விக்னேஸ்வரன் – மகாநாயக்கர்கள் சந்திப்பு: நாட்டுக்கு இன்று தேவையானது..!! (கட்டுரை)
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2017) இலங்கையின் இரண்டு பௌத்த பீடங்களின் மகாநாயக்கர்களுடனும் சந்திப்புகளைச் செய்திருந்தார். இந்தச் சந்திப்புகள் இலங்கையின் அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றிருந்தன.
இது தொடர்பாக இலங்கையின் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பல்வேறு கோணங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தன. கடந்த சில நாட்களாக இந்தச் சந்திப்புகளைப் பற்றித் தமிழ்த்தரப்பிலும் சிங்களத்தரப்பிலுமாக அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் தாராளமாகப் பல ஆய்வுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னும் இந்த அலை ஓயவில்லை.
தமிழ் ஊடகங்களில் விக்னேஸ்வரனின் இந்தச் சந்திப்பு முயற்சியைப் பற்றிச் சற்றுத் தூக்கலாகப் பேசப்படுகிறது. இதற்குக் காரணம், இன்றைய அரசியல் சூழலில் தமிழ் அரசியலை முன்னெடுக்கும் தலைவர்களில் ஒருவரான விக்னேஸ்வரன், இப்படி மகாசங்கத்தினரைச் சந்தித்துப் பேசியிருப்பதேயாகும். ஏற்கெனவே செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமான ஒரு காரியத்தை இப்போதாவது விக்னேஸ்வரன் செய்திருக்கிறார் என்பது தமிழ்தரப்பிலுள்ள பலருடைய அபிப்பிராயம்.
விக்னேஸ்வரனுக்கு முன்பாக இந்தச் சந்திப்பைச் செய்திருக்க வேண்டியது சம்பந்தனே. தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் இருப்பதால் அவர் இத்தகைய சந்திப்புகளைச் செய்திருக்க வேண்டும்.
அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடையாளமும் அந்தச் சந்தர்ப்பமும் உருவாக்கியிருந்தது. மட்டுமல்ல, சம்பந்தனுடைய மென்னிலை அடையாளமும் இதற்கு வாய்ப்பானது.
விக்னேஸ்வரனை விட ஒப்பீட்டளவில் தீவிரத் தன்மை குறைந்த – இணக்கமான நிலைப்பாட்டைக் கொண்டவர் சம்பந்தன் என்பது பலருடைய அபிப்பிராயமாகும். இதற்காகச் சம்ப ந்தன் தீவிர மனநிலையுடைய தமிழ்த்தரப்பினரால் கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.
அப்படித் தமிழ்ச் சமூகத்தில் ஒரு தொகுதியினரின் எதிர்ப்பைப் பகிரங்கமாகவே சந்தித்துக் கொண்டிருக்கும் சம்பந்தன், நிச்சயமாகத் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து துணிகரமாகப் பல காரியங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அப்படிச் செய்திருந்தால், இன்றைய நெருக்கடிகள் பலவற்றிலிருந்து சம்பந்தனும் கூட்டமைப்பும் விடுபட்டிருக்கும். இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளும் சற்று முன்னகர்ந்திருக்கும். சம்பந்தனுடைய முயற்சிகளுக்கு ஓரளவுக்கேனும் மதிப்பளிப்பதற்கு சிங்கள, முஸ்லிம் மக்களும் தயாராக உள்ளனர்.
இதைப் புரிந்து கொண்டு செயற்படவில்லை என்றால், மிகுந்த சவால்களின் மத்தியில் சம்பந்தன் எடுத்த நிலைப்பாட்டுக்கு எந்தப் பயனும் கிட்டப்போவதில்லை. பதிலாக அது பயனற்ற ஒன்றாகவும் தமிழ் மென்னிலைவாதம் என்பது பொருத்தமற்றது என்ற எதிர்மறை அடையாளமாகவும் இருந்து விடும். மட்டுமல்ல, தேவையற்ற எதிர்ப்பையும் தமிழ் மக்களிடமிருந்து அவர் சம்பாதித்ததாகவும் அமையும்.
சம்பந்தனை முந்திக்கொண்டு அல்லது சம்பந்தனின் தாமதத்தை வாய்ப்பாக எடுத்துக் கொண்டு விக்னேஸ்வரன் மகாநாயக்கர்களைச் சந்தித்திருக்கிறார். சம்பந்தனின் அரசியல் இடைவெளிகளையே விக்னேஸ்வரன் பயன்படுத்தி வருகிறார் என்பதை நாங்கள் இங்கே கவனிக்க முடியும். அந்த வகையிலேயே விக்னேஸ்வரனின் இந்த மகாநாயக்கர்களின் சந்திப்பும் அமைந்துள்ளது. எப்படியோ இந்தச் சந்திப்பை நாம் வரவேற்க வேண்டும்.
அரசாங்கத்துக்கு அப்பாலுள்ள சிங்கள, முஸ்லிம் சக்திகளுடன் தமிழர்கள் பேசவேண்டும். அப்படிப் பல்வேறு தரப்பினருடனும் தொடர்ச்சியாக நடத்துகின்ற உரையாடல்களே இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வைச் சாத்தியப்படுத்துவதற்கு உதவும் என்பது யதார்த்தம்.
ஆகவே, விக்கினேஸ்வரன் – மகாசங்கத்தினர் சந்திப்புகளை வரவேற்பது நியாயமானதே. எனவே அந்த வகையில் இந்தத் தூக்கலான வரவேற்புக்கு நியாயமுண்டு.
ஆனால், விக்னேஸ்வரனும் அவருடைய அணியும் இந்தச் சந்திப்புகளை எப்படிக் கையாண்டன? இந்தச் சந்திப்புகளின் போது பேசப்பட்ட விடயங்கள், பேச்சுகளில் ஈடுபட்ட அஸ்கிரிய பீடத்தினரும் மல்வத்த பீடத்தினரும் எப்படி நடந்து கொண்டனர்?
விக்னேஸ்வரன் தரப்பு எப்படி நடந்து கொண்டது? இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த சிங்கள அரசியல் ஆய்வாளரான குசல் பேரேரா போன்றவர்களின் நிலைப்பாடும் செயற்பாடுகளும் எப்படி இருந்தன? இந்தச் சந்திப்புகளின் விளைவுகள் என்னவாக உள்ளன? அத்துடன் சிங்கள ஊடகங்களாலும் ஆய்வாளர்களாலும் இந்தச் சந்திப்புகள் எவ்வாறு நோக்கப்படுகிறது? தமிழ் அரசியல் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் இந்தச் சந்திப்புகளின் பின்னர் இதை நோக்கும் விதம் எப்படியிருக்கிறது? என்பதெல்லாம் கவனத்துக்குரியது.
சிங்களத் தரப்பின் மனதில் விக்னேஸ்வரனின் இன்றைய அடையாளம், மிதவாத அரசியல் தளத்தைச் சூடாக்கிக் கொண்டிருப்பவர் என்பதே. தமிழர்களில் ஒரு தொகுதியினரிடத்திலும் விக்னேஸ்வரனைக் குறித்து இப்படியான அபிப்பிராயமுண்டு. யதார்த்தத்துக்கு வெளியே சிந்திக்கும்போது எவரிடத்திலும் இந்தத் தீவிரத் தன்மை உருவாகிறது.
சிங்களத்தரப்பிலும் இவ்வாறான ஆட்கள் தாராளமாக உண்டு. அதிகமேன், சிங்களத் தரப்பிலுள்ள அநேகமான சக்திகளும் மிதவாத அரசியலைச் சூடாக்கி வன்நிலைக்குக் கொண்டு செல்கின்றவையே.
ஆகவே, இப்படியான ஓர் அடையாளத்தைக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் மகாநாயக்கர்களைச் சந்திக்கும்போது, அவரைப் பற்றிய ஒரு முன்னபிப்பிராயம் மகாசங்கத்தினரிடம் நிச்சயமாக இருந்திருக்கும்.
இது இயல்பானது. அதன்படியே அவர்கள் விக்னேஸ்வரனுடனான சந்திப்புகளை மேற்கொள்வதற்கு முயற்சித்திருக்கிறார்கள். மிக எச்சரிக்கையாக விக்னேஸ்வரனைக் கையாள முற்பட்டிருக்கின்றனர். இதற்கு இன்னொரு காரணம், விக்கினேஸ்வரன் தன்னுடன் அழைத்துச் சென்றவர்களாகும்.
இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த பேராசிரியர் சிவநாதனும் கலாநிதி திருக்குமரனும் பங்குபற்றியிருக்கிறார்கள். கூடவே, வடமாகாண அமைச்சர் அனந்தியும் உறுப்பினர் சிவநேசனும் பங்குபற்றியிருக்கிறார்கள். அனந்தியை அழைத்துச் சென்றது மிக அவசியமான ஒன்றே. அவர் காணாமலாக்கப்பட்ட கணவனின் மனைவி என்பதுடன் வடமாகாண அமைச்சர்களில் ஒருவராகவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகவும் இருக்கிறார்.
சிவனேசனும் மாகாணசபை உறுப்பினர் என்றவகையில் பொருத்தமானவர். ஆனால், பொருத்தமற்ற விதத்தில் சிவநாதனையும் திருக்குமரனையும் அழைத்துச் சென்றதன் மூலமாக தன்னுடைய தீவிர அடையாளத்தை மேலும் கூர்மையாக்கியிருக்கிறார். இதனால் சந்திப்புகள் எதிர்மறை நிலையை நோக்கியே செல்ல முற்பட்டுள்ளன.
அடுத்து இந்தச் சந்திப்புகளில் விக்னேஸ்வரன் தமிழர்களின் அரசியல் கோரிக்கையைப் பற்றியும் அதற்கான நியாயப்பாடுகளையும் விளக்கியிருக்கிறார். குறிப்பாகச் சமஷ்டியைப் பற்றிப் பேசியிருக்கிறார். சமஷ்டியைப் பற்றித் தமிழர்கள் சிந்திப்பதற்கு முன்பே சிங்களத்தரப்பினரே அதைப்பற்றிப் பேசியுள்ளனர். இலங்கையில் சமஷ்டி அமைப்பே தீர்வுக்கான வழி என்றும் கூறியுள்ளார். மல்வத்தை பீடத்தில் இதைக்குறித்த விவாதங்கள் அதிகம் நிகழவில்லை. பதிலாக போரின் விளைவுகள் உண்டாக்கிய பாதிப்புகள் என்ற வகையிலேயே மகாநாயக்க தேரர் பேசியிருக்கிறார். இதன்மூலம் விக்னேஸ்வரனுக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து, ஒரு இராஜதந்திரியாக நடந்திருக்கிறார்.
அடுத்த சந்திப்பு அஸ்கிரிய பீடத்தில் நடந்தது. அங்கே ஏற்பாடுகளும் சற்று வேறாகவே இருந்துள்ளன. விக்னேஸ்வரன் அங்கும் தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கினார். வடக்கு மாகாணசபையை அரசாங்கம் நோக்கும் விதத்தைப்பற்றியும் அதனால் தமக்கு ஏற்படும் நெருக்கடிகளைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
இதற்குப் பிறகு மகாநாயக்கரும் பிற பிரதிநிதிகளும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுகளின்போது ஏறக்குறைய இரண்டு தரப்பும் மென்னிலையில் பரஸ்பரக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றன. அரசாங்கத்தின் குறைபாடுகள், சிங்கள பௌத்த மேலாதிக்கத்தன்மை என்ற அடிப்படையில் விக்னேஸ்வரன் தரப்புப் பேசும்போது, இலங்கைத்தீவின் பொதுப்பிரச்சினைகளுடன் தமிழர்களின் விடயத்தையும் இணைத்துப் பார்ப்பதிலேயே மகாநாயக்கர் தரப்புக் குறியாக இருந்துள்ளன. ஒரு கட்டத்தில் நாடு முழுவதிலும் இந்துக் கோவில்களுக்கோ கிறிஸ்தவத் தேவாலயங்களுக்கோ இடமளிக்கப்பட்டிருப்பதைப்போல விகாரைகளுக்கும் இடமளிப்பதில் என்ன பிரச்சினை என்ற தொனியில் மகாநாயக்கர் தரப்பிலிருந்து ஒருவர் கேட்டிருக்கிறார். எனினும் சந்திப்பு எந்த நிலையிலும் சூடாகவில்லை என்பது அதிர்ஷ்டவசமானது.
சந்திப்புகளின்போது, தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்மொழிவை விக்னேஸ்வரன் மகாநாயக்கர்களிடம் கொடுத்துள்ளார். இதை விக்னேஸ்வரனை அழைத்துச் சென்ற குசல் பெரேரா விரும்பியிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. உண்மையும் அதுதான்.
இந்தச் சந்திப்புத் தொடக்க நிலையிலானது. இதை மேலும் அடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று நட்புறவை வலுப்படுத்திக் கொண்டு, அந்த நட்புறவில் உண்டாகக்கூடிய உரையாடல்களின் வளர்ச்சிக் கட்டத்தில் இதைக் கொடுத்திருக்கலாம் என்பதே சரியானது.
ஓர் அரசியல் விவேகி அப்படித்தான் செய்திருப்பார். எடுத்த எடுப்பிலேயே முதலிலேயே ஒரு பாரத்தை மடியில் இறக்க மாட்டார். அப்படி இந்த முன்மொழிவைக் கொடுக்காமல், சிநேகபூர்வமாக உரையாடி, மீண்டும் வாருங்கள் அல்லது நாங்கள் அங்கே வருகிறோம் என்று விக்னேஸ்வரனிடம் மகாநாயக்கர்கள் கூறும்படி விக்னேஸ்வரன் நடந்திருந்தால், அதன் மதிப்பு பன்மடக்கு அதிகமாகியிருந்திருக்கும்.
மகாநாயக்கர்களின் மனப்பதிவுக்கு மாறாக, விக்னேஸ்வரன் வேறு விதமாக நடந்திருந்தால், அது ஓர் அரசியல் அதிர்ச்சியாகவே மாறியிருக்கும். ஆனால், தமிழ்த்தரப்பின் பாரம்பரிய முறைப்படி, எல்லாவற்றையும் நேரடியாகவும் உடனடியாகவும் செய்வதன் மூலம் இந்தச் சந்திப்பை வெறுமனே சம்பிரதாயச் சந்திப்பாக மாற்றிவிட்டார் விக்னேஸ்வரன்.
மிகக் கடினமாக எடுக்கப்பட்ட ஒரு முயற்சியும் முதன் முயற்சியும் பயனைத் தரத் தவறியதாகவே அமைந்து விட்டது. இதுவே இந்தச் சந்திப்புகளின் பலவீனமும் தோல்வியுமாகும்.
இப்போது நடந்து கொண்டிருப்பது மகாசங்கத்தினரின் நடவடிக்கைகளைப்பற்றிய தமிழ்த்தரப்பின் வாதங்களும் விக்னேஸ்வரன் தரப்பின் அணுகுமுறை பற்றிய சிங்களத்தரப்பின் வாதங்களுமே. விக்னேஸ்வரனுடனான சந்திப்பின்போது மகாசங்கத்தினர் அவ்வளவு உவப்பாக நடந்து கொள்ளவில்லை என்று தமிழ்த்தரப்புக் குறைப்பட்டுக் கொள்கிறது.
மகாநாயக்கர்கள் சூடாக விக்னேஸ்வரனுக்குப் பதிலளிக்கவில்லை என்று சிங்களத்தரப்பில் கூறப்படுகிறது. இது இரண்டுமே தவறானது. இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். இலங்கையின் எதிர்காலமும் பாதுகாப்பும் அதில்தான் உள்ளது என்ற விளக்கத்தை உள்ளவர்கள் இப்படிச் செய்ய மாட்டார்கள்.
அவர்கள் இரண்டு தரப்பையும் மேலும் ஊக்கப்படுத்தி, உள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிப் புதியதொரு சுமுகச் சூழலை உருவாக்குவதைப் பற்றியே சிந்திப்பர். அந்த அடிப்படையிலேயே விவாதிப்பர். அதுவே நாட்டுக்கு இன்று அவசியமானது.
Average Rating