கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் பிரச்சினைகள்..!!

Read Time:9 Minute, 3 Second

மனிதனின் உள் உறுப்புகளான, இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை போன்று, கல்லீரலும் மிக முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரலின் செயல்பாடுகளும், அதன் பணிகளும் இன்றியமையாததாக இருக்கிறது. நோய் தாக்கி பாதிக்கப்படும் போதும், தன்னைத்தானே அது புதுப்பித்து கொள்ளும் என்னும் செய்தி வியப்பாக இருக்கிறது.

கல்லீரலுக்கு, ஈரல் என்னும் பெயர் உண்டு. இப்பெயர் இலங்கை நாட்டின் வழக்கு சொல்லில் இருந்து வந்தது என்று கூறுவர். கல்லீரல் செய்யும் பணிகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. இருப்பினும் குறைந்தபட்சம் 500 வகையான செயல்பாடுகளை செய்து வருகிறது என ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

இத்தகைய சிறப்பு பெற்ற கல்லீரலைப்பற்றியும், அது பாதிக்கப்பட்டால் ஏற்படும் நோய்கள் பற்றியும், அதன் தடுப்பு முறைகளையும் தெரிந்து கொள்வோம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:-

முதுகெலும்புள்ள உயிரினங்கள் மற்றும் வேறு சில விலங்குகளிலும் காணப்படும் முக்கிய உறுப்பு கல்லீரல். மனிதர்களின் மார்பு கூட்டுக்கு வலது புறத்திலும், வயிற்றறைக்கு வலது மேல் பக்கத்திலும், நெஞ்சறையையும், வயிற்றறையையும் பிரிக்கும் இடை திரை சதைக்கு கீழாகவும், பெரிய அளவில் கல்லீரல் இருக்கிறது.

கல்லீரலுக்கு கீழே பித்தப்பையும், இடது புறமாக இரைப்பையும் இருக்கின்றன. உடலில் உள் உறுப்புகளில் கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இந்த கல்லீரல், அதிக நீர்மம் சுரக்கும் சுரப்பியாக உள்ளது.

உடலின் உட்புற சூழலை கட்டுப்படுத்தி சமன்படுத்துதல், வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுவது, புரத தொகுப்பு மற்றும் செரிமானத்துக்கு தேவையான உயிர் வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல், கிளைக்கோஜன் சேமிப்பை முறைப்படுத்துதல், ரத்த சிவப்பணுக்களின் சிதைவு, ஹார்மோன் உற்பத்தி ஆகியவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கல்லீரல் ஒரு சுரப்பி என்பதால் துணை செரிமான சுரப்பியாக பித்தநீரை உருவாக்குகிறது. இதுதவிர சிறு, சிக்கலான மூலக்கூறுகளை தொகுத்தல், சிதைத்தல், மிகமுக்கியமான உயர் அளவு உயிர் வேதியியல் வினைகளை ஒழுங்குபடுத்துதல் உள்பட பரவலான பல்வேறு செயல்பாடுகளை கல்லீரல் செய்து வருகிறது.

கல்லீரல், தான் இழந்த பகுதிகளை இயற்கையாக மீண்டும் உருவாக்கி கொள்ளும் தன்மை கொண்டது. அந்த வகையில் 75 சதவீதம் இழந்தாலும் தன்னை மீண்டும் வளர்த்துக்கொள்ளும். அதுவே இதன் சிறப்பு. இத்தகைய சிறப்பு பெற்ற கல்லீரல், இன்றியமையாத பணிகளுக்கு இடையே கிருமிகளின் தாக்கத்தால் நோய் தாக்குதலுக்கு நேரிடுவதும் உண்டு.

கல்லீரலில் உள்ள உயிரணுக்கள் பாதிப்படையும் போது, ரத்தத்திலும், கேளா ஒலி அலை மூலமும் இதன் நோய் தாக்கத்தை அறியலாம். கல்லீரலின் திசு அணுக்கள் வீக்கம் அடைவதால் கல்லீரல் வீக்கம் அடையும். இதுவே கல்லீரல் பாதிப்படைந்ததற்கான அறிகுறி. அது முடிந்தவரை தன்னைத்தானே சரி செய்து கொள்ளும். இருப்பினும், தொடர்ந்து 6 மாதத்திற்கு மேல் வீக்கம் இருந்தால் அது கல்லீரலில் கடுமையான பாதிப்பை உருவாக்கும்.

கல்லீரலில், இழை நார் வளர்ச்சி என்பது ஒரு நோய். இந்த நோயாளிகளின் கல்லீரல் திசுவானது, சேதமடைந்த திசுவை மீண்டும் உருவாகும் செயல்முறையில் ஏற்படும் கட்டிகள் போன்றவை கல்லீரல் செயல் இழப்பிற்கு வழி வகுக்கிறது. கல்லீரலில், இழை நார் வளர்ச்சி என்பது குடிப்பழக்கம், அதிகமாக எண்ணெய் வகை உணவுகளை உண்பதால் ஏற்படும் கெட்ட கொழுப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருத்தல், உடலில் அதிகளவு அம்மோனியா உற்பத்தி ஆவதால் வாயில் இருந்து வீசும் கடுமையான துர்நாற்றம், சருமத்தில் பாதிப்பு, குறிப்பாக கண்களை சுற்றி சுருக்கம், கருவளையம் தோன்றுதல், தோல் நிறமிகள் நிறமிழந்து தோலானது திட்டு, திட்டாக வெள்ளையாக காணப்படுதல், உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளின் நிறம் அடர்த்தியாக மாறுதல், ஆகியவை அதன் அறிகுறிகளாகும்.

கண்ணின் வெண்பகுதி மஞ்சள் நிறமாக காணப்பட்டாலும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினாலும் அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அப்போது கல்லீரல், ‘பைல்‘ எனும் நொதியை அதிகளவு உற்பத்தி செய்யும். அதனால் வாயில் அதிக கசப்பு தன்மை ஏற்படும். வயிற்றின் அடிப்பகுதி வீக்கம், தொடர்ந்து மஞ்சள் காமாலை இருந்தால் அது புற்றுநோய் தாக்குதலாக கூட இருக்கலாம்.

மேலும், பசியின்மை, உடல் சோர்வு, எடை குறைதல், ரத்தவாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகளும் காணப்பட வாய்ப்புண்டு. இதில் ஒரு சோகம் என்னவென்றால், கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை அதன் அறிகுறிகள் நமக்கு தெரிவதில்லை.

கல்லீரலை நோய் கிருமிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும் போது, மூளைக்கோளாறு, அதன் செயல் இழப்பால் மனக்குழப்பம், சுய உணர்வுநிலை தடுமாறுதல், கோமா நிலை போன்றவைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்நிலையில் மரணம் நேர வாய்ப்பு அதிகம்.

பிறக்கும் குழந்தைகளுக்கும், ‘என்சைம்‘ கோளாறுகளால் கல்லீரல் பாதிக்கப்படுவதுண்டு. கல்லீரல் நோய்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகளும் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் அதற்கு ஒரே தீர்வு ஆகும்.

கல்லீரலின் ஆரோக்கியம் காக்க, கீரை வகைகள், பூண்டு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டும். பீட்ரூட்டில் இருக்கும் பீட்டாகரோட்டின் எனும் சத்து இரைப்பையின் செயல்திறனை அதிகரிக்கும். தேன், கல்லீரலில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிக்கும். தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்தால், அதில் இருக்கும் நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை அளிக்கும்.

அதேபோல் ‘கிரீன் டீ’ கல்லீரலின் சீரான இயக்கத்துக்கு துணை புரியும். ஸ்ட்ராபெரி பழங்கள் கல்லீரலில் இருக்கும் தாதுப்பொருட்களுக்கு நலம் சேர்க்கும். எனவே சத்தான, எளிதில் செரிக்கும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்களை உண்பது உடலுக்கு எப்போதும் நன்மை அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு..!!
Next post பரீட்சைக்கு பயந்து 2ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..!!