இத செய்யுங்க! அப்றம் பாருங்க… மணவறையில் நீங்கள் `ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே’ தான்..!!
முகூர்த்துக்கு நாள் குறித்ததும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்குச் சமமாக… டென்ஷன், அலைச்சல், கனவு, எதிர்பார்ப்புகள், பயம் ஆகியவையும் வரிசை கட்டும்! கலவர கண்கள், பூக்கும் பருக்கள்… என அதன் வெளிப்பாடு புறத்தோற்றத்திலும் பிரதிபலிக்கும். `கல்யாணப் பொண்ணு… என்ன இப்படி டல்லா இருக்கற…?!’ என்று பார்ப்பவர்களின் கண்களுக்கும் அது புலப்படும்.
அதையெல்லாம் தவிர்க்க, நிச்சயமான நாள் முதல் மணநாள் வரை, `ஒரு நல்ல வாழ்க்கை நமக்கு காத்திருக்கு’ என்ற அமைதியான மனதுடன், இந்தச் சருமப் பாதுகாப்பு பராமரிப்புகளையும் செய்து வந்தால், மணவறையில் நீங்கள் `ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே’ தான்!
* தினமும் வெதுவெதுப்பான பாலில் பஞ்சை தோய்த்து கை, கால், நகம், விரல் இடுக்குகள் மற்றும் மூக்கு, காது பகுதிகளில் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். இந்த `க்ளென்ஸர்’ காரணமாக அழுக்கு நீங்கி, நகமும் பளபளப்பாக மின்னும்.
* உறங்கப்போவதற்கு முன் சூடான தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பு, நான்கு புங்கங்காய் தோலை போட்டு ஊற வைத்து, அதில் கால் இரண்டையும் பத்து நிமிடம் அமிழ்த்தி வையுங்கள். பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதன் தோலை காலில் தேய்த்துக் கழுவுங்கள்.
வெள்ளைத் துணியால் நன்றாக துடைத்து விட்டு கிளிசரின் தடவுங்கள். வாரம் இரு முறையாவது இப்படிச் செய்து வந்தால்… பாதத்தின் வெடிப்பு, பிளவுகள் நீங்கும்! பின் மெட்டி போடும் போது `மெத்’தென்று இருக்கும்!
* காலில் ஷூ, கொலுசு போடுவதால் அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் கறுப்பாக இருக்கும். பாதாம் ஆயில் அல்லது பாதாம் பருப்பு அரைத்த விழுதை பூசி வந்தால், கருமை மறைந்து எல்லா இடங்களும் ஒரே நிறத்துக்கு வரும்.
* சிலருக்கு கை, கால்களில் அதிகமாக முடி இருக்கும். இதற்கு கடலை மாவு, கஸ்தூரி மஞ்சளை சமமாக எடுத்து பேஸ்டாகும் அளவுக்கு பால் சேர்த்து திக்காக கலந்து பத்து போல் போடுங்கள். ஓரளவு காய்ந்ததும் (துடைத்து எடுக்கும் அளவுக்கு) சிறிய வெள்ளைத் துணியால் ஒற்றி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, முடி வலுவிழந்து லேசாகி உதிர்ந்து விடும்.
* பூசும் மஞ்சளை விழுதாக அரைத்து, சிறிது பயத்த மாவு, பாலை கலந்து முகம் முதல் பாதம் வரை உடம்பு முழுவதும் பூசிக் குளியுங்கள். தோலைப் பளபளப்பாக்கி நல்ல வாசனையையும் கலரை கொடுப்பதோடு… குற்றாலத்தில் குளித்தது போல் உடம்பே குளுகுளுவென்று இருக்கும். மாலை சூடும் வேளையில், உங்களை தங்கம் போல ஜொலிக்க வைக்கும்!
* நன்கு காய்ச்சிய அரை கப் பாலை ஒரு பஞ்சில் நனைத்து, கண்கள், மூக்கைச் சுற்றிலும் ஒற்றி எடுக்க வேண்டும். சிறிது காய்ந்ததும் பஞ்சை இன்னொரு முறை பாலில் நனைத்து ஒற்றி எடுக்கவும்
இவ்வாறு நான்கு அல்லது ஐந்து முறை செய்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இது, உஷ்ணத்தை குறைத்து வெப்பத்தினால் ஏற்பட்ட சிறு சிறு கட்டிகள் மற்றும் தோலின் நிறம் ஆங்காங்கே மாறி இருப்பது போன்றவற்றுக்கு மிகவும் சிறந்தது.
* இரண்டு டீஸ்பூன் மாதுளைச் சாறை, ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணையுடன் கலந்து முகத்தில் போடுவது, சருமத்தை வெளிறிப் போகாமல் காக்கும். பொதுவாக, சத்தான உணவு சாப்பிட்டாமல் இருப்பவர்களுக்கு கண்களும் முகமும் வெளிறிக் காணப்படும்.
இது, இரும்புச்சத்துக் குறைவால் ஏற்படுகிறது. மாதுளைச்சாறு, இழந்தச்சத்தை மீட்டுக் கொடுக்கும். பாதாம் ஆயில், சரும வறட்சியை நீக்கி மினுமினுப்பைக் கொடுக்கும்<
Average Rating