எலும்புகளைக் காப்பது எப்படி?..!!
நம் உடம்பு என்ற கட்டிடத்தைத் தாங்கும் கம்பிகள் எலும்புகள்தான். அவை பலவீனமாகும்போது, உடல் கட்டுறுதியே பாதிக்கப்படுகிறது.
எலும்புகள் ஏன் பலவீனமாகின்றன? அதற்கு, உண்ணும் உணவுகள், குடிக்கும் நீரின் அளவு, மனஅழுத்தம், உடலியக்கம் போன்றவை காரணமாகின்றன.
குறிப்பாக வயதான காலத்தில் எலும்புகள் இயல்பாகவே பலவீனம் அடைகின்றன. வயதான காலத்தில் அந்த நிலை ஏற்படாமல் தடுக்க, இளம் வயதில் இருந்தே எலும்புகளுக்கு பாதுகாப்பும் வலிமையும் அளிக்கும் செயல்களில் ஈடுபட்டு வர வேண்டும்.
அந்தச் செயல்பாடுகள் பற்றிப் பார்க்கலாம்…
நம் அன்றாட உணவில் போதுமான கால்சியம் இருக்க வேண்டும். எலும்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்துக்கும் கால்சியம் மிகவும் இன்றியமையாதது. கால்சியச் சத்து குறைந்தால், எலும்புகளின் அடர்த்தி குறைந்து, எளிதில் எலும்பு முறிவு நோய்க்கு உள்ளாகக்கூடும். எனவே சிறுவயதில் இருந்தே கால்சியம் நிறைந்த உணவுகளான பால் பொருட்கள், கீரைகள், புராக்கோலி, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.
தினமும் காலையில் சிறிது நேரம் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்களில், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு வேண்டிய வைட்டமின் ‘டி’ ஏராளமாக உள்ளது. ஆகவே வைட்டமின் ‘டி’யைப் பெற அச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை உண்பதோடு, சூரியக்கதிர்கள் படுமாறு அதிகாலையில் நடைபோட வேண்டும்.
உப்பை உணவில் அதிகம் சேர்த்துச் சாப்பிட்டால், சிறுநீரகத்தின் வழியே உடலில் உள்ள கால்சியச் சத்து வெளியேற்றப்பட்டுவிடும். கால்சியம் வெளியேறிவிட்டால், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகம் ஏற்படும். எனவே உணவில் உப்பு சேர்ப்பதை வயது அதிகரிக்க அதிகரிக்க குறைத்து வர வேண்டும்.
புகைபிடிப்பதால் நுரையீரல்தான் பாதிக்கப்படும் என்று கூற முடியாது. புகைபிடிப்பதால், எலும்புகள் கால்சியச் சத்தை உறிஞ்ச முடியாமல் போய், எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். ஆகவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதைக் கைவிட வேண்டும்.
புகைப்பழக்கம் போல மதுப்பழக்கமும் எலும்புகளின் வலிமையைப் பாதிக்கும். அதிக அளவு மது அருந்தினால், எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி, எலும்பு முறிவு அல்லது எலும்பு சம்பந்தப்பட்ட வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே, மதுவை தொடக்கூடாது.
அதிகம் சோடா பருகும்போது, ரத்தத்தில் பாஸ்பேட்டுகளின் அளவு அதிகரித்து, அதனால் எலும்புகளில் இருந்து கால்சியம் வெளியேறி, சிறுநீரில் கால்சியத்தின் அளவு அதிகரித்துவிடும். மேலும் சோடா பானங்களில் உள்ள பாஸ்பாரிக் அமிலம், எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், சோடா பானங்களைத் தவிர்த்திடுவது அவசியம்.
காபியில் உள்ள ‘காபீன்’, உடல் கால்சியம் சத்தை உறிஞ்சுவதில் இடையூறை ஏற்படுத்தி, எலும்புகளின் வலிமையைக் குறைக்கும். எனவே ஒரு நாளைக்கு 2 கப் காபிக்கு மேல் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எலும்புகள் வலிமையை இழந்து, கடுமையான பாதிப்புக்கு உள்ளாகக்கூடும்.
தினம் தவறாமல் உடற்பயிற்சி செய்வது, உடல் ஆரோக்கியத்துடன், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் காக்கும். தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, எலும்புகளும் நல்ல வலிமையையும், உறுதியையும் பெறும். ஆகவே உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்திட தினமும் எளிய உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ள வேண்டும்.
எலும்புகள் வலிமையானது போலத் தோன்றினாலும், அவற்றின் வலிமையைக் காக்க தகுந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து நடப்போம்.
Average Rating