இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்?..!! (கட்டுரை)
இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார்.
காரணம், நாடு அறிந்ததே. அவரது கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய மூன்று தலைவர்கள், திடீரென அவரைக் கைவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றிருக்கின்றனர். மற்றொரு தலைவரும் அவரது கட்சியை விட்டுப் பிரிந்து இருக்கிறார்.
விமல் ஒரு கடும் சிங்கள இனவாதி என்பது அரசியலைப் பற்றிச் சாதாரண அறிவுள்ள சிறுபான்மையினரைச் சேர்ந்த சகலரும் அறிந்த உண்மை. எனவே, அவரது கட்சியில் ஏற்பட்டு இருக்கும் இந்தச் சிக்கல், அரசியலில் அக்கறையுள்ள தமிழ், முஸ்லிம் அனைவரினதும் கவனத்தை நிச்சயமாக ஈர்த்து இருக்கும்.
விமல் வீரவன்சவை ஒரு வகையில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாகவிருந்த கருணா எனப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனோடு ஒப்பிடலாம்.
கருணா, புலிகள் அமைப்பில் இருக்கும் போது, பலமான சக்தியாக இருந்தார். ஆனால், புலிகள் அமைப்பிலிருந்து விலகிய பின் அவர் ஒரு சக்தியாகக் கருதப்படவில்லை. அதேவேளை, அவர் புலிகள் அமைப்பின் போராட்டக் கொள்கையிலிருந்தும் விலகினார்.
பின்னர், அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், பிள்ளையான் போன்ற முக்கிய தலைவர்கள் அவரைக் கை விட்டுச் சென்றனர்.
விமல், மக்கள் விடுதலை முன்னணியில் பிரசார செயலாளராக இருக்கும் போது, பிரதான கட்சிகளும் மதித்த தலைவராக இருந்தார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகிய பின், அவரும் ஒரு சக்தியாக இருக்கவில்லை.
அவரும், கருணாவைப் போல் மஹிந்தவின் கையில் தொற்றியே பிழைக்க வேண்டியதாயிற்று. அவரிடமிருந்தும் இப்போது பல ‘பிள்ளையான்’கள் வெளியேறியுள்ளனர். அவரும் மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து மட்டுமன்றி, அதன் சோசலிசக் கொள்கையிலிருந்தும் விலகியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமை தாங்கும் கட்சிகளே இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, போட்டியிடும் பிரதான மூன்று கட்சிகளாகும்.
அவற்றில், மூன்றாவது இடத்திலேயே மைத்திரிபாலவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருப்பதாகப் பொதுவானதோர் அபிப்பிராயம் நிலவுகிறது.
அந்த நிலையிலேயே, இவ்வாறு அதைவிடப் பலம் வாய்ந்த அணியாகப் பலரால் கருதப்படும் மஹிந்த அணியிலிருந்து தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்கள் மூவரும் விலகியிருக்கின்றனர்.
இவர்கள் மட்டுமன்றி, தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்ரமவும் கடந்த வாரம், ஸ்ரீ லங்கா சுதந்திர கடசியில் சேர்ந்து, இராஜாங்க அமைச்சர் பதவியொன்றையும் பெற்றுக் கொண்டார்.
இவர்கள் எந்த நம்பிக்கையில், இவ்வாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்தார்கள் என்பதும் சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது.
ஒரு கட்சியின் தலைவரும் பிரதித் தலைவரும் பொதுச் செயலாளரும் பொருளாளரும் தேசிய அமைப்பாளருமே முக்கியமானவர்களாகவும் அதிகாரம் உள்ளவர்களாகவும் கருதப்படுகின்றனர். தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் வீரகுமார திஸாநாயக்க, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க, கிழக்கு மாகாணத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயந்த விஜேசேகர ஆகியோர் இம்மாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டனர்.
விமலின் கட்சியின் பொதுச் செயலாளராகவிருந்த பிரியஞ்ஜித் வித்தாரண அக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சி உறுப்பினர் என்ற நிலையிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் பதவி விலகுவதாக அவர் தமது இராஜினாமாக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த போதிலும், அதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போது, “ அரசியல் காரணங்களுக்காவே தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து இராஜினாமாச் செய்தேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.
சூழ்நிலைமை தமக்கு இராஜினாமாச் செய்யத் தூண்டினாலும், அப்போதும் அக் கட்சியை நேசிப்பதனால், அவர் இராஜினாமாக் கடிதத்தில் அரசியல் காரணங்களை குறிப்பிடவில்லையா அல்லது பாதுகாப்புக் காரணங்கள் போன்ற ஏதாவது காரணத்தினால் அதைக் குறிப்பிடவில்லையா என்பது தெளிவாகவில்லை.
அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை அவர் இன்னமும் தெரிவிக்கவில்லை. ஆயினும், அவரது கருத்துகளையும் விமலை விட்டுச் சென்ற ஏனைய மூன்று பேரது கருத்துகளையும் அவதானிக்கும் போது, அவரும் ஜனாதிபதியுடன் கைகோர்த்துக் கொள்வார் என்றே ஊகிக்க முடிகிறது.
தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் தலைவர்கள் நால்வரும், தாம் அக்கட்சியிலிருந்து ஏன் பிரிந்தோம் என்பதை விளக்கியும் தமது செயலை நியாயப்படுத்தியும் கடந்த வாரம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து இருந்தனர்.
அவர்களில், பிரியஞ்ஜித் வித்தாரண தவிர்ந்த ஏனைய மூவரும் ஒரே கருத்தைத்தான் காரணமாகக் குறிப்பிட்டு இருந்தனர். அதாவது, 2020 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன், ஸ்ரீ ல.சு.கவை பலப்படுத்துவதற்காகவே, தாம் ஸ்ரீ ல.சு.கவில் இணைந்து கொண்டதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவர்களது வாதங்கள் பலவீனமானவையாகவே இருக்கின்றன.
தமது தலைவர் வீரவன்ச, ஸ்ரீ ல.சு.கவை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அது 2020ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாவதற்கே உதவும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பிரதித் தலைவர் வீரகுமார திஸாநாயக்க கூறுகிறார்.
அவ்வாறு கூறிவிட்டு, 2014 ஆம் ஆண்டு ஸ்ரீ ல.சு.கவை பிளவுபடுத்திக் கொண்டு அதிலிருந்து வெளியேறி, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகி, நாடாளுமன்றத்தில் வெறும் 54 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்துள்ளார்.
அதேவேளை, தேசிய விடுதலையை அடைவதே தமது இலட்சியம் என்றும் மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியுடன் இணைந்தே அதனை அடைய முடியும் என்றும் விமலை விட்டுச் சென்ற பியசிறி விஜேநாயக்க வாதிடுகிறார். ஜனாதிபதியைப் புறக்கணித்து, ஐ.தே.கவைத் தோற்கடிக்க முடியாது என்றும் அவர் கூறுகிறார்.
தேசிய விடுதலை என்று அவர் எதைத்தான் குறிப்பிடுகிறாரோ தெரியாது. ஆனால், ஐ.தே.க வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டு, ஐ.தே.கவுடன் கூட்டரசாங்கமொன்றை நடத்தும் ஜனாதிபதியுடன் இணைந்துதான் அவர் ஐ.தே.கவைத் தோற்கடிக்க முற்சிக்கிறார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலத்தில், திருகோணமலையில் புலிகளால் ஏற்றப்பட்டிருந்த புலிக் கொடியை கீழே இழுத்தெறிந்து, சிங்கள மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ஜயந்த வீரசேகர, தேசிய விடுதலைப் போராட்டமொன்றின் மூலம், சோசலிசத்தை அடைவதே தேசிய சுதந்திர முன்னணியின் இலட்சியம் என்றும் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, அவர் தேசிய வளங்களை விற்பதை எதிர்த்துக் கருத்து வெளியிட்டார் . அதைப் பாரதூரமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறி, தாம் ஜனாதிபதியுடன் இணைந்ததை நியாயப்படுத்துகிறார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, தமது கட்சிக்கு ஆசனப் பங்கீட்டில் நியாயம் வழங்கப்படாவிட்டால், தமது கட்சி தனியாகப் போட்டியிட வேண்டும் எனத் தாம் கூறியதாகவும் அப்போது வீரவன்ச, கட்சியிலிருந்து வெளியேறுமாறு தம்மைப் பணித்ததாகவும், பின்னர் தாம் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க முயற்சித்ததாகவும் ஒருநாள் முழுவதுமாகத் தம்மைக் காத்துக் கொண்டு இருக்கச் செய்துவிட்டு, அவரும் தம்மை ஏமாற்றியதாகவும் விஜேசேகர குற்றம் சாட்டுகிறார்.
அவர் தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விரட்டப்பட்டதனாலேயே ஸ்ரீ ல.சு.கவில் சேர்ந்துள்ளார் என்பது தெளிவாகிறது. இப்போது அவர் தாம் கடைசி வரை தொற்றிக் கொண்டு இருக்க முற்பட்டவர்களுக்கு எதிராக ‘தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தி அதன் மூலம் சோசலிசத்தை அடைய ஸ்ரீ ல.சு.கவில் இணைந்துள்ளார்.
விமல் வீரவன்ச மற்றும் கருணாவும் இதனையே செய்தனர். கருணாவும் கடைசி வரை புலிகளுடன் இணைந்திருக்க முயற்சித்தார். முறுகல் உருவாகிய பின்னரும் பிரபாகரனை சூரிய தேவனாக வர்ணித்துக் கடிதம் எழுதினார். ஆனால், பின்னர் புலிகளிடமிருந்து விலகி, அவ்வமைப்பை விமர்சித்தார்; வேறு கட்சி அமைத்தார்.
விமலும் கடைசி வரை, மக்கள் விடுதலை முன்னணியில் தொற்றிக் கொண்டு இருக்க முயற்சித்தார். கட்சி தம்மைச் சந்தேகிப்பதை அறிந்தவுடன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, “மகே பக்ஷய மட்ட வெடி திப்பே எய்?” (எனது கட்சி என்னைச் சுட்டது ஏன்?) எனக் கேட்டார்.
தாம் கட்சிக்காக எந்தளவு தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டோம் என்பதை எடுத்துக் கூறுவதற்காக, தமக்குத் தமது வாழ்வில் இன்னமும் சிகிரியாவுக்கும் சிவனொலிபாத மலைக்கும் கூடச் சென்று வரச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனக் கூறினார். அது உண்மை.
ஆனால், அவ்வாறு தியாகம் செய்தவர், அக்கட்சியிலிருந்து விலகிய பின், அந்தக் கொள்கைகளைப் பின்பற்ற விரும்பவில்லை. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதன் பின், விமல் “நெத்த வெனுவட்ட எத்த” (பொய்மைக்குப் பதிலாக உண்மை) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
அதில், அவர் சோவியத் தலைவர் வி.ஐ. லெனின் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர ஆகியோரை மேற்கொள் காட்டி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகிய பின், மக்கள் விடுதலை முன்னணி, மஹிந்தவின்அரசாங்கத்தில் இணைந்திருக்க வேண்டும் என வாதிட்டு இருந்தார்.
அதேபோல், மஹிந்தவின் அரசாங்கம் மக்களுக்கு எதிராகச் செயற்படும் போது, அந்த அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும் எனவும் வாதிட்டார். இதனை அவர் சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தந்திரோபாயமாகவே வர்ணித்தார்.
ஆனால், அவ்வாறு வாதிட்டுக் கொண்டு, மஹிந்தவுடன் இணைந்தவர், தாம் கூறியவாறு செய்யவில்லை. தமது கட்சியே (ஜே.வி.பி) முன்வந்து ஜனாதிபதி சந்திரிவைப் பயணிக்க வைத்துக் கொண்டு, வரச்செய்த சுயாதீன ஆணைக்குழுக்களை இல்லாதொழித்த 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அவர் ஆதரவளித்தார்.
தாம் போற்றிப் புகழ்ந்த போர் வெற்றிக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை, மஹிந்த அரசாங்கம் சிறையிலடைத்து அவரது ஓய்வூதியத்தையும் பதக்கங்களையும் பறிக்கும் போது அதனை ஆதரித்தார். பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கம் செய்யும் போது அதனையும் ஆதரித்தார்.
‘பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் தந்திரோபாயமாக’ மஹிந்தவுடன் இணைந்தவர் மஹிந்தவின் அரசாங்கம் தொழிலாளர்களையும் மீனவர்களையும் தண்ணீர் கேட்டுப் போராடிய மக்களையும் சுட்டுக் கொன்று, அவர்களது போராட்டங்களை அடக்கும் போது, அதனை ஆதரித்தார்.
மஹிந்தவின் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிராக எதிர்க் கட்சியினர் பாரிய ஊழல்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டும் போது, விமல் அவர்களுக்காக பரிந்து பேசினார். குற்றஞ்சாட்டியவர்களை கடுமையாக தாக்கிப் பேசினார். இறுதியில் இப்போது சட்ட விரோதமாகக் கோடிக் கணக்கில் சொத்துக் குவித்ததாக அவருக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஆயினும், தமது கட்சி தேசிய சுதந்திர போராட்டமொன்றை நடத்தி வருவதாக அவர் இன்னமும் கூறி வருகிறார். விசித்திரமான விடயம் என்வென்றால், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர்கள் இப்போது இரண்டாகப் பிரிந்து தேசிய சுதந்திர போராட்டம் என்ற பெயரில் ஒருவருக்கெதிராக ஒருவர் போராடத் தயாராகி வருவதே.
இருந்த போதிலும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடறிந்த முக்கிய தலைவர்கள் இப்போது விமல் வீரவன்சவைக் கைவிட்டுச் சென்ற போதிலும், தேசிய சுதந்திர முன்னணியினதோ அல்லது அதன் தலைவரினதோ தலைவிதியைப் பற்றி இப்போதே எதனையும் கூற முடியாது.
ஏனெனில், விமல் ஒரு தைரியசாலி, சிறந்த பரப்புரையாளர், திறமையான சூத்திரதாரி. தமது அரசியல் வரலாற்றில் கடும் சோதனைகளைச் சந்தித்து அவற்றையெல்லாம் சமாளித்து அவர் அதனை நிருபித்துள்ளார். அவர் இனவாதி என்பதற்காக அதனை மூடி மறைக்க முடியாது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்த பல சம்பவங்களுக்கு வழிவகுத்த மக்கள் விடுதலை முன்னணியின் சிறியதோர் குழுவினரில் அவரும் ஒருவர். தமிழீழ விடுதலை புலிகளின் போராட்டத்திலும் பெரும் தாக்கத்தை அந்த சம்பவங்கள் ஏற்படுத்தின.
1988-89 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட 60,000 பேருக்கு மேல் படையினரால் கொல்லப்பட்டனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவினரில் சோமவன்ச அமரசிங்க மட்டுமே உயிர் தப்பினார். இந்த நிலையில் 1990 ஆண்டுக்குப் பின்னர், அக்கட்சியை மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கட்டி எழுப்பியதில் விமல் ஆற்றிய பங்கு நாடறிந்ததே.
அக்காலத்தில் கட்சிக்கு தலைமை தாங்கிய இருவரைப் பற்றித்தான் மக்களுக்குத் தெரியும். ஒருவர் விமல்; மற்றவர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா.
அவ்வாறு மீண்டும் தலைதூக்கிய மக்கள் விடுதலை முன்னணி இன்றும் நாட்டின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
2001 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திலிருந்து விலகியதை அடுத்து, சந்திரிகாவின் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியது.
அந்த நிலைமையைப் பாவித்து மக்கள் விடுதலை முன்னணி நிபந்தனையுடன் அரசாங்கத்தில் இணைந்து ‘நன்நடத்தை அரசாங்கம்’ என்ற பெயரிட்டு சந்திரிகாவை வற்புறுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கச் செய்தது. இது 1978 ஆண்டுக்குப் பின்னர் அரசமைப்பில் கொண்டு வரப்பட்ட மிகவும் ஜனநாயக மாற்றமாகும்.
புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், புலிகளின் பிடியில் சிக்கி, தனிநாட்டுக்கு ஒப்பான புலிகளின் இடைக்கால சுயாட்சி அதிகார சபை என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த போது, சந்திரிகாவை வற்புறுத்தி ரணிலின் அரசாங்கத்தைக் கலைத்து, அந்தத் திட்டத்தைக் குழப்பியதில் மக்கள் விடுதலை முன்னணிக்கும் அதன் பிரசார செயலாளராக செயற்பட்ட விமலுக்கும் பெரும் பங்குண்டு.
2006 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு இணைப்பை இரத்துச் செய்ததிலும் அவரும் மக்கள் விடுதலை முன்னணியும் பெரும் பங்காற்றின. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தோல்வியடைந்த மஹிந்தவை உசுப்பேற்றி மீண்டும் அரசியல் களத்துக்குக் கொண்டு வந்தவர் விமல் வீரவன்சவே.
இன்று அதனால் நாட்டில் பெரும் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவற்றில் எவற்றை நாம் ஏற்றுக் கொண்டாலும் இல்லாவிட்டாலும் இவை வரலாற்றில் திருப்புமுனைகள் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே விமலை சிறிதாக எடைபோட முடியாது.
ஆனால், மக்கள் விடுதலை முன்னணியில் இருந்த காலத்தில் போல் இன்று அவருக்கு வழிகாட்ட கம்யூனிசம் போன்ற தத்துவம் ஒன்று இல்லை. அவருக்கு துணையாக பலமான சகாக்கள் இல்லை. எனவே, அவர் பிழைப்பதென்றால் மென்மேலும் சிங்கள மக்களின் இன மத உணர்வுகளைத் தூண்டியே ஆக வேண்டும் என்றதோர் நிலைமை உருவாகியிருக்கிறது என்றே கூற வேண்டும்.
Average Rating