ஒரே படத்தில் 3 தலைமுறை..!!
ஏ.என்.ஆர் (எ) அக்கினேனி நாகேஸ்வர ராவ் பற்றி, கொஞ்சம் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. சி.என்.அண்ணாதுரை எழுத்தில் உருவான `ஓர் இரவு’, தமிழ்-தெலுங்கில் பைலிங்குவலாக வெளியான `தேவதாஸ்’, ஸ்ரீதர் எழுத்தில் உருவான `மாதர் குல மாணிக்கம்’ என, சில தமிழ்ப் படங்கள் மூலம் நாகேஸ்வர ராவ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவரே! இவருக்குப் பிறகு அவரது மகன் நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் என இப்போதைய தெலுங்கு சினிமாவில் இந்தக் குடும்பத்தின் பங்கும் முக்கியமானது.
ஐந்து மகன்களில் நாகேஸ்வர ராவ் கடைசிப் பையன். குடும்பப் பின்னணி காரணமாக, ஆரம்பப் படிப்புடன் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்ட நாகேஸ்வர ராவுக்கு, நாடகம் மீது ஆர்வம் வந்தது. நாடகங்களில் ஆண்களே பெண்கள் வேடமிட்டு நடித்துக்கொண்டிருந்த காலம் அது. நாகேஸ்வர ராவுக்குப் பெரும்பாலும் கிடைப்பது பெண் வேடம்தான். பல நாடகங்களில் நாயகியாக நடித்த பிறகுதான் நாயகன் வேடமே கிடைத்தது.
அப்படி அவர் நாயகனாக நடித்த ஒரு நாடகத்தை தயாரிப்பாளர் கண்டசாலா பாலராமையா பார்க்கநேர்ந்தது. அதே வேளையில் `தர்மபத்தினி’ படத்தில் நாயகனின் நண்பனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டாவது பட வாய்ப்பு கண்டசாலா பாலராமையா மூலம் கிடைத்தது. இப்படி சில படங்களிலேயே நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. `தேவதாஸ்’, `அனார்க்கலி’, `பிரமபிஷேகம்’ என பல ஹிட் படங்கள் மூலம் பெரிய அளவில் தனக்கான ரசிகர்களைப் பெற்றார் ஏ.என்.ஆரின் இரண்டு மகன்கள் மூன்று மகள்களில் சினிமாவுக்கு வந்தது, இரண்டாவது மகனான அக்கினேனி நாகார்ஜுனா மட்டுமே.
`ஆதி தாம்பத்லு’ என்ற படத்தில் ஏ.என்.ஆர் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த சமயம். அந்த நேரத்தில்தான் அவரது மகன் நாகார்ஜுனா ஹீரோவாக அறிமுகமாகும் `விக்ரம்’ படமும் தொடங்கியது. தொடர்ந்து அவர் நடித்த `மஜ்னு’, `சங்கீர்த்தனா’ என அடுத்தடுத்த படங்களும் மிகப்பெரிய ஹிட். நாகார்ஜுனாவின் பெர்ஃபாமன்ஸ் வித்தியாசமாக இருந்தது. மிக இலகுவாகப் பேசும் வசனங்கள், சென்டிமென்ட்டோ, காமெடியோ, காதலோ எதுவாக இருந்தாலும் இவர் நடிக்கும்போது எந்த உருத்தலும் இல்லை.
மணிரத்னம் இயக்கத்தில் `கீதாஞ்சலி’ படத்தில் நடித்தபோது ரசிகர்களுக்குப் பிடித்துப்போனது. காதல் படங்கள் மூலம் ஏற்படுத்திய விஷயங்களை ஆக்ஷன் படங்கள் மூலம் நடத்திக்காட்டியதால், ரசிகர்களுடன் மிக இயல்பாக இணைந்தார் நாகார்ஜுனா. தொடர்ந்து பக்திப் படங்கள் மூலம் குடும்பங்களுக்குள்ளும் சென்றார். சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே லட்சுமி (நடிகர் வெங்கடேஷின் சகோதரி) மூலம் நாக சைதன்யா, நடிகை அமலா மூலம் அகில் என இரண்டு மகன்கள் இவருக்கு.
நாக சைதன்யா அறிமுகமாகும்போது, நாகார்ஜுனாவும் பக்கா அதிரடிப் படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். சைதன்யாவின் அறிமுகப் படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த `ஏ மாய சேசாவே’ (விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷன்) படம் மிகப்பெரிய ஹிட்டானது. அடுத்த படமான `100% லவ்’ படமும் பெரிய வெற்றி. “சரி பையன் வந்திடுவான்” என நாகார்ஜுனாவும் நிம்மதியானார்.
அக்கினேனி குடும்பத்துக்கும் டகுபதி குடும்பத்துக்கும் இப்போதும் உறவு உண்டு, நாக சைதன்யா மூலம். உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்து `ப்ரேமம்’ படத்தில் வெங்கடேஷ் (சைதன்யாவின் மாமா) கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். குடும்பத்தில் இன்னொருவர் இருக்கிறாரே, அவரின் என்ட்ரிக்கு விக்ரம் கே குமார் புத்திசாலித்தனமாக ஒரு விஷயம் செய்தார்.
நாகேஸ்வர ராவ், நாகார்ஜுனா, சைதன்யா என மூன்று தலைமுறைகளையும் இணைத்து விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடித்த படம் `மனம்’. அது, இந்தக் குடும்பத்தின் பொக்கிஷம் என்றுகூட சொல்லலாம். மூன்று தலைமுறைகளையும் ஒரே படத்தில் இணைத்து படம் எடுத்திருந்தார் விக்ரம். ஆந்திரத் திரையுலகினரும் பொறாமைப்படும்படி வெற்றிபெற்றது இந்தக் குடும்பச் சித்திரம்.
படத்தின் க்ளைமாக்ஸில் நாகார்ஜுனாவையும் சைதன்யாவையும் விபத்திலிருந்து காப்பாற்றுபவராக அகிலை நுழைத்திருந்தார் விக்ரம். சரி, முழு ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதற்காக வி.வி.விநாயக் இயக்கத்தில் `அகில்’ படம் மூலம் அறிமுகப்படுத்தினார் நாகார்ஜுனா. பிரமாண்டமாக உருவான படம், பிரமாண்டமான தோல்விப் படமாக மாறியது. மகனுக்கு ஒரு ஹிட் படம் கொடுக்குமாறு விக்ரம் குமாரை நாகார்ஜுனா அணுக, `ஹலோ’ படம் உருவாகிவருகிறது. இந்தப் படம் மூலம் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது என நாகார்ஜுனா போல் நாமும் நம்புவோம். அடுத்த பாகத்தில் இன்னொரு குடும்பம்.
Average Rating