தது. வாசகர்கள் நிறைய பேரிடம் இருந்து கடிதங்கள் வந்தன. மின்னஞ்சல்களும் அனுப்பி இருந்தார்கள். நேரில் பார்த்தாலும் பேசுவார்கள். வாசகர்கள் பெரிதும் உற்சாகப்படுத்தினர். இவர்களின் பாராட்டுதல்கள்தான் எனது உந்துசக்தியாக எப்போதும் இருக்கிறது.
நேர்மையாக எழுதி இருக்கிறோம், எழுத்தாளராக நம் வேலையை சரியாக செய்திருக்கிறோம் என்ற திருப்தி இருந்தது. எனது நாவல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. 2004ல் ஓர் அரசியல் கட்சி சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். ஆனால் அரசியலுக்கு வந்தபிறகு என் எழுத்திற்கு எதிர்ப்பு இல்லை. சென்னை வந்தேன். சமூகம் சார்ந்து நிறைய விஷயங்களை செய்ய ஆரம்பித்தேன். எழுதுவதற்கான நேரம் கொஞ்சம் குறைந்தது. வாழ்க்கை வேறு மாதிரி போக ஆரம்பித்தது.
இதுவரை ஒரு சிறுகதைத்தொகுப்பு, 2 நாவல்கள், 2 கவிதைத்தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. என்னுடைய மற்றும் பிறரின் வாழ்க்கை அனுபவங்களை, நம்மைச் சுற்றி நிகழும் விஷயங்களை எழுதுகிறேன். எழுதவேண்டும் என்று தோன்றுகிற, பதிவு செய்ய நினைக்கும் விஷயங்களை, சமூகத்துக்கு சொல்லியே ஆக வேண்டும் என நான் நினைக்கிற விஷயங்களை எழுதுகிறேன். கற்பனைகள் அவ்வளவாக தேவைப்படாது. தேவைப்படும் சில இடங்களில் மட்டும் கற்பனைகள் சேர்ப்பேன்.
ஓரளவுதான் எழுதி இருக்கிறேன். இன்னும் நிறைய விஷயங்களை எழுத வேண்டி இருக்கிறது. இப்போதும் என் கவிதைகளை தொகுப்பாக்கும் முயற்சியில் இருக்கிறேன். விருதுகள் மீதெல்லாம் பெரிதாக எனக்கு நம்பிக்கை இல்லை. காரணம் பல விருதுகளின் பின்னணியில் அரசியல் இருக்கிறது. இங்கே ஆண் எழுத்தாளர்களுக்கு இணையாக பெண் எழுத்தாளர்களுக்கும் சிறந்த முறையில் அங்கீகாரம் கிடைக்கிறது. ஆனால் அதனை ஆண் எழுத்தாளர்களால்தான் ஜீரணிக்க முடியவில்லை.
இதையெல்லாம் தாண்டி பெண்கள் தங்கள் மனத்தடைகளை சமூகத்தடைகளை உடைத்து மனதில் தோன்றும் விஷயங்களை எழுத வேண்டும். இதை எழுதலாமா, எழுதக்கூடாதா, பிரச்னை வருமா, என்றெல்லாம் யோசிக்காமல் தோன்றுகிற விஷயங்களை எழுத வேண்டும். இது மட்டும் தான் பெண் எழுத்து என சுருங்கி போகக்கூடாது. தேங்கி போகக்கூடாது. பெண்களும் இந்த சமூகத்தின் ஒரு பாதி. சமூகத்தின் ஆழமான பரவலான விஷயங்களை நோக்கி பெண்கள் போக வேண்டும்.
யதார்த்தவாத படைப்புகள்தான் பேசப்படும். படைப்பாளிகளிடம் ஆழமான தேடல் உணர்வு இருக்க வேண்டும். எழுத்தில் புது விஷயங்களை நிகழ்த்திப் பார்க்க வேண்டும். நமக்கு தோன்றும் நேர்மையான விஷயங்களை எழுத வேண்டும். அந்த எழுத்து தகுதியானதா என்பதை காலம் முடிவு செய்யும். பெண் என்கிற தாழ்வுணர்ச்சியில் இருந்து பெண்கள் வெளியே வரவேண்டும்.
‘நீ பொம்பள தானே’ என்று மத்தவங்க சொல்வதை விடவும் பெண்கள் மனதிலே ‘நாம் பொம்பளதானே ஆம்பளைகளுக்கு ஈடாக முடியுமா?’ என்கிற எண்ணம் இருக்கிறது. அதில் இருந்து வெளியே வர வேண்டும். நம்மை தாழ்த்திக்கொள்ளக் கூடாது, நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். என் இடம் இது என்கிற புரிதல் பெண்களுக்கு அவசியம். அப்போதுதான் பெண்ணின் தனித்துவம் ஆண்களுக்குப் புரியும்.
Average Rating