ஓர் எறியில் இரு கனிகள்: தமிழ் பேசும் மக்களின் அரசியலில் சாத்தியமா?..!! (கட்டுரை)
அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டிக்கின்றன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். பொதுவாகவே, அரசமைப்புத் திருத்தம் தொடர்பாக, எப்போதும் இவ்வாறான விவாதங்களும் விமர்சனங்களும் உருவாகுவதுண்டு.
அதிலும், இனமுரண்களும் இனப்பகையும் ஜனநாயகப் பற்றாக்குறையும் அதிகாரக் குவிப்பும் பாரபட்சங்களும் மலிந்திருக்கும் நாட்டின் அரசமைப்புத் திருத்தத்தில் விவாதங்கள் நடக்காமலிருக்க முடியுமா? ஆகவேதான், இந்த விவாதங்களும் விமர்சனங்களும் நடக்கின்றன.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இடைக்கால அறிக்கை முழுமையானதோ இறுதியானதோ அல்ல. இது ஓர் உத்தேச அறிக்கை அல்லது தொடக்க நிலை அறிக்கை மட்டுமே.
ஆனால், இந்த அறிக்கை தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையளிக்கும் விதமாக அபிப்பிராயப்பட்டுள்ளார்.
“தமிழ்க் கட்சிகள் தமது பாரம்பரிய நிலைப்பாட்டைத் தளர்த்தி, புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளன. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடிந்துள்ளது. போர் நடைபெற்ற காலத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் ஒரே தேசமாக இருக்கவேண்டுமென பேசி வந்தனர். இந்த நாட்டுக்கு சமஷ்டி முறையிலான ஆட்சியதிகாரம் தேவையெனத் தெரிவித்து வந்தனர். தற்போது நல்லாட்சி அரசாங்கத்தில் அது சாத்தியமாகியுள்ளது.
அத்துடன், பிரதான இரண்டு கட்சிகளும் அறிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. இடைக்கால அறிக்கையின்படி உயரிய அதிகாரப் பகர்வு, நாடாளுமன்றத்துக்கு மேலாக செனட் சபையொன்றை உருவாக்குதல், மனித உரிமை முறையொன்றை ஸ்தாபித்தல், சுயாதீன நீதித்துறையை உருவாக்குதல், யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியேற்றுதல், ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பௌத்தத்துக்கு முன்னுரிமையளித்தல் போன்ற விடயங்களை கருத்தில் கொள்ளத் தயார் எனத் தமிழ்க் கட்சிகள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் இவ்வாறான கருத்தை அவர்கள் தெரிவிக்கவேயில்லை” என்று கூறியிருக்கிறார் பிரதமர்.
இவ்வாறு பிரதமர் தெரிவித்திருப்பதன் மூலமாக, தற்போதைய ஆட்சியானது வெற்றிகரமான, திருப்திகரமான ஓர் ஆட்சியாக உள்ளது என்பதை நிறுவ முற்பட்டிருக்கிறார்.
தவிர, “தமிழ்க்கட்சிகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, புதிய அரசமைப்பின் வழியாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இணங்கியுள்ளன” என்று கூறியிருப்பதன் மூலமாக, நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ்த்தரப்புக்கு முழுமையான நம்பிக்கை உண்டென்று காட்டியிருக்கிறார்.
குறிப்பாக, “பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சாசனத்தைத் தமிழ்த்தரப்பு அங்கிகரிப்பதாக”க் கூறியிருப்பதன் மூலமாக, எதிர்த்தரப்பைத் தாம் கட்டுப்பாட்டுக்குள்ளும் இணக்கத்துக்குள்ளும் கொண்டு வந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனால்தான், “இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு கருத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை” என அழுத்தமாகக் குறிப்பட்டிருக்கிறார்.
இது பல உள்ளார்த்தங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷ போரின் மூலம் தமிழர்களுடைய அரசியல் போராட்டத்தை முறியடித்து வெற்றி கண்டிருந்தார். இருந்தாலும், அவரால் போருக்குப் பிந்திய சூழலைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை. அதனால் போரின் பின்னர், இனப்பிரச்சினையைத் தீர்க்க வழியேற்படவில்லை.
இப்போது, தாம் தமிழர்களை அரசியல் ரீதியாக இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வந்து, அவர்கள் பௌத்தத்துக்கு முன்னுரிமை அளிக்கும் சாசனத்தை அங்கிகரிக்குமளவுக்கு ஆக்கியுள்ளோம்.
அதன் வழியான தீர்வுக்கும் இணங்குவதற்கு தமிழ்த்தரப்பை வெற்றிகொண்டிருக்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார் பிரதமர். ஆகவே, ராஜபக்ஷக்கள் எட்டமுடியாத வெற்றியின் இலக்கைத் தாம் எட்டிவிட்டதாகக் காட்ட முற்பட்டிருக்கிறார் ரணில்.
இதுவரையான, தமிழ்த்தரப்பின் இழுபறிகள், எதிர்நிலைப்பாடு, சம்மதமற்ற நிலை எல்லாவற்றையும் தாம் வெற்றிகரமாகக் கையாண்டு வழிக்குக் கொண்டு வந்து விட்டதாகக் கருதுகிறார் பிரதமர். இதையிட்டு அவருக்குப் பெரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.
ஆனால், இது சாத்தியமானதாக இருக்குமா? ஏனென்றால், எதிர்த்தரப்பில் மஹிந்த ராஜபக்ஷவின் எதிரணி பலமான முறையில் எதிர்ப்பரப்புரைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக இனவாதத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு எதிரணி முயற்சிக்கிறது. எதிரணியை முறியடிக்கக்கூடிய வேலைத்திட்டத்தை நல்லாட்சி அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பிற கட்சிகளும் முயற்சித்திருக்கின்றனவா? இல்லையே. அப்படியென்றால், என்ன நடக்கப்போகிறது?
இதேவேளை, இந்த இடைக்கால அறிக்கை, திருப்திகரமாக உள்ளதாகப் பச்சைக் கொடி காட்டியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. “புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கை, முற்போக்கானது என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது” என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
ஆனால், அதனுடைய பங்காளிக் கட்சிகளுக்கிடையே வழமையைப்போல முரண்பாடுகளும் முனகல்களும் உள்ளே ஒலித்துக் கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம். இந்த முனகல்களையெல்லாம் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் ஒருபோதுமே பொருட்படுத்திக் கொள்வதில்லை என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.
வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தவராஜா, இந்த அறிக்கையை ஏற்றுள்ளார். இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு, மேலும் முன்னேற முடியும் என்பது அவருடைய நம்பிக்கை. இதையும் இழந்தால் எதிர்காலத்தில் இதையும் விட கால தாமதத்தையும் அரசியல் வீழ்ச்சியையுமே சந்திக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. தமிழ் இடதுசாரிக்கட்சிகள் இதைக் குறித்து இன்னும் கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், “இந்த அறிக்கையை முற்றாகவே நிராகரிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன். தமிழ் மக்கள் பேரவையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட இந்த அறிக்கையை ஏற்கும் என்றில்லை. ஏனென்றால், தாயகக் கோட்பாடான வடக்கு, கிழக்கு இணைப்பு, சுய நிர்ணய உரிமை அல்லது கூட்டாட்சி போன்ற எதற்கும் இந்த அறிக்கையில் இடமளிக்கப்படவில்லை என்பதேயாகும்.
இதைவிட, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களையே நடைமுறைப்படுத்துவதற்கான தென்னிலங்கைச் சூழல் உண்டா என்ற கேள்வியையும் அவை எழுப்புகின்றன.
சிங்கள இனவாத மனப்பாங்கில் மாற்றங்களை ஏற்படுத்தாமல், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், அரசாங்கம் தெரிவித்திருக்கும் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லை என்பது இவற்றின் வாதம்.
குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஷவின் எதிரணிக்குப் பயந்து கொண்டேயிருக்கும் இந்த அரசாங்கத்தினால் எப்படி மெய்யான மாற்றங்களை உருவாக்க முடியும்? என்று கேட்கின்றன இவை.
எனவே, இவை இந்த அறிக்கைக்கும் இதை ஆதரிக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் எதிரான பரப்புரையைத் தமிழ் மக்களிடத்திலே முன்னெடுக்கும் வாய்ப்புகளுண்டு.
இதனால் ஒரு நெருக்கடி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உருவாகலாம். இதை முறியடிக்கும் விதமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகிறது என்று தெரியவில்லை.
ஏற்கெனவே இரண்டு, மூன்று தடவைகள் இந்த அறிக்கை தொடர்பான விளக்கத்தைத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களுக்கு அளித்துள்ளார் சுமந்திரன். பங்காளிக் கட்சிகளுக்கு விளக்கமளிக்க வேண்டியதும் அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் சம்மந்தனின் பொறுப்பு.
அவருடைய பாணி, எப்போதும் இறுதி நேரத்தில் அதிரடியாக நடவடிக்கைகளை எடுப்பதே. அதுவரை எல்லாக் கூத்துகளுக்கும் எல்லா விவாதங்களுக்கும் அவர் தாரளமாகவே இடமளிப்பார்.
ஆனால், இதெல்லாவற்றுக்கும் அப்பால் இந்த இடைக்கால அறிக்கையை எப்படித் தமிழ்த்தரப்பு எதிர்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது. அரசமைப்புத்திருத்தம் பற்றிய பேச்சுகள் நடந்து கொண்டிருக்கும் இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஒரு தடவை கூட தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எத்தகைய தீர்மானங்களையும் எடுக்கவில்லை. இதுவே அடிப்படையில் பலவீனமானது. இந்தப் பலவீனத்தையே சிங்களத்தரப்பு வெற்றிகரமாகக் கையாள்கிறது. இப்போதும் கூடப் பலரும் சிங்கள இனவாதத்தைத் தோற்கடிக்கும் பொறிமுறைய அரசாங்கம் உருவாக்கவில்லை என்றே குற்றம் சாட்டுகின்றனர்.
அரசாங்கத்துக்கு இதில் பொறுப்புண்டு என்பது உண்மையே. ஆனால், அந்த அரசாங்கத்தை இயக்குவது யார்? அரசியல்வாதிகள்தானே. எந்த அரசியல்வாதிகள்? அல்லது எத்தகைய அரசியல்வாதிகள்? இனவாதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்து, அதன் மூலம் அரசியல் அதிகாரத்துக்கு வந்த அரசியல்வாதிகளல்லவா! ஆகவே, அவர்களால் ஓர் எல்லைக்கு மேல் செல்ல முடியாது. அதை எதிர்பார்க்கவும் முடியாது என்பது தெளிவாகவே தெரிந்தது.
எனவே இந்த இடத்தில் அரசாங்கத்தையும் ஐ.தே.க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, தென்னிலங்கை மக்களிடம் பிரச்சினையை விளக்க வேண்டிய பொறிமுறையைத் தமிழ்த்தரப்புகள் முயற்சிக்க வேண்டும். இதற்காகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிற சக்திகளுடன் கைகோர்க்க வேண்டும். இதற்கு முன்பு அது பங்காளிகளுக்கிடையில் உள்ள பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வது அவசியம். விக்னேஸ்வரன் உள்பட ஏனைய அரசியல் சக்திகள் அனைத்தும் தென்னிலங்கை இனவாதத்தை எப்படி முறியடிப்பது என்பதில் ஒரு பொதுச்சிந்தனைக்கும் பொது வேலைத்திட்டத்துக்கும் வருவது அவசியம்.
இல்லையென்றால், எத்தகைய அருமையான நிறைவான திட்டத்தையும் இனவாதச் சக்திகள் குழப்பியே தீரும்.
ஆகவே, பிரச்சினைகளோடு வாழ்கின்ற மக்கள்தான் தங்கள் பிரச்சினைகள் தீருவதற்கான வழிமுறைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். ‘காகம் திட்டி மாடு சாகாது’ என்ற மூத்தோர் வாக்கு நினைவில் கொள்ளத்தக்கது. இடைக்கால அறிக்கையை முழுமைப்படுத்துவதும் தென்னிலங்கை இனவாதத்தை முறியடிப்பதும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அவசியங்களாகும்.
Average Rating