ராஜீவ்காந்தி கொலை வழக்கு: விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனு; ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 16 ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கும் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று ஆயுள் தண்டனை கைதி நளினி தாக்கல் செய்த மனுவை வரும் 18-ந் தேதிக்கு சென்னை ஐகோர்ட்டு தள்ளி வைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கும், மற்ற 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. எனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கலாம் என்றும், பொது மன்னிப்பு வழங்கலாம் என்றும் சோனியாகாந்தி தெரிவித்தார். எனது கருணை மனுவை ஏற்று கவர்னரும், எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். இதற்காக 24.4.2000 அன்று அரசு அறிவிப்பை வெளியிட்டது. தற்போது வேலூர் பெண்கள் சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறேன். 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறேன். 17.6.2005 அன்றே 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆகவே, விடுதலை பெற எனக்கு தகுதி உள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் 472 பேர் 2006-ல் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை. நன்னடத்தை அதிகாரி பரிந்துரை செய்தும் ஆலோசனைக்குழு கேட்கவில்லை. நான் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. என்னை விடுதலை செய்யும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பதில் தர அவகாசம்
இந்த மனு நீதிபதி வி.எஸ்.நாகமுத்து முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் இந்த வழக்கிற்கு பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை நீதிபதி ஏற்று, பதில் மனு தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் அளித்தார்.
இநத வழக்கில் தன்னையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தார். ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலம் முழுவதும் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருப்பதால், நளினியை விடுதலை செய்யக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு 16 ஆண்டுகள் ஜெயிலில் இருந்த காரணத்திற்காக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரமுடியாது என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவும் நேற்று நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
சுப்பிரமணியசாமி சார்பில் வக்கீல் ஜி.ராஜகோபால் ஆஜராகி இந்த மனுவை நளினி தாக்கல் செய்த மனுவோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கூறினார். இதற்கு நளினியின் வக்கீல் இளங்கோ எதிர்ப்பு தெரிவித்தார். சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி ஏற்று, ஒரு வாரத்திற்குள் பதில் தரவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு (புதன்கிழமை) நீதிபதி தள்ளி வைத்தார்.
Average Rating