காது, மூக்கு, தொண்டை பிரச்சினைகள் – தீர்வுகள்..!!
பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகிய 5 புலன்களும் மனிதனுக்கு முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. இதில், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று பாதித்தாலும் மற்றவை பாதிக்கும். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.
காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் குறிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் நோய் தாக்குதலுக்கு ஆளானோர் பலர். இதன் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்குமார் கூறியதாவது:-
மூக்கு சவ்வு விலகுதல், மூக்கின் சில்லு தள்ளி இருத்தல், மூக்கின் வால்வு சுருங்கி விரிதல், மூக்கு, தொண்டை பகுதியில் அடைப்பு ஏற்படுதல் போன்றவைகளால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில் வீக்கம், மற்றும் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரக்கும்.
இதனால் மூக்கடைப்பு ஏற்படும். அதன்பிறகு கண், காது, மூக்கு, தொண்டை இவற்றை பாதித்து அதிகமாக நீர் சுரக்கும். இதுதவிர சிலருக்கு மூச்சிரைப்பு, வாசனைகளை அறிய முடியாமை, காதடைப்பு, ‘சைனஸ்‘ போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பொதுவாக வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி தொல்லை ஒரு வாரத்துக்குள் சரி ஆகிவிடும். அதற்கு மேல் பிரச்சினை நீடித்தால் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்.
பொதுவாக, பூக்கள் அதிகமாக பூக்கும் ‘சீசன்‘ மாதங்களில் காற்றில் மகரந்த துகள்கள் பறந்து கொண்டிருக்கும். சுவாசிக்கும் போது அவை அலர்ஜியை ஏற்படுத்தும். மெத்தை, தலையணை, திரைச்சீலை, சோபா ஆகியவற்றின் உறைகளை அடிக்கடி துவைக்க வேண்டும்.
அதேபோல் தூசி, ஒட்டடைகள் அண்டாதவாறு, வீட்டை முடிந்தவரை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
பனிக்காலத்திலும், 70 சதவீதம் வைரஸ் கிருமி தொற்றால் தொண்டை கட்டுதல் ஏற்படுகிறது. அப்போது நிறைய நீராகாரங்களை அருந்த வேண்டும். உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். வலி மாத்திரைகளை உண்ணலாம். தேன் கலந்து எலுமிச்சை சாறு அருந்தலாம்.
தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு சளி, கட்டி வளர்ச்சி, வயிற்றில் அமிலம் சுரத்தல் ஆகியவை காரணமாக இருக்கும். குரல்வளை சரியாக இயங்காமல் போனாலும் கரகரப்பு ஏற்படலாம்.
பொதுவாக, காதுகளை அடிக்கடி ‘பட்ஸ்‘ மற்றும் குச்சி கொண்டு சுத்தம் செய்வது கூடாது, காதுகளில் எண்ணெய் ஊற்றக்கூடாது, காதுகளுக்கு பலமான சத்தம் ஆகாது, விபத்துகளில் காதுகளில் அடிபடக்கூடாது.
அவ்வாறு அடிபட்டால் காதுகளுக்குள் உள்ள சவ்வு கிழிந்து சீழ் பிடித்து விடும். அம்மைகட்டு, காது நரம்புகள் பலவீனம் அடைதல் போன்றவற்றால் காதின் நடுச்செவியில் நீர்க்கோர்வை ஏற்படும்.
அதனால் காது கேளாமை, தலைசுற்றல், கிறுகிறுப்பு ஏற்படும். நீண்ட நாட்களுக்கு அந்த நீர்க்கோர்வை இருந்தால் ‘கொலஸ்டிடோமா’ எனும் எலும்பு அரிப்பு நோயாக உருவாகி விடும். அதனால் மூளைக்காய்ச்சல் ஏற்படும். இதுவே முற்றிய நிலையில் இறுதியில் ‘கோமா’ நிலை ஏற்படும். இதற்கு லேசர் கருவி முலம் செவிப்பறையில் துளையிட்டு நடுச்செவியில் தேங்கி உள்ள நீரை அகற்ற வேண்டும்.
நடுச்செவியில் காற்று அழுத்தத்தை சமமாக்க, சிறிய ‘டியூப்’ பொருத்தப்படும். நீர்க்கோர்வை நீங்கி காது நன்றாக கேட்கும்போது, அந்த ‘டியூப்’ தானாகவே வெளியே வந்து விடும்.இதுதவிர ‘மைக்ரோ லேசர்’ சிகிச்சை மூலமும் தீர்வு காணலாம். செவிப்பறை இற்றுப்போய் விட்டால் அவரவர் திசுவின் மூலமாக மாற்று செவிப்பறையை உருவாக்க முடியும். நடுச்செவி எலும்புகள் இற்றுவிட்டால் 24 காரட் தங்கத்தால் செயற்கை எலும்பை செய்து, அதனை பொருத்தி மீண்டும் காது கேட்கும் திறனை பெறலாம்.
முற்றிலும் காது கேட்கும் சக்தியை இழந்த குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ என்னும் அறுவை சிகிச்சை செய்து உரிய பேச்சு பயிற்சி அளித்தால் காது கேட்கும் சக்தியும், பேச்சுத்திறனும் மேம்படும். பெரியவர்களுக்கு பேச்சுப்பயிற்சி இன்றி இந்த பிரச்சினையை தீர்க்கலாம்.நவீன கம்ப்யூட்டர் சாதனத்தின் உதவியுடன் செய்த அறுவை சிகிச்சை சிறப்பாக இயங்குகிறதா? என்பதை கண்டறியலாம். இந்த முறைகளில் 2 வாரங்களில் காது கேட்கும் சக்தியை பெறலாம். அதைத்தொடர்ந்து பேச்சுத்திறனை வளர்த்து கொள்ள முடியும்.
அடுக்கடி சளிப்பிடித்தல், தும்மல், வாசனைகளை அறிய முடியாத நிலை, அடிக்கடி தலைவலி போன்றவை ‘சைனஸ்’ நோயின் அறிகுறி. ‘எக்ஸ்-ரே ஸ்கேன்’ சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகளில் இதனை சரி செய்யலாம். அதற்கு நோய் கட்டுப்படவில்லை என்றால் ‘எண்டோஸ் கோப்பி’ அறுவை சிகிச்சை செய்யலாம்.
தொண்டையை பொறுத்தவரை, வலி, மூச்சு விடுவதில் சிரமம், உணவை முழுங்க முடியாத நிலை ஏற்பட்டால் ‘டான்சில்’எனப்படும் தொண்டை கட்டி ஏற்பட்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். அதனை கண்டறிய வேண்டும்.
குழந்தைகளை பொறுத்தவரை அதிகமாக குளிர் பானங்கள் குடித்தல், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தல் போன்றவற்றால் தொண்டைகளில் பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களுக்கு, புகை பிடித்தல், மது அருந்துதலால் தொண்டையில் புற்றுநோய் தாக்கக்கூடும். இதுபோன்ற நோய் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் 100 சதவீதம் சரி செய்யலாம். நோய் முற்றினால், ‘ரேடியோ தெரபி, ஹீமோ தெரபி’ சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating