சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்..!!
சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பதே ரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர், தேவையற்ற நச்சுப்பொருட்கள் மற்றும் அதிகப்படியான தாது உப்புக்களை வடிகட்டி சுத்தம் செய்வதுதான். இந்த செயல்பாட்டின் போது சிறுநீரகத்தில் சில காரணங்களால் இந்த தாது உப்புக்கள் தங்கி படிமங்களாக மாறி விடும்போது ஏற்படுவதுதான் சிறுநீரகக்கற்கள், என்று கூறும் டாக்டர் கார்த்திக் குணசேகரன் சிறுநீரகக்கற்கள் சிறுநீரகத்தின் உள்ளயோ, சிறுநீரகக்குழாயிலோ (யுரீட்டர்) சிறுநீர்ப்பையிலோ (ப்ளாடர்) அல்லது சிறுநீர்க் குழாயிலோ (யுரீத்ரா) ஏற்படலாம்.
இக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சில வகை உணவு வகைகள், போதுமான தண்ணீர் அருந்தாமல் இருப்பது, நீரிழிவு போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இருப்பது, நீடித்த தொற்று இருப்பது போன்றவைகள் ஆகும். தண்ணீர் அதிகம் குடிக்காதபோது சிறுநீரின் நீர்ப்புத்தன்மை குறைந்து அதில் உள்ள உப்புகள் கெட்டிப்பட்டு சிறுநீர் பாதைகளில் தங்கிவிடலாம்.
சிறுநீர் பாதைகளில் அடிக்கடி தொற்று ஏற்படும்போதும் சிறுநீர் போக்கு தடைபட்டு அதனால் கற்கள் ஏற்படலாம். உணவு வகைகளில் அதிக கால்சியம் உள்ள காய்கறி மற்றும் பழவகைகள், உலர் பழங்கள், கொட்டை வகைகள், சாக்லேட், கோலா போன்ற காஃபைன் நிறைந்த பானங்கள், அதிக டீ போன்றவைகளும் கற்கள் தோன்ற காரணங்களாகும்.
சிறுநீரகக்கற்கள் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைப்பொருத்து அதன் அறிகுறிகள் இருக்கும். சிறுநீரகத்தின் உள்ளேயே இருக்கும்போது முதுகின் நடுப்பகுதியில் வலியும், அந்த வலி அடி வயிறு மற்றும் தொடை இடுக்கு வரையில் பரவுவதாக இருக்கும். இந்த வலி பொருத்துக் கொள்ளும் அளவில் தொடர்ந்து நீடித்து இருக்கும்.
இக்கற்கள் சிறுநீரகத்திலிருந்து சிறுநீரகக்குழாயில் இறங்கத் தொடங்கினாலும், அடைத்துக் கொண்டாலோ அதே வலி, வாந்தி, அதிக வியர்வை, மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு போன்றவை ஏற்படும். கற்கள் அடைத்துக் கொண்டு சிறுநீர் கீழே இறங்காமல் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் சிறுநீர் தாரையில் தொற்று ஏற்படலாம்.
கற்கள் சிறுநீர் குழாயின் சுவரில் உராய்வதால் ரத்தக்கசிவு ஏற்பட்டு சிறுநீரில் ரத்தம் வரலாம். தொற்று ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, அடிவயிற்றில் வலி, குளிர் மற்றும் ஜுரமும் ஏற்படலாம். சிறுநீரின் நிறம் வெண்மையாகவும், கலங்கலாகவும், அடர் மஞ்சள் நிறமாகவும், சிவப்பு நிறமாகவும் இருக்கலாம். சிறுநீரில் தொற்று இருந்தால் துர்நாற்றம் ஏற்படலாம். கற்கள் முழுவதுமாய் அடைத்திருந்தால் சிறுநீரே வராமலும் இருக்கலாம்.
சிறுநீரக கற்களுக்கான சிகிச்சைகள் எனப்பார்க்கையில் பலமுறைகள் இருக்கிறது. உள்நுழையாத சிகிச்சை முறையான இஎஸ்டபிள்யூ என்பது சவுண்ட் வேவ் மூலமாக சிறுநீரகத்திலிருந்து கீழே இறங்க முடியாத பெரிய அளவில் உள்ள கற்களை உடைக்கும் முறையாகும். குழாயில் அடைத்திருக்கும் கற்களையும் கூட இம்முறையில் சிறு துகள்களாக உடைத்து சிறுநீரில் வெளியேறிவிட உதவலாம். அடுத்தது ஃப்லெக்சிபிள் யூரிட்ரோஸ்கோப் என்ற மடங்கக்கூடிய டெலஸ்கோப் கருவியை சிறுநீர் பாதை மூலமாக உட்செலுத்தி சிறுநீர் குழாய், சிறுநீர்பை, சிறுநீரகக்குழாய் மற்றும் சிறுநீரகத்தின் எந்தப் பகுதியில் கல் இருந்தாலும் அதை நீக்க முடியும்.
அடுத்ததாக பிசிஎன் என்பது மிகப்பெரிய அளவுள்ள கற்கள், மிகப் பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு, முள்ளு முள்ளான பெரிய கற்கள் இருக்கும்போதும், மற்ற முறைகள் பயனளிக்காத போதும் செய்யக்கூடிய முறையாகும். இதில் நேரடியாக கற்கள் உள்ள பகுதிக்கு நேராக ஒரு துவாரம் இட்டு அதன் மூலம் கருவியை உட்செலுத்தி நேரடியாக கற்களை அகற்றுவது.
இதை கைதேர்ந்த அனுபவமுள்ள மருத்துவர்கள் மட்டுமே செய்ய முடியும். இந்த எல்லா முறைகளிலுமே லேசர் பீமைக்கொண்டு கற்களை துல்லியமாக கண்டறிந்து உடைக்க முடிகிறது. இதில் ரத்தப்போக்கு இருக்காது. குணமாகும் காலமும் குறைவாக இருக்கும் என்று கூறி முடித்தார் டாக்டர் கார்த்திக் குணசேகர்.
Average Rating