விவாதம் எல்லைமீறினால் குடும்ப ரகசியம் காற்றில் பறக்கும்..!!
குடும்ப வாழ்க்கையில் விவாதத்தை குறைத்துக்கொள்வது நல்லது. செயலில் கண்ணும், கருத்துமாக இருப்பதே சிறந்தது. தேவையற்ற விவாதங்கள் சின்ன விஷயங்களை பெரிதாக்கி திசை திருப்பிவிடும். கோபத்தில் தேவையற்ற வார்த்தை பிரயோகத்திற்கு விவாதம் வழிவகுத்துவிடும். அது நெஞ்சில் ஆறாத மனக்காயத்தை ஏற்படுத்தக்கூடும்.
சிலர் விவாதத்தை தங்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் சக்தியாக பாவிப்பார்கள். ஆனால் உண்மையில் அது ஒரு கத்தியைப் போன்றது. தான் நினைத்ததை எப்படியும் சாதித்தே தீரவேண்டும் என்ற பதற்றத்தில் விவாதத்தில் ஈடுபடுபவர்கள், வீண் சண்டையை வளர்த்துக்கொண்டு மன வருத்தப்பட வேண்டியிருக்கும். விவாதத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டால் பல விஷயங்களில் நீங்கள் சாதிக்கலாம்.
முக்கியமான விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை ஆரம்பிக்க நினைப்பவர்கள், முதலில் அதற்கான சூழ்நிலைக்காக காத்திருக்கவேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் மனநிலையை அறிந்து, சரியான சந்தர்ப்பத்தில் பேச்சை ஆரம்பிக்கவேண்டும். ஒருவர் எரிச்சலான மனநிலையில் இருக்கும்போது அவருடன் ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை மோதலில் தான் முடியும். அடுத்தவர்கள் தவறாக பேசினாலும் அவர்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவேண்டும்.
அப்போதுதான் நீங்கள் பேசுவதை கேட்க வேண்டும் என்ற மனநிலைக்கு அவர்கள் வருவார்கள். அதை விடுத்து வாதத்திறமையை வெளிக்காண்பிக்க நினைக்கக்கூடாது. மற்றவர் சொல்லும் கருத்தில் உள்ள நியாயத்தை புரிந்துகொண்டு ஆமோதிக்கவேண்டும். பேச்சுவார்த்தை சுமுகமான முடிவுக்கு வர சாத்தியமில்லை என்பதை உணர்ந்தால் உடனே பேச்சை நிறுத்திக் கொள்ளவேண்டும். மற்றொரு சமயம் திரும்பவும் பேச்சுவார்த்தையை தொடங்கலாம். விவாதம் ஆரம்பித்தவுடன் அந்த இடத்தில் தேவையற்ற பேச்சுகளை நிறுத்திக்கொள்ளவேண்டும். விவாதத்தை தேவையில்லாமல் வளரவிடக்கூடாது.
ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கு இடையே மாறுபட்ட கருத்து நிலவ வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் தேவையற்ற விவாதம் அவர்களை பிரித்துவிடும். அதனால் விவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. குடும்ப விஷயத்தில் கூடுமானவரை மூன்றாம் நபர் தலையிடுவது தவிர்க்கப்பட வேண்டும். கணவன்-மனைவி இருவருக்குமிடையேயும் ஒருமித்த கருத்து நிலவுவதற்கான சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் மூன்றாமவர் தலையிட்டால் கருத்து மோதல்கள்தான் ஏற்படும். அதிலும் குடும்பத்திற்கு சம்பந்தமில்லாதவர்களை எந்த விவாதத்திலும் தலையிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
சில நேரங்களில் சில உண்மைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அந்த சமயத்தில் உங்கள் கருத்தை, நியாயத்தை மற்றவர்கள் புரிந்துகொள்ளாதபோது கொஞ்சம் அமைதி காப்பது நல்லது. எடுத்த எடுப்பிலே எல்லாம் சுமுகமாக முடிந்துவிடும் என்ற மனநிலைக்கு வந்துவிடக்கூடாது. உங்களுடைய கருத்து அவமதிக்கப்பட்டால், அந்த மன வருத்தத்தில் தேவையற்ற வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும் கருத்து ஒருநாள் நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு பிரச்சினையை பக்குவமாக கையாண்டால் உங்கள் கருத்துகள் மற்றவர்களை சிந்திக்கவைக்கும்.
‘எனக்கு எல்லாம் தெரியும். என் வார்த்தையை கேட்காவிட்டால் நீ அவ்வளவு தான்’ என்ற ஆணவத்தோடு எவருடனும் விவாதம் செய்யக்கூடாது. அவர்களும் ஓரளவு விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இருவருக்கும் ஒத்துப்போகும் வகையில் பேச்சு இருக்கவேண்டும். விவாதங்கள் பல உண்மைகளை எடுத்துரைத்தாலும் நல்ல தீர்வை உடனடியாக தருவதில்லை. இன்று இளைய தலைமுறையினரிடையே வன்முறைகள் தலைதூக்க வெட்டி விவாதங்கள் காரணமாக இருக்கிறது. அதிகப்படியான, தேவையற்ற பேச்சுகளை குறைக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதற்கெல்லாம் மற்றவர் தலையாட்ட வேண்டும் என்று நினைத்தால் அது புத்திசாலித்தனமான விஷயமல்ல. அப்படியானால் கேட்பவர் சிந்திக்க தெரியாதவராக இருக்கவேண்டும். உங்களின் தனிப்பட்ட கருத்தை மற்றவர் மீது திணிக்க முயற்சி செய்யக்கூடாது. அந்த அசவுகரியத்தை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஒருவர் மனதை மற்றவர் புரிந்துகொள்ள விவாதம் இடம்கொடுக்காது. விவாதம் சுயநலமிக்கது. இதை யாரும் விரும்பமாட்டார்கள். சாதாரண பேச்சு விவாதமாக மாறும் பட்சத்தில் உடனே பேச்சை நிறுத்திக்கொள்ளவேண்டும். விவாதத்தை வளரவிடுவது ஆபத்து. எதற்கெடுத்தாலும் விவாதம் செய்துகொண்டிருப்பவர்கள் பேச்சிற்கு காலப்போக்கில் மரியாதை இல்லாமல் போய்விடும். குடும்பத்தினர் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் விவாதம் செய்து யாரும் முன்னுக்கு வரமுடியாது. எடுத்த காரியத்தில் வெற்றிபெறவும் முடியாது. மற்றவர்கள் வெறுப்பிற்குத்தான் ஆளாக நேரிடும்.
குடும்ப வாழ்க்கையில் வெற்றிபெற தேவையான விஷயங்களைப் பற்றி வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் லவுரா என்ற ஆராய்ச்சியாளர் பலவிதமான உளவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அவர் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள், பிரிந்து வாழும் தம்பதி கள் என இருதரப்பினரையும் நேரில் சந்தித்து ஆய்வு செய்திருக் கிறார். அதில் மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கிடையே அதிக விவாதம் நடப்பதில்லை. பிரிந்து வாழும் தம்பதிகள் அனைவரின் பிரிவிற்கும் வீண் விவாதம் காரணமாக இருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.
விவாதம் செய்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்த விவாதத்தின் சாரம்சத்தை மற்றவர்களிடம் சொல்லி தன் வாதத்திறமையை வலுப்படுத்திக்கொள்வதும், வலைத்தளங்களில் அதை பதிவு செய்வதும் குடும்ப வாழ்க்கையில் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்திவிடும். பல குடும்ப சண்டைகள் வீதிக்கு வருவது விவாதங்களால் தான். விவாதம் எல்லை மீறும்போது குடும்ப ரகசியம் காற்றில் பறந்துவிடும். சுயமரியாதை விலை பேசப்பட்டு, சுயநலம் மட்டுமே எஞ்சி இருக்கும். நிம்மதியை சீர்குலைத்துவிடும்.
வீண் விவாதம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அடிக்கடி விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் தாறுமாறாகும். வாழ்க்கையில் அமைதி இழந்து, அடுத்தவர் வெறுப்பிற்கு ஆளாக நேரிடும். சுற்றி இருப்பவர்கள் தம் பேச்சை கேட்கவேண்டும் என்பதற் காக எடுத்துக்கொள்ளும் முயற்சியில் எதிர்மாறான விளைவுகளை சந்திக்கவேண்டி இருக்கும். விவாதம் வெற்றிக்கான வழியல்ல.
குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்க வேண்டுமானால் விவாதத்தை குறைத்துக்கொள்ளவேண்டும். விவாதத்தில் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தால் வாழ்க்கையில் தோல்வியடைய வேண்டியிருக்கும்.
Average Rating