வண்போர் பேஸ்’ முகாமை நெருங்கும் படையினர்
வெலிமடவில் இதுகாலவரை புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களுக்குள் ஊடுருவி தீவிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிவரும் அரச படையினர், அவர்களின் பாதுகாப்பு முன்னரண் பகுதியில் பதுங்கு குழிகளுக்கு அப்பால் சுமார் எட்டு கிலோ மீற்றர் வரை துரித கதியில் முன்னேறிவிட்டனர். தற்போது அரச படையினர் நிலைகொண்டிருக்கும் பிரதேசங்கள் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டச் செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திரப் பிரதேசமாகும். புலிகள் இயக்கத்தினரால் “”புதிய பூமி’ என்று அழைக்கப்படும் இந்தப் பிரதேசம் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உட்பட உயர்மட்டத் தலைவர்கள் இக்கட்டான கால கட்டங்களில் பதுங்கியிருக்கக்கூடிய நிலக்கீழ் நிலைய வசதிகளும் பாதுகாப்பும் உடையதெனவும் இவ்வாறு நீண்டகாலம் பிரபாகரன் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து உயிர் தப்புவதற்காக இந்தப் புதிய பூமிப் பிரதேசத்திலேயே மறைந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “வண்போர் பேஸ்” 14 முகாம்களை தொடர்ச்சியாக உள்ளடக்கியுள்ள பெரிய கூட்டு முகாம் தொடர் எனவும் இதனாலேயே இது “வண்போர் பேஸ்” என அழைக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், பிரபாகரனால் முதன் முதல் அமைக்கப்பட்ட முகாம் தொடர் இதுவே எனவும் தற்போது இந்த “வண்போர் பேஸ்” கூட்டு முகாம்கள் அமைந்திருக்கும் பிரதேசத்தின் எல்லைப் பகுதிகள் வரை அரச படையினர் முன்னேறிவிட்டதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கம் வன்னிப் பிரதேசங்களில் மேற்கொண்டுவரும் தாக்குதல்களைப் பொறுத்தவரை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த “வண்போர் பேஸ்” கூட்டு முகாம் சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1987 ஆம் ஆண்டுப் பகுதியில் பிரபாகரனின் நேரடியான கண்காணிப்பில் உருவாக்கப்பட்டதாகும். இந்த முகாம் தொடர்கள் வடக்கு எல்லைகளாக கிண்ணியூற்று, கொய்யாக்குளம், ஒட்டுசுட்டான் பிரதேசங்களைக் கொண்டதாகும். அவ்வாறே மேற்கு எல்லையில் மாங்குளம், கனகராயன்குளம் பிரதேசங்களையும் அதற்கு அப்பால் அலம்பில், கொக்கிளாய் பிரதேசங்களையும் தெற்கில் வெலிஓயா பிரதேசத்தையும் “வண்போர் பேஸ்” முகாம் பிரதேசம் கொண்டுள்ளது. அரச படையினர் முன்னேறி தற்போது இந்த முகாமின் தெற்கு எல்லைப் பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.
வண்போர் பேஸ் முகாம் தொகுதிக்குள் அடங்கியுள்ள 14 முகாம்களும் புலிகள் இயக்கத்தின் உயிரிழந்த தலைவர்களின் பெயர்களில் அமைந்துள்ளன. இவ்வாறு நாகம் பேஸ், ஜீவன் பேஸ், கெஸ்ட்ரோ பேஸ், ஈசன் பேஸ், சுகந்தன் பேஸ், சதீஷ் பேஸ், குமரன் பேஸ், மயூரன் பேஸ், ஒகஸ்ரின் பேஸ் என இறந்த புலிகள் இயக்க முன்னணித் தலைவர்களின் பெயர்களில் அமைந்துள்ள 11 முகாம்களே மேற்படி “”வண்போர் பேஸ்’ கூட்டு முகாம் தொடரில் உள்ள பிரதான முகாம்கள் ஆகும்.
1987 மே மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை அரச படையினர் வடமராட்சிப் பிரதேசங்களில் தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போது அங்கிருந்து தப்பியோடி வந்த பிரபாகரன் “”வண்போர் பேஸ்’ முகாமிலேயே பாதுகாப்பாகப் பதுங்கி வாழ்ந்தார். ஏனைய முகாம்கள் சுற்றிவர அமைந்திருக்க மத்திய பகுதியிலுள்ளதும் அடர்ந்த காட்டுக்குள் அமைந்ததுமான பிரதான வண்போர் பேஸ் முகாமில் பிரபாகரன் உயர் பாதுகாப்புடன் இருந்துள்ளார்.
1987 இல் அரச படையினரின் வடமராட்சி நடவடிக்கையின் பின்னர் 1987 ஆம் ஆண்டிலேயே இந்திய இராணுவத்தினர் ஸ்ரீலங்காவுக்குள் பிரவேசித்த காலகட்டத்திலும் பின்னர் புலிகள் இயக்கத்தினருக்கும் இந்திய இராணுவத்தினருக்குமிடையே பெரும் மோதல் வெடித்த சந்தர்ப்பத்திலும் பிரபாகரன் குறித்த “”வண்போர் பேஸ்’ முகாமிலேயே இருந்துள்ளார்.
அண்மையில் இருதயப் பாதிப்பால் உயிரிழந்ததாக புலிகள் இயக்கத்தால் அறிவிக்கப்பட்ட புலிகள் இயக்க சிரேஷ்ட தலைவர் பால்ராஜ் மேற்படி காலகட்டங்களில் பிரபாகரனுக்குப் பாதுகாப்பாக குறித்த “”வண்போர் பேஸ்’ முகாமிலேயே இருந்தார் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரபாகரனுக்கும் பால்ராஜுக்கும் இடையில் மிக நெருக்கமான தொடர்பு இருந்துள்ளமை இதிலிருந்து தெரியவருகிறது.
1995 இல் அரசபடையினர் பாரிய “றிச்டவரச” இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை மீண்டும் கைப்பற்றிய பின்னர் பிரபாகரன் வடக்கிலிருந்து தப்பி மீண்டும் “”வண்போர் பேஸ்’ முகாமுக்குச் செல்லாமல் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள “”வண் நைன் பேஸ்” முகாமுக்கே சென்று தங்கியிருந்தார்.
எவ்வாறாயினும், தற்போது “”வண்போர் பேஸ்’ முகாம் தொடர்களால் வழங்கப்படும் பாதுகாப்புடனேயே அப்பிரதேசங்களில் எங்கோ பதுங்கி வாழ்வதாகத் தெரிய வந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட நிலையில் அமைந்துள்ள இந்த வண்போர் பேஸ் முகாம் பிரதேசத்திலேயே தற்போது புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட ஏனைய தலைவர்கள் உயர் பாதுகாப்புடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் அரச படையினர் அடர்ந்த காடுகளின் ஊடாகத் தற்போது முன்னேறி வருகின்றனர். இவ்வாறு அரச படையினர் முன்னைய நிலைகளிலிருந்து எட்டுக் கிலோ மீற்றர் தூரம் மேற்படி வண் போர் பேஸ் முகாமை நோக்கி காடுகளினூடாக முன்னேறியுள்ளனர். இந்த வகையில் வெகுவிரைவில் அரச படையினர் கட்டுப்பாட்டுக்குள் “வண்போர் பேஸ்’ முகாம் பிரதேசங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Average Rating