சோப்பு வாங்கும்போது கவனிக்க வேண்டியது..!!
எனது மேனியழகுக்கு இந்த சோப்பு தான் காரணம் என்று விளம்பரத்தில் நடிகைகள் சொல்கிறார்கள். ஆனால், சோப்பின் வேலை உடலின் மீதுள்ள அழுக்குகளை அகற்றுவதும், வியர்வை துவாரங்களை அடைப்பின்றி வைத்திருப்பதும் ஆகும். வியர்வை துவாரங்கள் அடைப்பின்றி இருந்தால் தான் வியர்வை வழியாக கழிவுகள் வெளியேறும். இதன் மூலம் ரத்த ஓட்டமும் சுத்தமாகும்.
எனவே, சோப்பு போட்டு அழகாகிவிடலாம் என்பது வெறும் கற்பனையே. ஒரு சோப்பில் பல சேர்மானங்கள் உள்ளன. சருமத்தில் உள்ள அழுக்கை அகற்ற ஆல்கலி, கொழுப்பு அமிலம், மினரல் அமிலம், கிளென்சிங் கெமிக்கல்ஸ் போன்றவை கலந்து சோப் தயாரிக்கப்படுகிறது. சோப் வாங்கும்போது முக்கியமாக டி.எப்.எம், பி.ஹெச் அளவு, அதில் கலந்திருக்கும் ரசாயனங்கள் மற்றும் மூலப் பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
பொதுவாக, டி.எப்.எம். (டோட்டல் பேட்டி மேட்டர்) அளவைப் பொறுத்து, அதாவது அதில் சேர்க்கப்படும் தரமான கொழுப்பு எண்ணெய்யைப் பொறுத்து, சோப்பு தரம் பிரிக்கப்படுகிறது. பி.ஐ.எஸ். என்ற தர நிர்ணயத்தின்படி, மூன்று நிலை சோப்புகள் இருக்கின்றன. கிரேடு 1 என்பது 76 சதவிகிதத்துக்கும் அதிகமாக டி.எப்.எம் இருக்கும் சோப்பைக் குறிக்கும். இதன் விலை சற்று அதிகம்.
கிரேடு 2 என்பது 70-க்கு கீழ் டி.எப்.எம் கொண்டது. கிரேடு 3 என்பது 69 சதவிகிதத்துக்குக் குறைவான டி.எப்.எம் இருக்கும். குறைந்த விலைகளில் கிடைக்கும். 65 சதவீதத்திற்கும் குறைவான டி.எப்.எம். இருந்தால் அது தரம் குறைந்த சோப் எனப்படுகிறது. எனவே சோப் வாங்கும்போது டி.எப்.எம். அளவினை பார்த்து வாங்குங்கள்.
வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது. பெரியவர்கள் சிலர் பேபி சோப் எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்கு தங்கிவிடும். சருமத் துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது.
அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சோப் தயாரிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும். அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி பேபி சோப்பில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் பேபி சோப்பை பயன்படுத்த வேண்டாம். ஒரு நாள் ஒருமுறை மட்டுமே சோப்பை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும்.
பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது. அடிக்கடி முகத்தில் சோப் போட்டால், சருமம் வறண்டு போகும். சாதாரண சோப் ஒத்துக்கொள்ளாதவர்களும், சரும பிரச்சினை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப் வாங்குவதை தவிர்த்திட வேண்டும்.
Average Rating