ஐ.நா வாக்கெடுப்பு: மாறுபட்டுப்போகும் வெளிவிவகாரக் கொள்கைகள்..!! (கட்டுரை)
கடந்த வியாழக்கிழமை அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அங்கத்துவ நாடுகள், ஐக்கிய அமெரிக்காவின் நேரடியான அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிப்பதற்கான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவை எதிர்ப்பதாக, மிகப்பெருமளவில் வாக்களித்திருந்தனர்.
ஒன்பது நாடுகள் ஆதரவாகவும், கனடா, அவுஸ்திரேலியா உட்படட 35 நாடுகள் வாக்களிக்காத நிலையிலும், 128 நாடுகள், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி, ஐ.அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகள் தொடர்பாக அமெரிக்கா பதில் நடவடிக்கை எடுக்கும் என ஏற்கெனவே அறிவித்திருந்த போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவுக்கு எதிரான வாக்கெடுப்பு, மிகவும் அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த வாக்கெடுப்புக்கு பின்னர் கருத்து தெரிவித்திருந்த தூதுவர் ஹேலி, ஐ.நாவின் வாக்கெடுப்பைக் கருத்தில் எடுக்கவோ, அது தொடர்பில் கவலை செலுத்தவோ ஐ.அமெரிக்கா முனையாது எனவும், மறுமுனையில், வாக்குகளைப் புறந்தள்ளி, ஐ.அமெரிக்காவின் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவாக, ஐ.அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் நிறுவுதல் நடைபெற்றே ஆகும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, வாக்கெடுப்புக்கு முன்னர் கருத்துத் தெரிவித்திருந்த ஐ.அமெரிக்க ஜனாதிபதி, இதனைப் பொறுத்தே ஐ.அமெரிக்கா, ஐ.நாவுக்கு வழங்கும் நிதி உதவிகளைக் குறைத்தல்,, வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளுக்கு வழங்கும் உதவிகளை நிறுத்துதல் தொடர்பில் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வாக்கெடுப்பு, ஐ.அமெரிக்காவின் அண்மைய வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பாகும். இதே பத்தியில், ஏற்கெனவே சென்ற வாரங்களில், இது ஐ.அமெரிக்கா, இஸ்ரேலுக்காக எடுத்திருந்த “வெளிவிவகார தற்கொலை முயற்சி” என வர்ணித்திருந்தமையை மீள்நோக்கிக்கொண்டு, குறித்த வாக்கெடுப்பு எவ்வாறு வரும் வருடத்தில், இஸ்ரேல் – பலஸ்தீனம் மற்றும் துருக்கியின் வெளிவிவகாரக் கொள்கைகளில் தொடர்பில் தாக்கங்களை ஏற்படுத்தப்போகின்றது என்பதே, இப்பத்தியில் நோக்கம்.
குறித்த வாக்கெடுப்பு, இஸ்ரேலின் வெளிவிவகாரக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. எனினும், இது ஒரு நீண்ட கால வெற்றி அல்ல. இஸ்ரேல், 2018இல் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கத்துவம் பெறுவதற்கு முனைக்கின்ற இந்நிலையில், 128 நாடுகள் ஜனாதிபதி ட்ரம்ப், மற்றும் அதனூடாக இஸ்ரேலின் ஜெருசலேத்தைத் தலைநகராக்குதல் தொடர்பில் எதிர்த்துள்ளமை, இஸ்ரேல் 2018இல் அவ்வளவு சுலபமாக பாதுகாப்புச் சபை உறுப்புரிமையைப் பெறமுடியாது என்பதையே காட்டுகின்றது.
மேலும், பலஸ்தீனத்தின் சுயாட்சியை எதிர்த்தல், ஐ.அமெரிக்காவை விட இஸ்ரேலுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு வெளிவிவகார உறுதிப்பாடாகும். இந்நிலையில் குறித்த வாக்கெடுப்புக்குப் பின்னர், பலஸ்தீனம் தனிநாடாகப் பிரகடனம் செய்யப்பட ஏதுக்கள் இல்லை என்ற நிலையை, குறித்த வாக்கெடுப்பு மாற்றியுள்ளது. துருக்கி, சிரியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் செயற்பாடுகள், மத்திய கிழக்கில் வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறத்தில் ஐ.அமெரிக்கா, ஈராக்கிலிருந்து வெளியேறுதல், ஆப்கானிஸ்தானின் சுயாட்சியை வலுப்பெறச்செய்தல் என்பன, மத்திய கிழக்கில் இஸ்ரேல் விரும்பாத நடவடிக்கைகளே.
எனினும், அவை பலஸ்தீனத்தைத் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு இட்டுச் செல்லும் என எண்ணிவிடமுடியாது. ஆனால் நீண்டகாலப் பிரகடனத்துக்கான நடவடிக்கைகளில் பலஸ்தீனத்துக்கு உறுதுணையாக அமையும் என்பதும், மறுக்க முடியாத உண்மையாகும். மேற்கு நாடுகள், வன்மையான எதிர்ப்பைத் தெரிவிக்காத நிலையில், இன்னொரு காஸா போன்ற கொடூர தாக்குதல் இஸ்ரேலால் மேற்கொள்ளப்படுமாயின், அது நிச்சயம் பலஸ்தீன சுயாட்சிக்கு இட்டுச்செல்வதைத் தடுக்கமுடியாமல் போகும். இது அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய தோல்வியாகவே வரலாற்றில் பதியப்படும்.
மறுமுனையில், வாக்கெடுப்புக்கு பின்னர் ஐ.அமெரிக்காவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த துருக்கி ஜனாதிபதி தய்யீப் ஏர்டோவான், ஐ.அமெரிக்காவால் துருக்கியை வாங்கிவிடமுடியாது எனக் கூறியிருந்தார். இது வெறுமனே குறித்த வாக்கெடுப்பு தொடர்பான விடயம் அல்ல. யுத்தத்துக்குப் பின்னரான சிரியாவின் பூகோளவியலில், குர்திஷ் அமைப்பின் இருப்பை, ஐ.அமெரிக்கா ஆதரிக்கின்றது.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில், குர்திஷ் அமைப்பினரின் முக்கிய பாத்திரத்தை ஐ.அமெரிக்கா அடிக்கடி வலியுறுத்தியுள்ளதுடன், அவர்களுக்கான ஆயுத மற்றும் பாதுகாப்பு உதவிகளையும் வழங்கிவந்துள்ளது. துருக்கி, மறுபுறத்தில் சிரிய குர்திஷ்களை, சிரியாவின் அங்கமாகவே பார்க்கிறது. எனவே, துருக்கியப் பிராந்தியத்தில் உள்ள ஒரு குர்திஷ் அமைப்பான YPGஐ, துருக்கியிலுள்ள PKKஅமைப்பை ஒத்ததாகவே கருதுகின்றது.
இது, துருக்கியின் உள்நாட்டு விவகாரங்களில் எவ்வாறு PKK, குர்திஷ் மக்களுக்கு தனித்துவமான ஒர் அடையாளத்துக்காக அழைப்பு விடுக்கின்றதோ, அதேபோன்று பிராந்தியத்தில் துருக்கிக்கு எதிரான குர்திஷ் தன்னாட்சி அரசொன்று அமைவதற்கு YPG வழிவகுத்துவிடும் எனக் கருதுகின்றது. இது, துருக்கியின் நீண்டகால பாதுகாப்புக்கு ஒத்ததல்ல. இருந்தபோதிலும், ஐ.அமெரிக்கா, YPGஐ ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட மறுத்துவிட்டமை ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிரான போராட்டத்தில், YPG மற்றும் ஐ.அமெரிக்கா என்பன, களநிலைமையில் ஒரு முக்கிய நட்பு அமைப்பாகவே அமைந்திருக்கின்றமை, துருக்கிக்கு விரும்பத்தக்க கொள்கை அன்று.
துருக்கி, ஒரு நேட்டோ நாடாக இருக்கும் இந்நிலையில், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியப் பாதுகாப்புக்கு, துருக்கியின் பங்கு அவசியமாகும். இந்நிலையில் ரஷ்யாவுடனான நேசக்கரம் நீட்டுதல், எவ்வாறாக நேட்டோ இணைந்த பாதுகாப்பு நிலைமைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, ஐ.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சாதகமான ஒன்றாக அமைவதற்கு வாய்ப்பில்லை.
இந்நிலையில், ஐ.அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பு, மாறுபாடுள்ள பூகோளவியல் வெளிவிவகாரக் கொள்கைகளின் பிரதிபலிப்பின் ஓர் ஆரம்பம் மட்டுமே ஆகும்.
Average Rating