ரீல் போலீசை பாராட்டிய ரியல் போலீஸ்..!!
கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். உண்மை கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ள இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக காவல் துறையில் பணியாற்றுபவர்கள் பாராட்டு கின்றனர்.
அந்த வகையில், சென்னை மாநகரத்தின் துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை பார்த்து, கார்த்தி மற்றும் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘ நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தை அது வெளியாகும் தேதியன்றே பார்த்துவிட பல காரணங்கள் இருந்தது.
முதலில் இது காவல்துறை அதிகாரிகளின் உண்மைக்கதை. தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த குற்றத்தடுப்பு நடவடிக்கை பற்றிய படம். படத்தின் பல கதாபாத்திரங்கள் இன்று காவல் பணியாற்றி வரும் எனது நண்பர்கள்.
தமிழகத்தில் 1995 முதல் 2005 வரை நடைபெற்ற நெடுஞ்சாலை கொள்ளைகளை தமிழக காவல் துறையினர் பல்வேறு இன்னல்களுக்கிடையே துப்புத்துலக்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயணம் செய்து கைது செய்வதே கதை.
ஒரு உண்மைக் கதையை (பவேரியா கொள்ளை கூட்டத்தை டிஜிபி ஜாங்கிட் IPS தலைமையிலான குழு கண்டுபிடித்து கைது செய்த நிகழ்வு) படமாக்க முன்வந்து அதனை மிக சுவாரசியமாக படமாக்கிய இயக்குநர் வினோத்திற்கு தமிழக காவல் துறை சார்பாக பாராட்டு பூங்கொத்து.
காக்க காக்க, சிங்கம் என காவல்துறை சார்ந்த படங்கள் மூலம் காவல்துறை அதிகாரி என்றால் சூர்யா தான் என்ற இடத்திற்கு தற்போது தீரன் கதாபாத்திரம் மூலம் கார்த்தி கடும் போட்டி கொடுக்கிறார். ஒரு நேரடி தேர்வு பெற்ற டிஎஸ்பி யை கண்முன் நிறுத்துகிறார். ஆர்பாட்டமில்லா ஆழமான நடிப்பு. கார்த்தியின் கச்சிதமான உடல் மொழிக்கும் நடிப்புக்கும் ஒரு ரிவார்டு பார்சல்.
இசை (ஜிப்ரான்) படத்தோடு இணைந்து பயணிக்கிறது. செல்லமே பாடல் உங்களை கொஞ்சி செல்லும். பின்னணி இசை மிக நேர்த்தி.
கதாநாயகி (ரகுல் பிரீத் சிங்) மற்றும் காதல் பகுதிகள் பகுதி மழை நேரத்து தேநீர் போல இதம். கேமரா காடு, மலை, மேடு, பாலைவனம் என அனைத்தையும் நம்மை உணர வைக்கும்.
பாலைவனத்தில் புழுதி பறக்க செல்லும் பேருந்து சண்டைக்காட்சி தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கொடூரமானவன் என்று மட்டும் சொல்லாமல் அதற்கான காரணத்தை மொகலாயர் காலத்தோடு சொல்வதில் படம் நெடுக இயக்குநர் மற்றும் குழுவினரின் ஹோம் ஒர்க்கை நாம் உணர முடியும். காவல் துறை காட்சிகளில் டீடெய்லிங் ரொம்ப பக்கா. (சதுரங்க வேட்டையை விட ஒரு படி மேலாக) வாழ்த்துகள் டைரக்டர் H. வினோத். இவர் படத்திற்கு நம்பிபோகலாம் என்ற வரிசையில் தமிழ் சினிமாவில் உங்கள் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகருக்கும் MS Dhoni திரைப்படம் எப்படி பிடித்ததோ அதுபோல ஒவ்வொரு காவலருக்கும் இத்திரைப்படம் பிடிக்கும்.
காவல் துறை உண்மை நிலையைும், சூழ்நிலை நெருக்கதல்களையும் சேர்த்து படமாக்கியது பாராட்டத்தக்கது. தமிழ் சினிமாவின் போலீஸ் படங்களில் தீரனுக்கு கட்டாயம் இடம் உண்டு.
தமிழக காவல்துறையில் தீரன்களும் அவர்தம் சாதனைகளும் அதிகம். எனவே தீரன் அதிகாரம் இரண்டுக்கு தமிழ்நாடு காத்திருக்கும்.
குறிப்பு – பவேரியா ஆப்ரேசனில் பங்கேற்ற நண்பர்கள் விழுப்பரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
என்றும் அன்புடன்
ச.சரவணன்
காவல் துணை ஆணையர்
தலைமையிடம்
சென்னை மாநகரம்.”
Average Rating