மூட்டுவலியில் முடங்கிப்போக வேண்டாமே..!!
எலும்புகள்தான் நமது உடலின் அஸ்திவாரம். நமது உடலை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் கட்டுமானமும் எலும்புகள்தான். உடல் சீராக இயங்கவேண்டும் என்றால் அதற்கு எலும்புகள் ஒத்துழைக்கவேண்டும். உடல் மற்றும் மூட்டுகளின் இயக்கத்திற்கு எலும்புகள் நெம்புகோல்கள் போன்று உதவுகின்றன. ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் எலும்புகள் அவசியம்.
உடலில் இருக்கும் தாதுக்கள், கொழுப்பு, அமிலங்களின் சமநிலைக்கும் எலும்புகள் சிறந்த முறையில் பங்காற்றுகின்றன. மனித உடல் முறையான முழு வடிவத்தை பெறவும் எலும்புகள் தேவை. உடல் இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அரிய உறுப்புகளை பெட்டகம் போல் பாதுகாக்கும் பொறுப்பும் எலும்புகளுக்கு உண்டு. மூளையை மண்டை ஓடும், இதயத்தை நல்லி எலும்புக்கூடும் பாதுகாப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
உடல் முழுக்க உள்ள எலும்புகளை சில வகைகளாக பிரிக்கலாம். நீண்ட எலும்புகள் (தொடை எலும்பு, மேல்கை எலும்பு போன்றவை), குறுகிய எலும்புகள் (மணிக்கட்டு மற்றும் பாதத்தில் உள்ளவை), தட்டையான எலும்புகள் (தோள்பட்டை மற்றும் மண்டைஓட்டில் உள்ளவை), சீர் அல்லாத எலும்புகள் (முதுகெலும்பு மற்றும் கீழ்த்தாடையில் உள்ளவை), சீசமாய்டு எலும்புகள் (தசைகளில் ஊடுருவி இணைப்பவை), குருத்தெலும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
குருத்தெலும்பு என்பது மூட்டுகளின் இயக்கத்திற்கு மிக அவசியமானது. நமது உடல் எடையை தாங்கிக்கொண்டு- நாம் எதையாவது தூக்கிக்கொண்டு நடந்தால் அதையும் சேர்த்து சுமந்துகொண்டு- நமது மூட்டுகள் பாதிக்காத அளவுக்கு பாதுகாக்கிறது. நாம் நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் மூட்டுகளின் இயல்பான இயக்கத்திற்கும் இது உதவுகிறது. வேகமான செயல்பாடுகளின்போது மூட்டுகளின் அதிர்வைத் தாங்கும் ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றும் செயல்படுகிறது. மூட்டுகளில் எலும்புகளில் உராய்வதை தடுத்து, மூட்டுகள் மென்மையாக இயங்கவும் குருத்தெலும்புகள் துணைபுரிகின்றன.
குருத்தெலும்புகள் ரப்பர் போன்று மென்மையானது. நெகிழத்தக்கது. இவை ‘கான்றோசைட்’ என்னும் செல்களால் ஆனவை. அற்புத சக்தி நிறைந்த இந்த செல்கள், குருத்தெலும்பு சேதமடையும்போது ஓரளவு அதனை சரிசெய்யும். ஆனாலும் அதிகப்படியான செயல்பாட்டாலும், வேறு சில தொந்தரவுகளாலும் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.
மூட்டுகளுக்கு அதிர்ச்சியை தரும் செயல்கள், விபத்துகள், மூட்டு களுக்கு மிக அதிக வேலைகளை கொடுத்தல், வயதாகுவதால் ஏற்படும் மூட்டுத் தேய்மானம், சில வகை நோய்களால் மூட்டுகள் விரைப்படைந்து செயல்குறைதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பாரம்பரிய வாத நோய்.. போன்ற பல்வேறு காரணங்களால் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பு ஏற்படும்போது மூட்டு வலி, மூட்டு விரைப்பு, வீக்கம், மூட்டிலிருந்து சத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.
குருத்தெலும்புக்கு ரத்த ஓட்டம் கிடையாது. அதனால், அதில் பாதிப்புகள் ஏற்படும்போது அறிகுறிகளை கண்டறிந்து முறையான சிகிச்சைகளை உடனே மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு உடலை முடக்கும் நிலை உருவாகிவிடும். இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடும்.
குருத்தெலும்பு சிகிச்சையில் நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ‘கான்ட்ரோன்’ எனப்படும் செல் மீள் உருவாக்க சிகிச்சை குறிப்பிடத்தக்கது. இது அவரது குருத்தெலும்பு செல்களையே பிரித்தெடுத்து, ஆய்வு கூடத்திற்கு அனுப்பி, அந்த செல்களை இனப்பெருக்கம் செய்யவைத்து, அதை பழுதடைந்த குருத்தெலும்பு பகுதியில் செலுத்துவதாகும். இயற்கையான குருத்தெலும்பு செல்களை உடலில் இருந்து எடுத்து- அதற்குரிய ஆய்வகத்தில் வளர்த்து- பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தும் இந்த முறை, குருத்தெலும்பு சிகிச்சையில் உலக அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும்.
எலும்பு சிகிச்சை துறை வேகமாக வளர்ந்து, எத்தகைய குறை பாடுகளையும் சரி செய்திட முடியும் என்ற நிலையில் இருந்தாலும், எலும்புகள் பலவீனமாகாத, பாதிப்படையாத வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொள்வது நல்லது. எலும்பு பலத்தோடு ஆரோக்கிய வாழ்க்கை வாழவிரும்புகிறவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்.
இதற்காக ஜிம்மிற்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் முக்கால் மணிநேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் போதும். ஜாக்கிங், சிட் அப்ஸ் போன்றவைகளும் செய்யலாம். வீடு அல்லது அலுவலக மாடிப்படிகளில் தினமும் அரை மணிநேரம் ஏறி இறங்கும் பயிற்சியை செய்தாலும் போதும். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ வாரத்தில் மூன்று நாட்கள் மைதானத்தில் இறங்கி உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டை குறைந்தது ஒரு மணி நேரம் விளையாடுங்கள்.
அது எந்த விளையாட்டாகவும் இருக்கலாம். வியர்க்கும் அளவுக்கு விளையாடும்போது தசையும், எலும்பும் பலமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அதிக உடல் எடை எலும்புகளுக்கு சுமையாகிவிடும்.
Average Rating