‘எம்மதமும் சம்மதமே’..!! (கட்டுரை)
இலங்கையில் வாழும் நான்கு மதங்களையும் சார்ந்தோர், பொதுவாக வழிபடும் தலமாக சிவனொளிபாதமலை திகழ்கின்றது.
இலங்கையின் பழைமையையும், புகழையும் உலகுக்குப் பறைசாற்றும் நிகரில்லாப் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ளது மட்டுமின்றி, பல மர்மங்களையும் தன்னுள் இளையோட விட்டுள்ளது சிவனொளிபாதமலை.
இதன் அழகையும், இங்குள்ள இறைவனின் இறை தரிசனத்தைப் பெறாத உள்நாட்டவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதைப் போல, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் முதல் தெரிவாகவும் இந்தச் சிவனொளிபாதமலையே அமைந்துள்ளது.
இங்கு, சிவபெருமானின் 0.55 மீற்றர் (1.8 அடி) நீளமான பாதம் பதிந்துள்ளதாகக் கருதி, இந்து மக்கள் ‘சிவனொளிபாதமலை’ எனவும், புத்தரின் கால்தடம் பதிந்துள்ளதாகக் கருதி ‘ஸ்ரீபாத’ என்று பௌத்தர்களும், ஆதாம் (அலை) கால்தடம் பதிந்துள்ளதால், ‘ஆதாம் மலை’ என்று முஸ்லிம்களும், உலகில் முதல் மனிதனாகிய ஆதாமின் கால்சுவடு பதிந்துள்ளதால் கிறிஸ்தவர்கள், ‘அடம்ஸ் பீக்’ என்றும், அவரவர் மதநம்பிக்கைகளின் அடிப்படையில், பல பெயர்களால் அழைக்கிறார்கள். இதனால் சர்வமதங்களின் ஒற்றுமைச் சின்னமாகவும் இந்தமலை திகழ்கின்றது.
அமைவிடம்
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்துக்கும் மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்துக்கும் சொந்தமான மலையாக நிர்வாக ரீதியாகக் காணப்படுகின்றது. 7,359 மீற்றர் உயரத்தைக் கொண்ட இந்த மலை, இலங்கையின் இரண்டாவது உயரமான மலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.
மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து சுமார் 18.8 கிலோ மீற்றர் தூரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. மலையை அடைவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. ஹட்டன் மற்றும் மஸ்கெலியா வழியாக ‘சீதா கங்குலா’ வழியாகக் கடந்து செல்லும் பாதையூடாக, நான்கு மைல் தூரப் பயணத்தில் சிவனொளிபாத மலையை அடைய முடியும்.
இரண்டாவது வழி மூலம் மலையை அடைவதற்கு 10 மைல் தூரம் செல்ல வேண்டும்.
எழில்மிகு சிவனொளிபாதமலை
சிவனொளிபாதமலையின் யாத்திரைக்கான பருவ காலம் ஆரம்பிக்கும் காலப்பகுதியில் மலையகம் எங்கும் வண்ணத்துப்பூச்சிகள் அலை அலையாகப் பறந்து திரிகின்றன. இவை அனைத்தும், சிவனொளி பாத மலைக்குச் சென்று, இறைவனைச் தரிசிப்பதாக நம்பப்படுகின்றது.
சிங்களவர்கள் இந்திரனை ‘சமன் தெய்யோ’ என அழைப்பார்கள். இதனால் சிவனொளிபாத மலையைச் சூழ அமைந்துள்ள இடங்கள் அனைத்தும் ‘சமன் அடவிய’ என இன்றும் சிங்களவர்களால் அழைக்கப்படுகின்றது.
சிவனொளிபாத மலைக்குச் செல்வதற்கு இரத்தினபுரி, ஹட்டன் -நல்லதண்ணி என இருவழிகள் உள்ளன. எந்த வழியாக இருந்தாலும் மலை ஏற ஆரம்பிப்பதற்கு இரவு நேரமே உகந்தது. சொட்டும் பனித்துளிகள் உடம்பில் பட்டு சில்லிடும்போது, குளிர்காற்றில் மயிர்கள் சிலிர்க்க, மழைச்சாரல் தூவானமாக சிந்திக்கொண்டிருக்கும் காலத்தில் மலை ஏறுவதுதான் சுவாரஷ்யம்.
இங்கு, முதல் முறையாகத் தரிசனத்துக்குச் செல்பவர்கள் கையில் வெள்ளைத் துணியில் நாணயம் ஒன்றை வைத்து, காணிக்கை அணிந்து செல்ல வேண்டும் என்ற ஐதீகம் இன்றும் உண்டு. மலை ஏற ஆரம்பித்துச் சிறிது தூரம் சென்றதும் ஓர் அருவியுடன் புத்தர் சிலைகள் இருக்கும் இடத்தை அடைய முடியும். அந்த இடத்தில் கையில் கட்டியுள்ள காணிக்கையை கழற்றி வைத்துவிட்டு, அந்த அருவியில் முகம், கை, கால்களைக் கழுவி, இறைவனைத் தரிசித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பது பாரம்பரியமாக கைக்கொள்ளப்பட்டுவரும் நடைமுறையாகும்.
இப்படி தரிசனத்தை முடித்துவிட்டு, மலை உச்சியை நோக்கிப் படிகள் வழியே ஏறிச் செல்லும் பாதையின் இருமருங்கிலும் விகாரைகள் கட்டப்பட்டுள்ளதுடன், அவசர தேவைகருதி வைத்திய முகாம்களும் முதலுதவி முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மலை உச்சியை அடைவதற்கு முன்பு, ஊசிமலை என்ற மலையைக் காணமுடியும். அந்த இடத்தில் ஊசியில் நூல் கோர்த்துக்கொண்டு, அம்மலையின் ஆரம்ப இடத்தில் கட்டிவிட்டு, நூலைக் கையில் எடுத்துக் கொண்டு, மலை ஏற வேண்டும். கையில் உள்ள நூல் அறுந்துவிடாமல் இறுதி அந்தம் வரும்வரை மலை வழியே கொண்டு சென்று விட்டால், மனதில் எண்ணிய காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
இரவு மலை ஏற ஆரம்பித்தால், அதிகாலை வேளையில் மலை உச்சியைச் சென்றடைந்து, இறைவனின் பாதங்களைத் தரிசித்துவிட்டு, சூரியன் உதிக்கும் உன்னதமான காட்சியை பார்க்க முடியும்.
சிங்களவர்களின் சம்பிரதாயத்துக்கு அமைய, மத்தளம் அடித்து, முரசு கொட்டி சூரிய பகவானுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
இயற்கை அன்னையின் பிறப்பிடமான, மலைநாட்டின் அற்புதமான எழில் கொஞ்சும் காட்சியைக் காண்பதற்கு, சிவனொளிபாதமலையே சிறந்த இடமாகும். இந்த மலையிலிருந்து, கொழும்பு, பேருவளை மற்றும் கலங்கரை விளக்கங்களைக் காண்பதோடு, சூரியோதயத்தையும் சூரியஅஸ்தமனத்தையும் கண்குளிரக் காணமுடியும்.
சிவனொளிபாதமலை பக்திக்கும்,இயற்கை அழகுக்கும் மட்டும் பிரச்சித்தி பெறவில்லை. மாறாகப் பல ஆறுகளின் ‘நதிமூலமும்’ இந்தச் சிவனொளிபாதமலையில்தான் என்று கூறுவதில் தப்பில்லை.இலங்கையின் மிக நீளமான மகாவலி கங்கை, களுகங்கை, களனிகங்கை உள்ளிட்ட பல ஆறுகள் ஊற்றெடுப்பது இந்த மலையிலிருந்துதான்.
இந்தச் சிவனொளிபாதமலையில் இருப்பது சிவனின் பாதசுவடுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மலையடிவாரத்தில் 2013ஆம் ஆண்டு சிவஸ்ரீ. சிவசங்கரக்குருக்களால் ‘சிவ ஈஸ்வர தேவஸ்தானம்’ எனும் பெயரில் சிறிய ஆலயம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் மக்களின் ஆதரவோடும் அயல்கிராம மக்களின் உதவியோடும் சிறிது சிறிதாகப் பூஜை வழிபாடுகள், கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்று தேவஸ்தானம் பெரும் விருட்சமாக வளர்ந்து உள்ளது.
பருவ காலம் ஆரம்பம்
இவ்வாறாகப் பல சிறப்புகளைக் கொண்ட சிவனொளிபாதமலையின் பருவ கால யாத்திரையானது, டிசெம்பர் மாதம் மூன்றாம் திகதி பூரணை தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக, சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக, இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரகமும் பூஜைப்பொருட்களும் தாங்கிய இரத பவனி, சனிக்கிழமை (02) சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தைச் சென்றடையும்.
இம்முறையும், இரத்தினபுரி – அவிசாவளை வீதி ஊடாக ஹட்டன் – நல்லதண்ணி – சிவனொளிபாதமலைக்குச் செல்லும் ஓர் ஊர்வலமும் பயணிக்கவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. சிவனொளிபாதமலை பருவக்காலம் ஆரம்பமாகின்றமையானது யாத்திரிகளுக்கு மட்டும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. மாறாக, பருவகாலமான நான்கு மாதங்களும் பலரின் வருமானம், இங்குவரும் யாத்திரிகர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் நம்பியே உள்ளது.
சில்லறை வியாபாரிகள் தொடக்கம், சிறு வியாபாரிகள், பல்பொருள் வாணிபம் என அனைவரும், குறித்த பருவ காலத்தில் ஏதாவது ஒரு விதத்தில் தமது வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவே இங்கு எத்தனிக்கின்றனர். எனினும், இங்கு வரும் யாத்திரிகர்களும் மனிதர்களே என்ற மனப்பாங்கு குறித்த வர்த்தகர்களிடத்தில் காணப்படுமாயின், பொருட்களை அதிக விலைக்கு விற்றல், காலாவதியானதும் பழுதடைந்ததுமான பொருட்களை ஏமாற்றி விற்பனை செய்தல் போன்ற மோசடியான வியாபார நடவடிக்கைகளைத் தவிர்த்து, நேர்மையான முறையில் தமது வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களை முன்னெடுக்கலாம். எனினும், அனைவருக்கும் நன்மை பயக்கும் விதத்தில் விலைநிர்ணய, தரக்கட்டுப்பாட்டு மற்றும் சுகாதார அதிகாரிகள் தமது பணியைச் சரிவர முன்னெடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது.
புனிதத்தன்மைக்கு கேடு விளைவித்தலாகாது
இந்தச் சிவனொளிபாதமலை பக்திபூர்வமானது; வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று உலகளாவிய ரீதியில் போற்றப்பட்டாலும்,இதைத் தரிசிக்கச் செல்லும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அதன் புனிதத்தைப் பாதுகாக்கின்றனரா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
இங்கு விஜயம் செய்யும் பலர், உண்மையான பக்திப்பரவசத்துடன் இந்த மலையைத் தரிசிக்கச் சென்றாலும் சிலர், இது ஓர் ஆன்மீகத் தலம் என்பதை மறந்து, இன்பமாகப் பொழுதைக் கழிக்கும் ‘உல்லாசபுரி’ என எண்ணிச் செயற்பட்டு விடுகின்றார்கள். சாதாரணமாகக் குடி, கூத்து என்று அவர்கள் பொழுதைக் கழிப்பதால், இதன் புனிதத் தன்மைக்கு பங்கம் ஏற்படுகின்றமையை எற்றுக்கொள்ள முடியாது.
அத்துடன், இப்போது உலகையே அச்சுறுத்தி, அச்சத்தை ஏற்படுத்தி வரும் பிளாஸ்டிக் கழிவுகள், உக்கும், உக்காத குப்பைகள் சிவனொளிபாதமலையை அண்டிய பிரதேசத்தில், குவிகின்றமையும் சுற்றாடலுக்குப் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும், இந்தச் சிவனொளிபாதமலையின் யாத்திரைக் காலம் நிறைவடைந்ததும், சுற்றாடல் அதிகாரிகள், அம்பகமுவ பிரதேசசபை மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து, இங்கு சேரும் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட கழிவுகளைத் தொன் கணக்கில் அகற்றுவதில் பாரிய சிக்கலை எதிர்நோக்குகின்றார்கள்.
இதற்கு சிறந்த உதாரணமாக, குறித்த பகுதியில் சேர்ந்த கழிவுகளினால் உருவான குப்பை மேடு ஒன்று கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி சரிந்து விழுந்ததைச் சுட்டிக்காட்டலாம்.
எனவே, சிவனொளிபாதமலைக்குச் செல்லும் யாத்திரிகர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், உக்காத பொருட்களைக் கொண்டு செல்வதை முற்றாகத் தவிர்ப்பதன் மூலம், இலங்கையின் அழகை, மிடுக்காய் எப்பொழுதும் பறைசாற்றும் வண்ணம் பாதுகாக்க முடியும். சிவனொளிபாதமலையின் புனிதத்தன்மையும் அழகும் மாட்சிமையும் குன்றாது எமது அடுத்த சந்ததியினரிடம் கையளிக்கும் பொறுப்பு, எம் அனைவரினதும் தலைமீது சுமத்தப்பட்ட பாரிய பொறுப்பாகும்.
Average Rating