முகத்தை பொலிவாக்கும் ரோஜா..!!
நாம் காணும் தாவரங்கள், இலை, தழை அனைத்தும் கண்ணுக்கு பசுமையை, குளிர்ச்சியை மட்டும் வழங்குபவை அல்ல. அவை உணவாக, மருந்தாகவும் பயன்படும் வல்லமை பொருந்திய குணங்களைக் கொண்டவை. இவற்றில், பெரும் தாவரங்கள் மட்டுமல்ல, சின்னச்சின்ன செடிகளும், கொடிகளும், புல், பூண்டுத்தாவரங்களும் கூட அருமருந்தாய் பயன்படுபவை தான்.
கொடி வகை, பூண்டு வகை தாவரங்களில் மிக முக்கியமானது, குப்பைமேனி. இதன் பெயரிலேயே காரணமும் அமைந்திருப்பதால், இவை வளரும் இடத்தை எளிதாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் குப்பைமேனி பொதுவாக மனிதர்களின் உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு, படை, தேமலுக்கு அரைத்துப்பூசுவதற்கு ஏற்ற இலைகளாகும்.
இதேபோன்று பல புல், பூண்டு இலை தழைகளின் பயன்களும் அளவிடற்கு அரியவை. அவற்றின் பயன்களை ஒவ்வொன்றாக இனி காண்போம்.
பயன்கள்: குப்பை மேனித்தழைகள் சொறியையும், சிரங்கையும் போக்கவல்லவை. இதற்கு குப்பை மேனி, தழைகளுடன் உப்பையும் சேர்த்து அரைத்து கட்டவேண்டும். தேள்களை விரட்டும் தன்மை கொண்டவை, குடியோட்டிப்பூண்டும், பிரம்ம தண்டுத்தழையும். இதன் பச்சை வேரைச்சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக்கட்டினால், நஞ்சு நீங்கும்.
முகப்பொலிவுக்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்திலே தடவத்தோலின் நிறம் மிகவும் பொலிவு பெறும். கல்லடைப்பு பிரச்னைக்கு தாம்பூலம், எருக்கம்பூவின் ஏழு மொக்குகளை எடுத்து, சுண்ணாம்புபோடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்டால், இரண்டு அல்லது மூன்று வேளைகளிலேயே கல் விழுந்துவிடும்.
வயிற்று வலியை போக்குவதற்கு நறுவலிப்பட்டையை இடித்துச்சாறு பிழியவேண்டும். தேங்காய்பாலில் கலக்கிக்குடிக்க கடினமான வயிற்றுவலியும் நீங்கும். தலையின் பாரத்தை நீக்குவதற்கு கிராம்பு சிறந்த நிவாரணி. கிராம்புவை நீர்விட்டு மைபோல் அரைத்து நெற்றியிலும் மூக்குத் தண்டின் மீதும் பற்று போட்டால், தலைபாரம் நீங்கி, நீரேற்றம் குணமாகும்.
காயம்பட்ட உடலுக்கு சிறந்த நிவாரணி, காட்டாமணக்கு ஆகும். காயத்திலிருந்து ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமணக்கு பாலைப்பூசினால் குருதி நிற்கும்; காயமும் விரைவில் ஆறிவிடும். குழந்தைகளுக்கு வயிறு உப்பல் இருந்தால், உப்பிலாங்கொடி சிறந்த மருந்தாகும். மாந்தம் காரணமாக குழந்தைகளின் வயிறு உப்பல் ஏற்பட்டு இருந்தால், உப்பிலாங்கொடியை குழந்தைகளின் அரையில் கட்டினால் எளிதில் தீர்ந்துவிடும். பொதுவாக கைக்குழந்தைகளுக்கு நீர்க்கோவை கட்டிகள் வந்தால், அதற்கு கரப்பான் சாறு அருமருந்தாகும். கரிசாலைச்சாறு 2 துளியுடன், 8 தேன் துளிகள் என்ற அளவில் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவைகள் நீங்கும்.
அடிதடிகளில் ஏற்படும் வீக்கம், உள்காயம், வெளிக்காயங்களுக்கு கடலை இலை சிறந்த நிவாரணியாகும். கடலை இலையை வேகவைத்து, அடிபட்ட வீக்கம், மூட்டுப்பிசகல் ஆகியவற்றிற்கு இளஞ்சூட்டில் கட்டினால் எளிதில் குணமாகும். மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் மயக்கம் சிறு கைவைத்தியத்தில் சரியாகக் கூடியதாகும். இதை போக்க, ஏலக்காய் ஒருபங்கு, பனை வெல்லம் அரைப்பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு தண்ணீர் விட்டு அதனை காய்ச்சிக்கொடுத்தால், பித்தத்தால் ஏற்படும் மயக்கம் நீங்கும். இதேபோல, மனிதர்களுக்கு உண்டாகும் மூலநோய்க்கு, ஆகாயத்தாமரை இலை அரைத்துப்பூசி வந்தால் குணமாகும்.
Average Rating