ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்..!!
ஒரு வேலையில் தொடர்ந்து தொல்லை ஏற்பட்டால், அதனை பெரிய தலைவலியாக போய் விட்டது என்பார்கள். அந்த அளவிற்கு தலைவலி தொல்லை கொடுப்பதால் தான் அதனை உதாரணமாக கூறும் பழக்கம் வந்தது. தலைவலி என்பது பொதுவான ஒரு நோய். அதனை பெரிதுபடுத்துபவர்களும், அலட்சியப்படுத்திவிட்டு அடுத்த வேலையை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்.
தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி வருவதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்பது ஆச்சரியமான தகவல். ஒவ்வொருவரின் நடைமுறை வாழ்க்கை, பழக்க வழக்கங்களை பொறுத்து ஒற்றை தலைவலி தாக்குகிறது என மருத்துவம் கூறுகிறது. இதனை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில், பரம்பரையாகவும் இந்நோய் மனிதனை தாக்குகிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய ஒற்றை தலைவலியின் தாக்குதலில் இருந்து தப்பித்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அதிகாரி பிரபாகரன் கூறியதாவது:-
ஒற்றை தலைவலி நரம்பியல் தொடர்பான ஒரு நோய். மூளையில் ஏற்படும் ஒரு நிகழ்வின் தாக்கமே ஒற்றை தலைவலி ஆகும். ஒரு சிலருக்கு தலைவலி ஏற்பட்டால் 72 மணி நேரம் கூட நீடிக்கும். இந்நோய் தாக்குவதற்கு, மூளையில் செரோட்டோனின் மற்றும் 5-ஐடிரக்சி டிரப்டமைன் என்ற ஹார்மோன்களில் ஏற்படும் மாறுபாடே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஹார்மோனில் சுரக்கும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும்போது சமிக்கை கடத்தி நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி ஏற்படுகிறது.
இதுதவிர, தலையில் புண், சீழ்பிடித்தல், கழுத்து, தலையில் ஏற்படும் தலை பிடிப்பு, மூளை ரத்தக்குழாய் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படும். இதுதவிர மெல்லுதல், அதிகமாக பேசுதல், பல் துலக்குதல், குளிர்ந்த நீரில் முகம் கழுவுதல் போன்ற எது வேண்டுமானாலும் தலைவலியை தூண்டலாம்.
கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவந்து போதல் போன்ற பார்வை குறைபாடு, கண்ணில் காயம் ஏற்படுவதாலும் வரலாம். காதின் மையப்பகுதி நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் கழுத்து வலி மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு. கண்களுக்கு கீழே உள்ள எலும்புகளில் நீர் கோர்த்தாலும் தலைவலி ஏற்படும்.
பல்லில் அடிபட்டாலும், நோய் தொற்றுகளாலும் தலைவலி வர வாய்ப்புண்டு. தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறைவதாலும் தலைவலி வரும். அதற்குரிய ஹார்மோன் சிகிச்சையை மேற்கொண்டால் தலைவலி போய்விடும். இதுதவிர அதிக சத்தம் மற்றும் வெயிலில் சுற்றுவதாலும் வரும்.
கடுமையாக உழைத்தால் அதற்குரிய வகையில் உணவு உட்கொள்ளுதல், ஓய்வு எடுக்க வேண்டும். போதிய அளவு உணவு உட்கொள்ளாமை, தேவையான அளவு ஓய்வு எடுக்காமல் போனாலும் தலைவலி ஏற்படும். உடல்சூடு, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களாலும், மன அழுத்தம் ஆகியவற்றாலும் வரலாம்.
உயர் ரத்த அழுத்தம், மூளை அழற்சி, மூளைக்கட்டிகளின் அறிகுறியாகவும் ஒற்றை தலைவலி வரும். மூளைக்கு குளூக்கோசும், பிராணவாயுவும் தான் உணவு. அவை செல்லும் பாதை நரம்பில் அடைப்பு ஏற்பட்டாலும் தலைவலி வரும். அதுமட்டுமின்றி தலைக்கு செல்லும் நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபட்டாலும் ஒற்றை தலைவலி வரும்.
மது அருந்துதல், புகையிலை உள்பட போதை பழக்கத்தினாலும் தீராத ஒற்றை தலைவலி ஏற்படும். காற்று குறைவான அறைகளில் உறங்கினாலும், படுக்கும் முறைகளை அடிக்கடி மாற்றுவதாலும், சில வகை கீரைகள், பாலாடைக்கட்டி, சாக்லெட், ஐஸ்கிரீம், தயிர், வினிகர், கேக் வகைகள் இவற்றை உண்பதாலும் ஒற்றை தலைவலி வரலாம்.
இதுதவிர எண்ணெய் குளியல், விரதம் இருத்தல், தலைக்கு சாயம் பூசுதல், வித, விதமாக அணியும் கண் கண்ணாடிகள், வாசனை திரவியங்களை பூசிக்கொள்ளுதல், சில வகை மாத்திரைகளை உண்பது போன்றவை உள்பட, ஒற்றை தலைவலி வருவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. இதுதவிர இன்னும் அறியப்படாத காரணங்களும் உண்டு.
பெண்களை பொறுத்தவரை, மாத விலக்கு சமயங்களில் ஒற்றை தலைவலி வரக்கூடும். சில பெண்களுக்கு தலையில் வாசனை அதிகமிக்க பூக்களை வைத்தாலே தலைவலி வந்துவிடும். வாசனை திரவியங்களும் சிலருக்கு ஆகாது. ஆண்களை விட பெண்களைத்தான் ஒற்றை தலைவலி அதிகம் தாக்குகிறது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. ரத்தசோகை ஏற்பட்டாலும் தலைவலி தாக்கும்.
பொதுவாக 40 வயதுக்கு மேல் இருபாலருக்கும் ஒற்றை தலைவலி தாக்கும் வாய்ப்பு அதிகம். இன்றளவில் வயது வித்தியாசமின்றி அனைவரையும் இந்நோய் தாக்குகிறது. குழந்தைகளை ஒற்றை தலைவலி தாக்குமானால், சத்து குறைபாடு, பார்வை குறைபாடு மற்றும் அது பரம்பரை சார்ந்த குறைபாடுகளாலும் ஏற்படும்.
இரவு தூக்கத்தை தவிர்க்கக் கூடாது. அவ்வாறு தூங்கப்போகும் நேரத்தையும், விழித்து எழும் நேரத்தையும் கண்டிப்பாக திட்டமிட வேண்டும். முறையான சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும். நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது நல்லது. தலைவலியை தூண்டும் காரணிகளை அவரவர் கண்டறிந்து அதனை தவிர்க்க வேண்டும்.
பெரும்பாலும், ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை எடுத்தால் ஒற்றை தலைவலியை சரி செய்து விடலாம். அதிக தலைவலியால் சிலர் வலி மாத்திரைகளை உட்கொள்வார்கள். அது முற்றிலும் தவறு. அவ்வாறு வலி மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வது வேறு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒற்றை தலைவலியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating