விஜய் அரசியலில் குதிப்பாரா? எஸ்.ஏ.சந்திரசேகரன் பேட்டி..!!
தமிழக ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக நடிகர் விஜய் உள்ளார். அவருக்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் விஜய் நடித்த புதிய திரைப்படங்கள் வெளிவரும்போது ரசிகர்கள் எந்தளவுக்கு அதை கொண்டாடுகிறார்களோ அதே போல கேரள ரசிகர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிவிடுவார்கள்.
சமீபத்தில் விஜய் நடித்து வெளியாகி உள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ஜி.எஸ்.டி. வரி மற்றும் மருத்துவத்துறையில் நடக்கும் மனிதாபிமான மற்ற செயல்கள் பற்றி நடிகர் விஜய் பேசும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.
இதற்கு பாரதீயஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த படமும் வசூல் சாதனைபடைத்து வருகிறது. கேரளாவிலும் ‘மெர்சல்’ படம் அதிக திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
கேரளாவில் ‘மெர்சல்’ படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் பெரிய டிஜிட்டல் பேனர்களை வைத்தும், அலங்காரம் செய்தும் கொண்டாடி வருகிறார்கள்.
திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீநாத் (வயது 22) என்பவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இவர் விஜய் படம் வெளியாகும்போது அவருக்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்யும் அளவுக்கு விஜய் மீது அன்பு கொண்டவர்.
இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி ஸ்ரீநாத் பலியானார். அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது என்பதால் அவர்களுக்கு ஸ்ரீநாத்தின் இழப்பு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் விபத்தில் ரசிகர் பலியான தகவல் அங்குள்ள மன்ற நிர்வாகிகள் மூலம் நடிகர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ரசிகர் பலியானது விஜய்யை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உதவி செய்ய அவர் தனது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கேட்டுக்கொண்டார்.
இதைதொடர்ந்து டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் திருவனந்தபுரம் சென்று ஸ்ரீநாத்தின் பெற்றோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி விஜய் சார்பில் நிதிஉதவியை வழங்கினார். எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்து உள்ள தகவல் அங்கு பரவியதும் ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு திரண்டனர்.
மேலும் நிருபர்களும் அங்கு சென்றனர். அவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் நடிகர் விஜய் அரசியலில் குதிப்பாரா? என்பது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:-
விஜய்யின் அரசியல் முடிவு பற்றி எனக்கு தெரியாது. அவர் தற்போது சினிமாவில் நல்ல நடிகராக உள்ளார். அவர் நடித்து வெளியாகி உள்ள ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றி இடம் பெற்றுள்ள வசனம் மற்றும் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அந்த எதிர்ப்புகளை தாண்டி ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating