மெக்சிகோ நாட்டில் பயங்கரம்: மதுபானபார் நெரிசலில் சிக்கி, பள்ளி மாணவர்கள் உட்பட 12 பேர் பலி; ஆண்டுவிழாவை கொண்டாடியபோது பரிதாபம்
மெக்சிகோ நாட்டின் இரவு நடன விடுதி மதுபான பாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 மாணவர்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். மெக்சிகோ நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதற்கும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பின் மதுபான பார்கள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இதையும் மீறி மதுபான பார்கள் மெக்சிகோவில் இயக்கப்படுவது சர்வசாதாரணமாகும். இந்த நிலையில் மெக்சிகோ சிட்டி நகரில் உள்ள நிïஸ் டிவைன் என்னும் இரவு நேர நடனவிடுதியுடன் இணைந்த மதுபான பார் ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கூடி மது அருந்துவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த நடன விடுதிக்குள் நுழைந்து சோதனை நடத்த முயன்றனர். போலீசைக் கண்ட மாணவர்கள் அனைவரும் மது போதையில் தலைதெறிக்க ஓட முயன்றனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அவசர காலத்தில் தப்பிக்க உதவும் எமர்ஜென்சி வாயிலை நோக்கி ஓடினார்கள். எமர்ஜென்சி வாயில் மிகவும் சிறியதாக இருந்ததால் அங்கு மிகுந்த நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் பல மாணவர்கள் கீழே விழுந்தனர். அவசர கதியில் ஓட முயன்றவர்கள் கீழே கிடந்தவர்கள் மீது ஏறி மிதித்தபடி வேகமாக சென்றனர். இதில், சிக்கிய மாணவர்கள் 7 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பரிதாபமாக உயிர் இழந்தனர். இவர்களில் 3 பேரது உடல்கள் இரவு விடுதியின் நுழைவு வாயில் அருகே கிடந்தன. பலியான மாணவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர்.
போலீசைக் கண்டு மிரண்டு ஓடியபோது ஏராளமான பேர் போலீசாரையும் கீழே தள்ளிவிட்டு ஏறிமிதித்து ஓடினார்கள். இதில் நடவடிக்கை எடுக்கச் சென்ற 3 போலீஸ் அதிகாரிகளும் சிக்கிக் கொண்டார்கள். அவர்களும் மூச்சுத் திணறி பலியானார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குடிபோதையில் மிதந்த 30 இளைஞர்களும், இரவுநேர விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.
திடீர் சோதனை அல்ல
இது குறித்து மெக்சிகோ சிட்டி நகர போலீஸ் அதிகாரி ஜோயல் ஒர்டேகா கூறுகையில், `மிகச் சிறிய அவசரகால வாசல் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டனர். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 12 பேர் இறந்துள்ளனர். சோதனை நடத்த வருகிறோம் என்று இரவு விடுதி உரிமையாளருக்கு தெரிவித்து விட்டுத்தான் அங்கு சென்றோம். இது திடீர் சோதனை அல்ல. வழக்கமான ஒன்றுதான். ஆனாலும் விடுதி உரிமையாளர் அலட்சியமாக இருந்து விட்டார்` என விளக்கம் அளித்தார்.
மாணவர்கள் அனைவரும், தங்களது பள்ளி ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுவதற்காக மதுபான பாருக்குச் சென்றபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
Average Rating