தரையில் அமர்ந்து சாப்பிடுவதே நல்லது..!!
பொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால் ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது.
மேலும், காலை மடக்கி, கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று, ஜீரணம் நன்றாக நடைபெறும். காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்ந்து உண்பதால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல், கால்களுக்கு செல்கிறது.
நடக்கும் போது மட்டும் கால்களுக்கு, சென்றால் போதும்.அதேபோன்று, இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும் போது, காலை மடக்கி அமருவதால், கழிவுகள் எளிதில் வெளியேறும். யுரோப்பியன் ஸ்டைல் கழிப்பறையில், காலை தொங்க விட்டு அமரும் போது, குடலுக்கு அதிக அளவு அழுத்தம் செல்லாது. குடலுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, கழிவுகள் வெளியேறும். எனவே, முடிந்த வரை, காலை தொங்க வைத்து அமருவதை தவிர்க்க வேண்டும்.
கட்டில் மற்றும் சோபாவில் அமரும் போதும், சம்மணம் இட்டே அமர வேண்டும். தரையில் ஏதாவது விரிப்பை விரித்து, அதன்மேல், சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை என்றால், டைனிங் டேபிளில் காலை மடக்கி, அமர்ந்து சாப்பிடுங்கள். நின்றபடி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து, ஒன்றாய் சாப்பிடுங்கள். எந்த வகை சாப்பாடாக இருந்தாலும், நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிட வேண்டும். அவசரமாகவோ, பேசியபடியோ, டிவி பார்த்தவாறோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.
சாப்பிடும் போது, இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோன்று, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். போதிய அளவில், தண்ணீர் பருகுவது அவசியம். பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டோ, பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவோ சாப்பிட வேண்டாம். ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், இரவில் முள்ளங்கி, தயிர் மற்றும் கீரை உணவுகளை தவிர்க்க வேண்டும். சாப்பாட்டுக்கு ½ மணி நேரத்துக்கு முன்பு பழங்கள் சாப்பிடலாம். சாப்பாட்டுக்கு பின், பழங்கள் சாப்பிட வேண்டாம். சாப்பிடும் முன், சிறிது நடந்து, பின் சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது மிகவும் நலம்.
சாப்பிட வேண்டிய நேரமும் முக்கியம். காலை 7 மணி முதல் 9 மணிக்குள்ளும், மதிய சாப்பாடு 1 மணியிலிருந்து 3 மணிக்குள்ளும், இரவு சாப்பாடு 7 மணியிலிருந்து 9 மணிக்குள்ளும் சாப்பிட்டுவிட வேண்டும். சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரம் கழித்து, தூங்க வேண்டும். சாப்பிடும் முன்பும், பின்பும் கடவுளுக்கு நன்றி கூற மறக்காதீர்கள். நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்.
Average Rating