கிழக்கிலங்கையின் முதற் பாடசாலை: கன்னத்தில் குடும்பிகட்டிய ஆசிரியரும் மாணவரும்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 12 Second

இலங்கையின் மிகப்பழைமையான பாடசாலை என்று புகழ்பெற்ற மட்டக்களப்பு மத்திய கல்லூரி 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கல்லூரியின் வளாகத்திலுள்ள நினைவுப் படிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பின் கல்வி வரலாறு திருப்பெருந்துறை என்று கிராமத்திலிருந்து ஆரம்பமாவதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மாசிலாமணி சண்முகலிங்கம் கூறுகின்றார்.

அவர் கூறுகின்றார், “…. அதற்கும் 10 வருசத்துக்கு முதல், 1804 ஆம் ஆண்டு, திருப்பெருந்துறையில் திண்ணைப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன”.

“கிழக்கிலங்கையில் முதன்முதலாக திருப்பெருந்துறையிலேயே பாடசாலை அமைக்கப்பட்டது எனக் கருத இடமுண்டு. காசிநாதர் என்ற ஒருவர், கன்னத்தில் குடும்பி கட்டி, ஒருவகைப் புல்லால் இழைக்கப்பட்ட பாயில் மாணவர்களை இருக்கவைத்து, பாடம் சொல்லிக் கொடுத்ததாக வரலாறு உண்டு. பாடம் கற்ற பிள்ளைகளும் கன்னத்தில் குடும்பிகட்டித்தான் கற்றதாகவும் கூறப்படுகின்றது. இங்க முருகன் கோவில், சொறிக்கல்லால் கட்டப்பட்டதற்கான விவரங்கள் இருக்கின்றன” என்கிறார் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.

திருப்பெருந்துறை கிராமத்தின் பெருமை குறித்து, அந்த ஊரவர்கள் மேலும் பேசிக்கொள்ளும்போது, “1804 க்கு முதல் இந்தக் கிராமம்தான் பெரிய ‘ரவுணாக’ இருந்து.

மட்டக்களப்பு என்பதே இதுதான். இந்தக் கிராமத்தில் ஒல்லாந்தர் காலத்தில், யாவாரம் சிறப்பாக நடைபெற்றது. எல்லா நடவடிக்கைகளும் இந்த ஊரோட ஒட்டித்தான் நடந்துகொண்டிருந்தன. வேம்பையடித்துறை என்ற துறைமுகத்தில் தான் பெரியளவிலான யாவாரம் நடந்திருக்கிறது. அதுவும் கரையில் ஏற்றி இறக்காமல், கடலில் வள்ளங்களில் வைத்தே வியாபாரம் நடைபெற்றிருக்கின்றன. கொப்பறா, தேங்காய், கருவாடு, தும்பு போன்ற கிழக்கின் ஏற்றுமதிப் பொருட்கள், வேம்பையடித்துறையில் இருந்துதான் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன”.

“இங்கு பெரியளவிலான மொத்த யாவாரங்கள் நடந்ததனால், இந்தத் துறைமுகம் காலப்போக்கில், ‘பெரியதுறை’ என்ற பெயரைப் பெற்றது. கதலிவனம் குறிச்சியில் முருகன் கோவிலும், கொத்துக்குளம், விடத்தல்முனை குறிச்சிகளில் முத்துமாரியம்மன், கண்ணகை கோவில்களும், சேத்துக்குடாக் கண்டம் குறிச்சியில் பிள்ளையார் கோவிலும் எழுந்தருளப்பெற்று, பிரசித்தி பெற்ற புண்ணியபூமியாக இந்தப் பகுதி திகழ்ந்ததனால், ‘திரு’ என்ற பெயரைப் பெற்றுத் ‘திருப்பெருந்துறை’ ஆகியது”.

“இவ்வாறு சிறப்புப் பெற்றிருந்த திருப்பெருந்துறையில், கொள்ளைநோய் வந்ததையடுத்து, இங்கு இயங்கிய திண்ணைப்பள்ளிக்கூடம் இன்றுள்ள மட்டக்களப்பு ரவுனுக்கு இடம்மாறியது. வியாவார நடவடிக்கைகளும் ‘முனிசிப்பல்கேற்று’க்கு போனது”

“அதுக்குப்பிறகு பல தசாப்தங்களுக்குப் பின்னர், மனோகரன் என்கின்ற கிறிஸ்தவருக்கு முருகன் கனவில் தோன்றி, “இங்க யாரும் இல்லாமல், அங்கங்கு போட்டியள்; உங்கட இடத்தில திரும்பவும் நான்வந்து இருக்கிறன். ஏன் நீங்க அங்க வாறீங்களல்ல; திரும்பவும் இங்க வாங்க” என்ற அசரீதி வாக்குச் சொல்லி, அதுக்குப்பிறகு காடு வெட்டிக் கோவிலைக் கண்டுபிடித்தோம். கோவில் எல்லாம் காடு மேவிப் போயிருந்தது.விளக்குவைத்துப் பூசை செய்தோம்”.

“அதுக்குப் பின்னர் பிரெஞ்சுப் பாதர் ஒருவர் 1932 ஆம் ஆண்டு, காட்டை வெட்டி, தியான மடம் ஒன்றைக் கட்டினார். இது இன்று ‘மின்றோசா’ என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் குப்பை மேட்டின் பக்கத்தில் தான் இருக்கிறது. தொடர்ந்து மக்கள் மெல்ல மெல்லக் குடியேறி, 1982 இல் பாடசாலை கட்டப்பட்டது”.

“1990 இல் சம்மாந்துறையில் அகதிகளாக்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, கொக்கட்டிச்சோலை, கல்லடி நெசவுசாலை ஆகிய அகதிமுகாம்களில் நான்கு வருடங்களாக தங்கியிருந்தபோது, 1994 இல் அஷ்ரப் இங்க கொண்டுவந்து குடியேற்றினார். நாங்க நினைக்கிறோம் புண்ணியம் என்று. ஆனால் அதுகும் ஓர் அரசியல் ரீதியிலான அனுகுமுறைதான். எங்கள அங்கயிருந்து நிலத்தைப் பறிச்சுக்கலைச்சு, அங்க முஸ்லிம் ஆக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். திருப்பெருந்துறையில் ஓரிடம் இருக்கு போங்க என்று! இவங்கள இங்க கொண்டுவந்து குடியேற்றினார்கள்”

“அந்தக்காலத்தில ‘நான் உங்கள் தோழன்’, வீ. பி. கணேசன் படம் நடிக்கேக்குள்ள, இந்த இடத்தில்தான் சண்டைக்காட்சி எல்லாம் ‘சூட்டிங்’ செய்தவை. அவ்வளவுக்கு அழகான, இயற்கை வளம் நிறைந்த இடமாக இருந்தது. ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரையும் கம்படிச் சண்டைக்காக படத்தில் நடிக்க எடுத்தவங்க; அந்த நேரத்தில் இங்க குப்பை ஒன்றும் கொட்டப்படவில்லை. இந்த இடத்தில் கிறவல் வளம் இருந்தபடியால், அந்தக் கிறவலைக் கொண்டுபோய் றோட்டுப் போட்டவங்கள். தோண்டத்தோண்டப் பள்ளமாக வந்தபடியால், “கிறவல் தோண்டவேண்டாம்” என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதுவரையும் கிறவல் எடுத்த இடம், பெரிய பள்ளமாகக் குழியாக இருந்தது. அந்தக் காலத்தில் கல்யாணப் போட்டோ எடுக்கிற ஆக்கள் எல்லாம் இந்தக் கிறவல் குழியில் வந்துதான் எடுக்கிறவை. ஈஸ்ட் லகூன், காந்திப்பொக்கணைக்கு இப்ப போறாங்கள். முந்தி இங்கதான் படமெடுக்க வருவாங்க”

“கிரவல் தோண்ட வேண்டாம் என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினபோது, “நாங்கள் பள்ளத்தை மூடி, மட்டப்படுத்தித் தாறம்” என்று ‘முனிசிப்பல்டி’ சொன்னது. மண்போட்டு குழியை மூடித்தருவதாகச் சொன்னவை, குப்பையைக் கொட்டிக்கொண்டு வந்து, இப்ப கொடிய நோய்களும் அழிவுகளுமாக இருக்கிறது” என்கிறது திருப்பெருந்துறையூர்.

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில், திருப்பெருந்துறை கிராமத்தில் 447 குடும்பங்கள் பதிவுபெற்றிருக்கின்றன.

குப்பை மேட்டின் வடக்கு எல்லை வேலிக்கு மறுபுறத்தில் கத்தோலிக்க ‘செமினறி’ ஒன்றுண்டு. ‘செமினறி’யில் கல்விகற்கும் மாணவர்களும் குப்பை மேட்டின் துர்நாற்றம், இலையான்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள்.

அதைவிட, 120 மாணவர்கள் கல்விகற்கும் தொழில்பயிற்சி நிலையமும் குப்பை மேட்டின் இன்னோர் எல்லையாகக் காணப்படுகின்றது.

“இவ்வாறு எல்லா வளமும் கொண்ட கிராமம், இந்தக் குப்பையால மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய் வர, சனமெல்லாம் கிராமத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டது என்று சொன்னேன் அல்லவா! அவ்வாறு ஓடியவர்கள் வலையிறவு, வவுணதீவு போன்ற கிராமங்களில் குடியேறினார்கள். இவர்களுக்கு இன்றும் கொத்துக்குளம் மாரியம்மன் கோவிலில் பூசை இருக்கிறது” என்கிறார் திருப்பெருந்துறையூர் முதியவர் ஒருவர்.

எப். எக்ஸ்.சி. நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியத்தில் திருப்பெருந்துறை குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. புளியந்தீவு என்று முன்னர் அழைக்கப்பட்ட, இன்றைய மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்குப் புறத்தின் வாவியின் அருகில் அமைந்திருந்த கதலிவனத்தில், இந்தியாவிலிருந்து வந்திருந்த சக்தி உபாசகர்களான மூன்று சகோதரிகளில் ஒருவர் தங்கியதாக குறிப்புண்டு.

“மாமாங்கை நதியில் நீராடி, வழிபாடியற்றிய பின்னர், புளியந்தீவின் வடமேற்குப் புறத்தின் வாவி அண்டையை வந்தடைந்தனர். மக்கள் செறிந்து வாழ்ந்த கதலிவனத்தில், ஒருவரும், தாண்டவன் வெளியில் இருவருமாகத் தங்கிவிட்டனர்” என்று மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கூறினார்.

கழிவுநீர் அகற்றல்

திருப்பெருந்துறையின் மக்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து சுமார் 30 யார் தூரமளவில்தான் மனிதக் கழிவுநீர் அகற்றல் நடைமுறையில் உள்ளது.

ஆனால், திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்கு எதிர்ப்பக்கமாக, பிரதான வீதியில் இருந்து 100 மீற்றர் உட்புறமாக கழிவுநீரைஅகற்றும் பகுதிஅமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு, இப்பகுதி இயற்கையான முறையில் சுத்திகரிப்பு இடம்பெறும் பொறிமுறை உருவாக்கப்பட்டது.

இப்பகுதியில் தினமும் மாநகர சபையின் ஒரு கலி பவுசரால் 4 முதல் 6 தடவைகள் கழிவுநீர் அகற்றப்படுவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,பொலிஸ் நிலையம், விமான நிலையம் மற்றும் முப்படைகளும் இவ்விடத்திலேயே திரவக்கழிவுகளைத் தமது வாகனத்தில் கொண்டுவந்து கொட்டுகின்றனர்.

சத்துருக்கொண்டானில் நவீன முறையிலான திரவக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிலையம் இயங்க வைக்கப்படும் வரையிலும் இந்த இடம் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும்.

மட்டக்களப்பு நகரில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கொடுவாமடு நிரப்புத் தளம், செங்கலடி- ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது. திருப்பெருந்துறையில் குப்பை கொட்டுவதற்கு மாற்று ஏற்பாடாக இந்த இடம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், மட்டக்களப்பு மாநகர சபையிடம் தற்போது இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, கொடுவாமடு நிரப்புத் தளத்தை உபயோகிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை மாநரசபை எதிர்கொண்டுள்ளது.

மாநகர சபை, இரண்டு கொம்பக்டர்கள், 3 லொறி, 14 ரக்டர்கள் ஆகிய 19 வாகனங்கள் மூலம் கழிவகற்றல் தொழிற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றது. அனைத்து கழிவகற்றல் வாகனங்களும் GPS முறையில் கண்காணிக்கப்படுகின்றன. திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான செலவீனங்களாக மாதம் ஒன்றுக்கு 5.5 மில்லியன் ரூபாயை மட்டக்களப்பு மாநகர சபை செலவுசெய்வது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனநோயாளிகளுக்கு அன்பு ஒன்றே மருந்தாகும்: தீபிகா படுகோனே..!!
Next post நீச்சல்குள படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஷாருக்கான் மகள்..!!