வெளிநாட்டினரை ஈர்க்கும் இந்திய பழக்கங்கள்..!!
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரை நமது கலாசாரமும், பழக்க வழக்கமும் வெகுவாக கவருவதோடு அதனை பின்பற்றவும் செய்து விடுகிறது. தங்கள் நாட்டிற்கு திரும்பிய பிறகு நம்முடைய நாட்டு பழக்கவழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு வெளிநாட்டவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
வெளிநாட்டினரை பின்தொடர வைக்கும் பழக்கவழக்கங்களில் விருந்தோம்பல் முக்கிய இடம் வகிக்கிறது. அத்துடன் உணவு வகைகளை சாப்பிடும் முறையும், டீ, காபியை ருசிக்கும் விதமும் அவர்களை ஆச்சரியப்படவைக்கிறது. வெளிநாட்டினர் உணவுகளை கைகளில் பிசைந்து சாப்பிடமாட்டார்கள். கரண்டிகளில் எடுத்துதான் சுவைப்பார்கள். இங்கு சுற்றுலா வருபவர்கள் நம் நாட்டவரை போலவே கையால் உணவு பதார்த்தங்களை ருசிக்கிறார்கள். வாழை இலை சாப்பாடும் அவர்களை ஈர்க்கிறது.
அதுபற்றி ஆஸ்திரேலியாவை சேர்ந்த சோமர் ஷீல்ஸ் என்ற பெண்மணி சொல்கிறார்:
“நான் எப்போதும் கரண்டியால்தான் சாப்பிடுவேன். அதனால் சாப்பிடும் முன்பு கைகளை கழுவ மாட்டேன். இந்தியாவுக்கு வந்த பிறகு சாப்பிட தொடங்குவதற்கு முன்பு கைகளை கழுவுவதை வழக்கமாக்கிகொண்டுவிட்டேன். கைவிரல்களால் சாப்பிடுவது புது அனுபவத்தையும், வித்தியாசமான சுவையையும் கொடுக்கிறது. கைகளை கழுவிவிட்டுதான் சாப்பிட வேண்டும் என்று மற்றவர்களுக்கும் உபதேசம் செய்யத்தொடங்கிவிட்டேன்” என்கிறார்.
வெளிநாட்டினர் பலரும் காலை எழுந்ததும் டீ, காபி குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளவும் தொடங்கி விட்டார்கள். அவர்களுக்கு சிறிய தட்டுடன் இணைந் திருக்கும் கப் அண்ட் சாசரில் டீ பருகுவது ரொம்பவே பிடித்திருக்கிறது. அந்த தட்டில் டீயை உற்றி மிதமான சூட்டில் ருசிக்கிறார்கள்.
“சிறிய சாசரில் டீயை ஊற்றி அருந்துவது நாவிற்கு இதமாக இருக்கிறது. இதற்கு முன்பு டீ குடிக்கும்போதெல்லாம் நாக்கில் சூடு பரவி சிரமப்படுவேன். டீயை ருசித்து பருக முடியாது. இங்கு சாசரில் டீயை ஊற்றி ஆற வைத்து ருசிப்பது ரொம்ப பிடித் திருக்கிறது” என்கிறார், சோமர்.
வீட்டுக்குள் செல்லும்போது வாசலில் செருப்பு, ஷூக்களை கழற்றி விட்டு செல்லும் கலாசாரத்தையும் அவர்கள் வரவேற்கிறார்கள்.
“இது ஒரு அற்புதமான பழக்கம். தெருவில் நடக்கும்போது காலணிகளில் எந்த அளவிற்கு அழுக்குபடியும் என்பதை உணராமலேயே இதுநாள் வரை இருந்துவிட்டேன். இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் வாசலிலேயே என்னுடைய ஷூவை கழற்றிவிடுகிறேன்” என்கிறார், நியூசிலாந்தை சேர்ந்த பென் விஸ்.
இந்திய கலாசார உடைகளும், அதில் இடம்பெறும் நிறங்களின் கலவையும்கூட வெளிநாட்டவரை கவர்ந்திருக்கிறது. அடர் நிறங்களை கொண்ட உடைகளை அணிவதற்கும் ஆசைப்படுகிறார்கள். அமெரிக்காவை சேர்ந்த ராஷல், “எனக்கு வெளிர் மஞ்சள் நிற உடைகள்தான் ரொம்ப பிடிக்கும்.
அமெரிக்க பேஷன் உலகிலும் அதற்கு தான் பிரதான இடம். இங்கு அடர் நிறத்திலான உடைகளை அணிந்திருக்கும் பெண்களை பார்த்ததும் எனக்கும் அந்த உடைகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. அடர் மஞ்சள் நிறத்துடன் வேறு வண்ணங்கள் கலந்த சல்வார் கமீசையும், துப்பட்டாவையும் விரும்பி அணிகிறேன். அடர் சிவப்பு, நீல நிறத்திலான புடவைகளை உடுத்த ஆசைப்படுகிறேன்” என்கிறார்.
Average Rating