உடல் நலத்தைக் காக்க சாப்பிடும் வழிமுறைகள்..!!

Read Time:16 Minute, 24 Second

201709151224145059_Instructions-to-preserve-health_SECVPFஉணவை “அன்னம்” என்பர்; இந்து தர்மப்படி அன்னம் என்பது பிரம்மம், “அன்னம் பரப்பிரம்ம சொரூபம்”. பிரசன்ன உபநிஷத் அன்னத்தைப் பிரம்மமாகச் சொல்கிறது; உணவிலிருந்து விதை வந்தது; அதிலிருந்து உயிர்கள் வந்தன.
உணவு ஜடராக்னியால் செரிக்கப்பட்டு, மூச்சுக்காற்றால் உடலின் எல்லா பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது; உறுப்புக்களின் தேவதைகளுக்குச் சமர்ப்பிக்கப்படுகிறது. நகம் முதற்கொண்டு ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தேவதை உரித்தானதாக இருக்கிறது என்று சொல்வர்.

நமது உடலைச் சுற்றி 5 கோஷங்கள் இருக்கின்றன. அவை அன்னமய கோஷம், பிராண மயகோஷம், மனோமயகோஷம், விஞ்ஞான மயகோஷம், ஆனந்தமய கோஷம் என்பனவாகும். இவற்றில் வெளிப்புறமாக இருப்பது அன்னமய கோஷம். நமது முன்னோர் ஸ்தூல சரீரத்தை அன்னமய கோஷம் என்பர். ஏனெனில் இது உணவால் ஆனது. இந்து மதத்தில் உணவு மிக முக்கிய இடம் வகிக்கிறது. கடவுளர்களை எழுப்பும் போது உணவு சமர்ப்பிக்கப்படுகிறது. முன்னோர்களுக்குச் சமர்பிக்கப்படுகிறது.

கோயில்களில் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. தர்ம காரியமாக ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்படுகிறது. பறவைகள் விலங்குகளுக்குக் கூடத் தரப்படுகிறது. சாப்பிடும் முன் ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டதெய்வங்களுக்குப் படைப்பர். அப்போது அந்த உணவிலுள்ள தீமைகளை அத்தெய்வம் நீக்கிவிடுவதாகச் சொல்வர்.

தைத்திரிய உபநிஷத்தில், வருணன், தன் மகன் பிருகுவிற்கு உணவைப் பற்றிக் கூறுவது, உணவின் மேன்மையைக் காட்டும்.
“உணவுக்கு உரிய மரியாதை தர வேண்டும், குறை சொல்லக்கூடாது. உணவை மறுக்கக்கூடாது, உணவை வீணாக்கக்கூடாது, நிறைய உணவை வைத்துக் கொண்டு வரும் விருந்தினருக்குக் கொடுக்க வேண்டும்” என்பதே அந்த அறிவுரை! மனித உடலில் உணவால் ஆக்கப்பட்ட காரணத்தால் வாழ்வில் உணவு மிக முக்கியமான இடத்தை பெறுகிறது. சரிவிகித உணவிற்கு இணையான மருந்தோ, பரிகாரமோ கிடையாது. ஆகவே சரிவிகித உணவு மிகச் சிறந்த மருந்தாகச் (உணவே மருந்து) சொல்லப்படுகிறது.

இன்று “டயட்டிஷியன்கள்”, ஊட்டச்சத்து நிபுணர்கள் உடற்பயிற்சி வல்லுனர்கள், அழகுக்கலை நிபுணர்கள் என பலதரப்பட்டவர்களும் உணவைப் பற்றிப் பேசுகிறார்கள். உடல்நலத்தைத் காப்பதில் உணவின் பங்கு மிக முக்கியம் என அனைவரும் அறிவர். ஆனால் ஒவ்வொரு தனி மனிதருக்கும், அவரவர் உடல், மனம் ஆகியவற்றின் அடிப்படையில், அவரவர்க்கும் பொருத்தமான உணவு என்ன என்பதை அறிந்து, செயல்படுத்த வேண்டும் என்பது அறியப்படாமல் இருக்கிறது. ஆயுர்வேதம் உணவு பற்றி விரிவாகப் பேசுகிறது.

பசிக்கு உணவு:
பசிக்கும்போது சாப்பிட வேண்டும் என்பது பொது நியதி. உடல் இயங்கத் தேவைப்படும் சக்தியைப் பெற உணவு தேவைப்படுகிறது என்று உடல் காட்டும் சங்கேத மொழியே பசி! இதற்கு முன் சாப்பிட்ட உணவு செரிமானம் முடிந்து, அடுத்த உணவுக்கு உடல் தயாராகி விட்டது என்பதற்குப் பசியே அறிகுறி!

விருப்பமான உணவுக்காக வரும் பசி:
என்ன உணவு என்பதைப் பொறுத்து, பசி வரக்கூடாது, நமக்குப் பிடித்தமானதாக இல்லாவிட்டால் கூட, அந்த உணவைச் சாப்பிடத் தோன்றுமானால், அதுவே உண்மையான பசி! பிடித்தமான உணவைப் பார்த்தவுடன் தோன்றுவது உண்மையான பசி அல்ல! ஒரு நல்ல விருந்தை மனம் எதிர்பார்க்கிறது என்பதுதான் உண்மை!

பொழுது போக்கிற்காக உண்பது:
பயணங்களின் போதும், தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் பார்க்கும் போதும், நண்பர்களுடனான சந்திப்பிலும், எதையாவது கொறிப்பது என்பது எழுதாத சட்டமாக இருக்கிறது. பெரும்பாலும் இந்த நேரங்களில் பொறித்த உணவுகளை உண்கின்றனர். இவை உடல்நலனுக்கு உகந்தவை அல்ல! நிறத்திற்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும், அதிக ருசிக்காகவும் ராசயனங்கள் இவற்றில் அதிகம் சேர்க்கப்படுகின்றன. மேலும் சாப்பிடும் அளவும் அதிகமாகிவிடும்.

உளவியல் காரணங்களுக்காக உண்பது:
மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற எதிர்மறை உணர்வுகளால் மனம் பாதிக்கப்பட்ட சமயத்தில், வேறு செயல்களில் மனதைச் செலுத்தி மடைமாற்றம் செய்ய உடல் முற்படுகிறது. இதற்குச் சுலபமான வழி என்னவெனில் கவனத்தைத் திருப்புவதுதான்! இவ்வாறு உண்பதால் சர்க்கரை அளவு கூடும். கொழுப்புச்சத்து கூடும். இதுவே தொடர்ந்தால் நீரிழிவு, இதயநோய் ஆகியவை வரலாம். உணவுகள் அப்போதைக்கு பாதித்த மனதுக்கு மறதியைத் தரும் அவ்வளவே! ‘மூட்’ மாறும்! பின்னர், உளவியல் பிரச்சினைகள் மேலும் அதிகமாகும் என்பதே உண்மை! இத்தகைய சந்தர்ப்பங்களில், மன உளைச்சலுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, அதைச் சரி செய்ய முயல்வதே நல்லது! யோகா, கவுன்சிலிங் போன்றவையும் உதவும்.

கட்டாயப்படுத்தி உண்ண வைப்பது:
குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய அதிக அக்கறை காரணமாக தாய்மார்களும், பாட்டிகளும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி, அதிகம் உண்ண வைக்கின்றனர்.

பொதுவாக குழந்தைகள் இயற்கையோடு அதிகம் இயைந்து இருக்கிறார்கள். அன்புடன் கொடுக்கும் உணவைக்கூட அவர்கள் மறுத்தால், உண்மையில் அவர்களுக்குப் பசியில்லை என்பதே பொருள். அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன.

இன்னொரு உளவியல் சார்ந்த பிரச்சினை சிறிய குடும்பங்களில் வருகிறது. இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவிடமுடியாமல் போகிறது. இந்த உறுத்தலை தவிர்க்க, தயார்நிலையிலுள்ள உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளின் உடல்நலமே கெடுகிறது. “சொந்த செலவில் சூன்யம் வைப்பது” என்பார்களே, அதைப்போல, தாங்களே தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களைக் கவனிக்க நேரம் ஒதுக்கவேண்டும்.

இதில் இன்னொரு வகை -நோயாளிகள்! நீரழிவு நோய், ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற நோய் உள்ளவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் மருந்து உட்கொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தந்த வேளையில் சாப்பிடச் சொல்லி நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். பசி இருக்கிறதா என்று கவனிப்பது இல்லை. பசியில்லாமல் சாப்பிடுவதால் ஆமம் (கழிவு) உண்டாகிறது. ஏற்கனவே இருக்கும் நோய்களை இன்னும் சிக்கலாக்குகிறது. எனவே உண்பது என்பது, எந்தவிதக் கட்டாயமும் இல்லாமல் இயல்பான நிகழ்வாக இருக்க வேண்டும். பசியிருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும் பசித்திரு! தனித்திரு!! விழித்திரு!!! என்பார் வள்ளலார்.

டயட்டிங்:
உடல் இளைக்க வேண்டும், பார்க்க உடல் கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்று இன்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதற்குச் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் மிகச்சிலரே! “ஆரோக்கியமான டயட்” என்று ஒரு டயட்டை முடிவு செய்து அதன்படி உண்ணத் தொடங்குகிறார்கள். தொடங்கும் முன் டயட்டின் நோக்கம் என்ன என்று பார்க்க வேண்டும். அது நமது பிரகிருதிக்குப் பொருத்தமானதா என்று கண்டறிய வேண்டும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எடைகுறைய வேண்டும் என்ற ஆர்வமும், அவசரமும், தீவிரநோய்களுக்கு வித்திடுகின்றன. முக்கிய சத்துக்களை இழக்கும் அபாயமும் நேர்கிறது. மேலும் மனதுக்குத் திருப்தியும், உடலுக்குச் சக்தியும் தராத எந்த முறையும் நீண்ட நாட்கள் பின்பற்றப்படமாட்டாது.

பசிக்கும்போது மட்டும் உண்ணுதல்:
பெரும்பாலான நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்டு பழகிய பழக்கம் காரணமாகவும், உணவு இடைவேளை வந்துவிட்டது சாப்பிட்டுத்தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும், அல்லது மிகுந்த வேலைப் பளுவிற்கிடையே கொறிக்க சிறிது நேரம் கிடைத்து விட்டது என்பதற்காகவும் உண்கிறோம். இதுபோன்ற சமயங்களில் பசி இருப்பதில்லை. பெரும்பாலும்,
முதலில் சாப்பிட்ட உணவு செரிமானம் முடிந்து, வயிறு காலியாக இருக்கும் போது பசிதோன்றும். அப்போதுதான் சாப்பிட வேண்டும். ஆனால் பசி தோன்றும் நேரங்களில் சாப்பிட முடியாமல் போகிறது. அதைச் சரி செய்ய, சாப்பிட நமக்குக் கிடைக்கும் நேரத்தில் பசி வந்து சாப்பிட ஓர் ஏற்பாட்டை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதாவது மதியம் 1 மணிக்கு உணவு இடைவேளை, அந்த நேரத்தில் மதிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், காலை உணவை அதற்குத் தகுந்தபடி சற்று முந்தி எடுத்துக் கொள்ளலாம். எளிதில் செரிமானம் ஆகி 1 மணிக்கு வயிறு காலியாகும்படியான உணவு களைக் காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பசியில்லாதபோது நேரம் கிடைத்தது என்பதற்காகச் சாப்பிட்டால் நோய்வாய்ப்பட நேரும்.

உடலின் தேவைக்கேற்ற அளவில் உணவு:
நமது வயிற்றை மூன்று பாகமாக கொள்ள வேண்டும். முதல் பாகத்தில் திட உணவும், இரண்டாம்பாகத்தில் திரவ உணவும், மூன்றாம் பாகம் காலியாகவும் இருக்க வேண்டும். செரிமானம் நடைபெறும்போது உணவின் அசைவுகளுக்குக் காலியிடம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு உணவுக்குமிடையே 4-6 மணி நேர இடைவெளி தேவைப்படும். இன்னும் சிறிது உண்ணலாம் என்றிருக்கும்போதே உண்பதை நிறுத்திவிட வேண்டும். ‘முதல் ஏப்பம்’ உணவு போதும் என்பதற் கான அடையாளம்! அதிகம் உண்பதால் வெகு சீக்கத்திரத்தில் எல்லா தோஷங்களும் அதிக மாகிவிடும். மாறாக அளவு குறைவாக உண்பதால் உடல்வளர்ச்சி, பலம்பெறுவது தடைபடும், வாதம் தொடர்பான நோய்கள் தோன்றக் காரணமாகிவிடும். ஆகவே சரியான அளவில் உண்பது முக்கியமானது.

உணவின் மீது கவனம் முழுவதும்:
உணவு உண்பது வேள்விக்குச் சமமானது. நமது உடல் அங்ககப் பொருட்களை (உணவை) உடலின் திசுக்களாக மாற்றும் வேலையை செய்கிறது. இந்த ரசவாதத்துக்கு உரிய முக்கியத்துவம் தர மறந்துவிடுகிறோம். அவசரமாக உண்பது, வேலை செய்து கொண்டோ, படித்துக்கொண்டே, பேசிக் கொண்டோ, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ உண்கிறோம். தினசரி நடக்கும் புனிதமான வேலை உணவு உண்ணல், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

உணவைக் கவனித்து ரசித்து உண்டு, நமது உடல் மட்டுமில்லாமல் மன உணர்வுகள், ஆன்மா ஆகியவற்றுக்கும் போஷாக்கு அளிக்க நாமே வாய்ப்பளிக்க வேண்டும். இந்த முறையில் உண்ணும் போது, குறைந்த அளவில் உண்டாலே நிறைவாக இருக்கும். இடையே நொறுக்குத்தீனிக்குத் தேவை வராது.

நல்ல மனநிலையில் உண்ணுதல்:
கவலை, கோபம், பொறாமை, டென்சன் ஆகிய உணர்வுகள் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டன. உணவு உண்ணும் போது கூட இவற்றிலிருந்து தப்ப முடிவதில்லை. இத்தகு உணர்வுகளுக்கிடையே உண்ணும் உணவு நஞ்சாகிவிடுகிறது. செரிமானம் ஆவதில்லை. அல்சர், அசிடிட்டி போன்ற நோய்கள் இவ்வகை எதிர்மறை உணர்வுகளுடன் உண்பதால் வருகின்றன. புற்றுநோய் கூட வரலாம்! ஆகவே மனதை இலகுவாக வைத்துக்கொண்டு எதிர்மறை எண்ணங்களுக்கு இடந்தராமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே உண்ண வேண்டும்.

புதிதாகச் சமைத்த, வீட்டில் சமைத்த உணவுகள்:
புதிதாகச் சமைக்கப் பட்ட, சூடான உணவையே உட்கொள்ள வேண்டும், சமைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து தேவையான பொழுது எடுத்து, மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதல்ல! பாதி சமைத்த, பதப்படுத்திய உணவுகள் உடல்நலனுக்கு உகந்தவை அல்ல. வெளியில் சாப்பிடும் உணவு அதிக சுவையுள்ளதாக இருந்தாலும் வீட்டு உணவுக்கு ஈடாகாது. உணவு சமைப்பவரின் எண்ணங்கள், உணர்வுகள் உண்பவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முன்னாள் தணிக்கை அதிகாரி தயாரித்த படத்துக்கு ‘கட்’ எதுவும் இல்லை..!!
Next post இறந்த தாயின் நினைவாக 8 வயது சிறுமி பாடி வரும் உருக்கமான பாடல்…!!(வீடியோ)