கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!!

Read Time:10 Minute, 16 Second

ஆண் – பெண் இருவரையும் அன்பு என்பதைத் தாண்டி இன்னொரு முக்கிய விஷயமும் இணைத்து வைக்கிறது. கோபம், வெறுப்பு, சிந்தனைகளில் மாறுபாடு இவற்றைக் கடந்து இருவரையும் இணைபிரியாது வைத்திருக்கும் அந்த ரகசிய மந்திரம் தாம்பத்யம்.திருமண காலத்தில் தொடங்கி, வயோதிகம் வரையிலும் அந்த இரு மனங்களுக்கும் இடையில் அன்பின் பசை உலர்ந்து விடாமல், ஈர்ப்பு விசை குறைந்திடாமல் காப்பதில் பாலின்பம் மிகப்பெரும் பங்கு வகிக்கிறது.

இது எல்லாக் காலங்களிலும் எல்லாருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. திருமணமான முதல் நாளில் இருந்து தாம்பத்யத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆணும் பெண்ணும் பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்கின்றனர். தலைவலி, காய்ச்சல் என்றால் வீட்டில் உள்ள எல்லோரும் அவர்களுக்கு உடனடியாக உதவ முன் வருவார்கள். நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, ‘இந்த மாத்திரை சாப்பிடலாம்’ என்று பரிந்துரையும் செய்வார்கள்.

ஆனால், பாலியல் ரீதியான பிரச்னைகளை தன்னளவில் புரிந்து கொள்வதே இன்றும் கடினமான விஷயமாக உள்ளது. முன்பு கூட்டுக்குடும்பமாகவும் வாழ்ந்து வந்தோம். பெரியவர்கள் இலைமறை காயாகவாவது ஆலோசனை சொல்வார்கள்; வழிகாட்டுவார்கள். இப்போது கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே கூட்டுக்குடும்பம் என்று ஆகிவிட்டது. இருவரும் வீட்டுக்குள் இருந்தாலும் ஒருவர் தொலைக்காட்சியிலும், இன்னொருவர் மொபைலிலும் பிஸியாக இருக்கிறார்கள்.

வரலாற்றில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்குத் தகவல் தொடர்பு சாதனங்களில் அசுர முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். ஆனால், அதே அளவுக்கு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒருவருக்கொருவர் முகம் கொடுத்துக் கூட பேசிக் கொள்ள முடியாத அளவு தனிப்பட்டுத் தீவாகவும் கிடக்கிறோம். இப்படி ஒரு இக்கட்டான சூழலில் பாலியல் குழப்பங்களை யாரிடம் சென்று கேட்பது?

நமக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்று மனம் சொன்னாலும் அதை வெளியில் சொல்லத் தயக்கம். இப்படி ஒரு பிரச்னை எனக்கு இருக்கிறது என்பதை வெளியில் சொன்னால் இந்த உலகம் தன்னைப் பற்றி என்ன நினைக்கும் என்பது போன்ற அச்சம் உண்மை நிலையை வெளியில் சொல்ல முடியாமல் தடுக்கிறது.

இதனால் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. இதுவே, மன அழுத்தமாக மாறி அந்த கணவன் மனைவிக்குள் பிரச்னைகளை உருவாக்கும். தன் கணவனை முழுமையாக திருப்திப்படுத்த முடியாவிட்டால் இதற்காக வேறு ஒரு பெண்ணை நாடி விடுவாரா என்ற கேள்வி பெண்ணை படுத்தி எடுக்கும். இது வேறு வகையில் சண்டையாகவும், சந்தேகமாகவும் வெடிக்கும்.

இதேபோல் ஆண் பாலியல் ரீதியான பிரச்னைகள் தனக்கு இருப்பதை ஒப்புக் கொள்ளாமல் கெத்து காட்டுவதுண்டு. இப்படி ஒரு பிரச்னை தனக்கு இருப்பதை ஒப்புக் கொண்டால் மனைவி எப்படி தன்னை மதிப்பாள்?

தன்மீது உள்ள மதிப்பு, மரியாதை, பயம் எல்லாம் போய்விடுமே… இப்படியான எண்ணங்கள் ஆணை தாழ்வு மனப்பான்மையில் தள்ளும். வீட்டில் மட்டுமின்றி வேலையிடத்திலும் இதனால் திறன் குறையும். அதுவே பல்வேறு குழப்பங்களுக்கும் காரணம் ஆகிவிடுகிறது.

இவற்றோடு இன்றைய பரபர வாழ்க்கைச் சூழலில் வீடு, வேலை என்று இரண்டு இடங்களிலும் ஆணும், பெண்ணும் டென்ஷனை சுமந்து அலைகின்றனர். பொருளாதார நெருக்கடிகள், உறவுச்சிக்கல் என்று மனதில் இத்தனை சுமைகளை வைத்துக்கொண்டு கட்டிப்பிடிக்கவும் காதல் கொண்டாடிடவும் முடிவதில்லை.

பொருளாதார சுமையின் காரணமாக கணவனும், மனைவியும் வெவ்வேறு ஊர்களில் பணியாற்றுவதும், இதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. தாம்பத்யத்துக்கான மனநிலையையும் சூழலையும் தகர்க்கும் பல விஷயங்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.

பாலியல் பிரச்னைகளுக்குத் தீர்வு தேடி வெளிப்படையாக யாரிடமும் ஆலோசனை பெற முடியாத நிலையில் இணையதளங்கள், புத்தகங்கள் என்று எதைத் தேடிப் போனாலும் படிக்கும்போதே கிளர்ச்சி அடையச் செய்யும் விஷயங்களே அதில் அதிகம் கொட்டிக் கிடக்கின்றன.

இதனால் உணர்வுகள் தூண்டப்படுமே தவிர அதில் பிரச்னைக்கான புரிதல் சிறிதும் கிடைப்பதில்லை. களிம்புகள், கேப்சூல்கள் என்று ஏதாவது ஒன்றை விற்பனை செய்யும் இடமாகவே பெரும்பாலும் இணையதளங்களும், தொலைக்காட்சிகளும் அமைந்துள்ளது.

பத்திரிகை விளம்பரங்களிலும் தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் விதமான மசாஜ் சென்டர்கள், போலி மாற்று மருத்துவ மருந்துகளுமே விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட மாந்திரீக வைத்தியரிடம் தகடு வாங்கிக் கட்டிக் கொண்டால் போதும் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் இரவு 11 மணிக்கு மேல் தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தரப்படும் விளக்கங்களும் இதே வகையாகவே உள்ளது.

ஒரு மாற்று மருத்துவர் மற்றும் அவர் அருகில் சொல்வதற்கெல்லாம் சிரிப்பதற்கு கவர்ச்சியாக உடையணிந்த ஒரு பெண்ணையும் வைத்துக்கொண்டு செக்ஸ் மருத்துவத்துக்கு விளக்கம் அளிப்பதும் ஒரு வித வியாபாரமாகவே உள்ளது.

விளம்பரங்களைப் பார்த்து களிம்பு, மாத்திரை போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்துபவர்கள் இவற்றையெல்லாம் ரகசியமாகவே மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட மருந்தால் பின் விளைவுகள் ஏற்பட்டாலும் இது குறித்து புகார் அளிப்பதற்கும் ஆளில்லை.

செக்ஸ் சார்ந்த மருத்துவம் என்பதால் அவர்கள் கட்டணம் என்ற பெயரில் பெரும் தொகையை சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து பெற்றும் விடுகின்றனர். இதுபோன்ற மருத்துவர்களிடம் மருந்து வாங்கி ஏமாந்தவர்களே அதிகம்.

தலைவலி காய்ச்சலைப் போல பாலியல் குறைபாடுகளும், குழப்பங்களும் ஒரு உடல் பிரச்னையே என்ற புரிதல் இன்மையால் இது மனப்பிரச்னையாகவும், மானப் பிரச்னையாகவும் வளர்ந்து நிற்கிறது.

அறியாமை, உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள், இதயநோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ப்ரீ மென்சுரல் சிண்ட்ரோம், ப்ரீ மெனோபாஸ் சிண்ட்ரோம், தைராய்டு, வியர்வை நாற்றம், நரம்புத் தளர்ச்சி, கர்ப்ப காலம், பிரசவம் என்று உடலில் உள்ள வேறு ஏதோ ஒரு உடல் நலக்குறைபாட்டின் காரணமாகவும் தாம்பத்ய உறவில் சிக்கல்கள் தோன்றலாம்.

வெளியில் சொல்லவே வெட்கப்படும் பலருக்கும் இந்தத் தொடர் மனம் விட்டுப் பேசுவதற்கு கற்றுக் கொடுக்கும். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு உடலில் உள்ள வேறு நோய்கள் காரணமாக இருப்பின் அவற்றைப் புரிந்து கொள்ள உச்சி முதல் உள்ளங்கால் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் மருத்துவ நிபுணர்கள் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

பாலியல் சந்தேகங்கள், தாம்பத்ய பிரச்னைகளை இதுவரை ரகசியமாக அணுகிய நாம் இனி அறிவியல்பூர்வமாக வெளிப்படையாகப் பேச இருக்கிறோம். இது சார்ந்த மருத்துவ உண்மைகள், ஆய்வுகள், துறை சார்ந்த நிபுணர்களின் விளக்கங்களைக் கொண்டு மக்கள் மனதில் உலவும் கட்டுக்கதைகளை கட்டவிழ்க்க உள்ளோம்…ஒரு புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்..!!
Next post வீட்டிலேயே முகத்திற்கு மசாஜ் செய்வது எப்படி?..!!