சேலையின் அழகை வெளிப்படுத்தும் அற்புதமான பார்டர்கள்..!!
பெண்கள் விரும்பி வாங்கும் பலவிதமான சேலைக்கு அழகு சேர்ப்பவை பார்டர்கள்தான். புடவையின் முழு அழகும் அந்த பார்டரின் வேலைப்பாட்டை வைத்தே அமைகிறது. சாதாரண பருத்தி சேலை முதல் பகட்டான பட்டு சேலை வரை அனைத்திற்கும் ஏற்ற விதவிதமான பார்டர்கள் உருவாக்கப்படுகின்றன.
ஓர் சேலையின் அழகிய பார்டர் என்பது கேக் மீது வைக்கும் வண்ண கிரீம் போன்றது. பார்டரின் அழகும், வனப்பும்தான் அணிபவர்களின் அழகை மேம்படுத்துகின்றன. எனவே, நாம் சேலை வாங்கும்போது எவ்விதமான பார்டர்கள் என ஆராய்ந்து வாங்குதல் வேண்டும். பார்டர்கள் என்பது மூன்று விதமாக உருவாக்கப்படுகின்றன. நெய்வது, பிரிண்ட் செய்யப்படுவது மற்றும் எம்பிராய்டரி பார்டர் என்ற மூன்று வகையில் பார்டர் உருவவாக்கம் உள்ளது.
அனைவர் கவனத்தை ஈர்க்கும் எம்பிராய்டரி பார்டர்கள் :
மிக நுட்பமான கலைதிறன் மேம்பாட்டின் உச்சமாக விளங்க கூடிய புடவைகளாக திகழ்வது எம்பிராய்டரி பார்டர் சேலைகள்தான். பார்டர்கள் ரேஷம் மற்றும் ஜரி எம்பிராய்டரி மற்றும் கற்கள் மற்றும் வெள்ளி வட்டுகள், மணிகள் கொண்டடு உருவாக்கப்பட்ட பட்டைகள் கொண்டு அழகுடன் உருவாக்கப்படுகின்றன. ரேஷம் எம்பிராய்டரி என்பது வண்ண நூல்கள் கொண்டு பூக்கள் மற்றும் செடி, கொடிகளை அதே தோற்றத்துடன் அழகுற எம்பிராய்ட் செய்வது. ஜரி வேலைப்பாடு என்பது தங்கநிற கம்பி நூல்களால் எம்பிராய்ட் செய்யப்படுவது. இதனுடன் கற்கள், மணிகள் மற்றும் ஜமிக்கிகள் கொண்டு பார்டர் அழகுடன் உருவாக்கப்படுகிறது.
அனைவரும் பாராட்டும் பிரிண்டர் பார்டர்கள் :
உயிரோட்டத்துடன் திகழும் வடிவமைப்பு மற்றும் பிரகாசமானதாக திகழும் பிரிண்டர் பார்டர்கள் காண்பவர் உடனே பாராட்டும் வகையில் இருக்கக்கூடியது. ஒற்றைநிற ஷிப்புடன், ஜாக்கெட், பருத்தி சேலைகளில் பிரிண்ட் செய்யப்பட்ட பார்டர்கள் அழகுற பொருந்துகின்றன. எண்ணற்ற வண்ண பூக்களும், கணித உருவாக்கலும் கணினி உதவியுடன் புதிய வண்ண சேர்ப்பு, ஒவ்வொரு சேலை நிறத்திற்கு ஏற்ப கண்கவர் டிசைன் என அழகுடன் பிரிண்டர் பார்டர் உருவாக்கம் உள்ளது.
பல வண்ண சதுர, செவ்வக கட்டங்கள், வட்டம் மற்றும் முக்கோண வடிவங்கள் பார்டர்களாக பிரிண்ட் செய்யப்பட்டு வருகிறது. இது புதிய வகையிலான பார்டர் அமைப்பாக உள்ளதால் இளம் தலைமுறையினர் விரும்பி வாங்குகின்றனர். சில பெண்கள் பல வண்ண பூக்கள் மற்றும் கொடி, இலைகள் பிரிண்ட் செய்யப்பட்டவையை விரும்பி வாங்குகின்றனர். இதில் முக்கியமானது புடவை மற்றும் பார்டரின் வண்ண சேர்க்கைதான்.
புடவையுடன் நெய்யப்படும் பார்டர்கள் :
புராண மற்றும் இதிகாச அடிப்படையிலான அணிகலன் வடிவங்கள் அல்லது பூவடிவங்கள் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட்டு நெய்யப்படும் பார்டர்களாக உதாரணமாக காஞ்சிபுரம், தென்னக பட்டு சேலைகள், பனாரஸ் போன்ற பாரம்பரிய மிக்க சேலைகளில் இந்த நெசவு பார்டர்கள் பிரதான இடம்பிடிக்கும். இதிலும் ரேஷம் மற்றும் ஜரி வேலைப்பாடுகள் முக்கிய இடம்பிடிக்கும்.
அதாவது ரேஷம் மற்றும் ஜரி வேலைப்பாடு அமைப்பில் சேலையோடு அழகுற நெய்யப்படுகின்றன. தனிப்பட்டு எம்பிராய்டரி செய்யப்படுவதால் இந்த பார்டர் சேலை உருவாக்கத்துடனே மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு வண்ண நூல் மற்றும் ஜரி எனும் தங்க சரிகை நூல்கள் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய வடிவான ஆர்ட் சில்க் மற்றும் நெட் சில்க் சேலைகளில் இந்த பார்டர்கள் அதிக வனப்புடனும் அழகுடனும் காட்சி தருகிறது.
பார்டர் என்பது புடவையின் கரைப்படும் ஓரப்பகுதியாக காணப்பட்டாலும், அதில் புதிய நவீன வடிவமைப்பு மற்றும் உருவ வகைகளை பதிய வைத்து அது பெண்களுக்கு பிடித்தவாறு அமைய வைப்பதே பெரிய பணியாக உள்ளது.
Average Rating