சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா?..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 45 Second

image_ba4444e9deஇலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது.

இதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் மூலமாக, சர்வதேச மட்டத்தில் கவனத்தைக் கொண்டுவருமளவுக்கு இந்த விவகாரம் மாறியிருப்பது, உண்மையிலேயே முரண்நகை தான்.

இறுதிக்கட்ட யுத்தத்தில், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் படைத் தளபதியாகச் செயற்பட்ட ஜகத் ஜயசூரிய, அப்போதைய இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா ஆகியோரைச் சூழ ஏற்பட்டுள்ள சர்ச்சை தான், அண்மைக்காலப் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

இறுதிக் கட்டத்தில் வன்னிப் பிராந்தியத்தின் முக்கியமான போர்களிலெல்லாம் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய ஜகத் ஜயசூரிய, போரை வென்றுகொடுத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இலங்கையின் இறுதிக்கட்டப் போரை வென்று கொடுத்தவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போன்று, ஜகத் ஜயசூரிய மீதும் போர்க்குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன.

ஆனால், போர்க்குற்றச்சாட்டுகள் பற்றிய அண்மைக்காலக் கலந்துரையாடல்களில், ஜகத் ஜயசூரியவின் பெயர், பெரிதாக இடம்பெற்றிருக்கவில்லை. சரத் பொன்சேகாவின் பெயர் கூட, பெரிதளவில் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக, முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமே, பிரதான இலக்குகளாக இருந்தனர்.

தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரேஸிலின் இலங்கைக்கான தூதுவராக, ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார். அந்நாடு தவிர, மேலும் கொலம்பியா, ஆர்ஜென்டீனா, சிலி, பெரு, சுரிநாம் ஆகிய 5 நாடுகளின் தூதுவர் பதவிகளையும் அவர் கவனிக்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் தான், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் இலக்குகள் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட சித்திரவதைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற விடயங்களில், ஜகத் ஜயசூரியவுக்குச் சம்பந்தம் காணப்படுகிறது என, பிரேஸிலிலும் கொலம்பியாவிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆர்ஜென்டீனா, சிலி, பெரு ஆகிய நாடுகளிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சுரிநாமில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படும் நேரத்தில், பிரேஸிலிலிருந்து அவர் தப்பியோடிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான அறிவிப்புகளின்படி, தன்னுடைய பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரேயே அவர் நாடு திரும்பினார் என்று கூறப்பட்டது.

இதுவே பிரதானமான சர்ச்சையாக உருவாகியிருக்க வேண்டியது. ஆனால், இந்த ஆரம்பத்தையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு, இதைத் தொடர்ந்து இடம்பெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர், அரசாங்கத் தரப்பிலும் ஏனைய தரப்புகளிலும், ஜகத் ஜயசூரியவைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அறிக்கைகள் வெளியாகின; கருத்துகள் வெளியாகின; சமூக ஊடக வலையமைப்புகளில், சர்வதேச சதி பற்றிய கலந்துரையாடல்கள், நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பித்தன.

இவ்வாறான நேரத்தில், ஜகத் ஜயசூரியவின் தலைமை அதிகாரியாக இருந்த சரத் பொன்சேகா தான், இந்த விடயத்தில் தீயைக் கொளுத்திப் போட்டு, இப்பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.

இறுதிக் கட்ட யுத்தத்தில், ஜகத் ஜயசூரிய, போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்றவாறான கருத்தை, பகிரங்கமாகவே அவர் வெளியிட்டதோடு, அவருக்கெதிராகச் சாட்சி சொல்லத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இது, அதிர்ச்சிகரமான கருத்தாக அமைந்தது.

இராணுவத் தளபதியாக இருந்த ஒருவர், தனக்குக் கீழ் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என்று சொல்வது ஒரு விடயம்; ஆனால் அவருக்கெதிராகச் சாட்சி சொல்லப் போவதாகச் சொல்வது இன்னொரு விடயம். இதில் தான் சரத் பொன்சேகா, பலரது புருவங்களையும் உயர்த்தினார்.

ஏனென்றால், இது சம்பந்தமான செய்தி வெளியான மறுநாள், இலங்கையின் இலத்திரனியல், அச்சு ஊடகப் பிரதானிகளைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது சம்பந்தமான செய்தி, ஊடகங்கள் மூலமாகவே வாசித்தறிந்து கொண்டதாகவும், எதிர்காலத்தில் ஆராய்வதாகவும், சமாளித்தவாறே பதிலளித்திருந்தார்.

இதை, பெருமளவுக்குப் பெரிதுபடுத்தாமல், அப்படியே விடுவதால் இதைப் பற்றிய கலந்துரையாடல்களைக் குறைக்க முடியுமென அவர் எண்ணியிருக்கக்கூடும்.

ஆனால், அமைச்சர் பொன்சேகாவின் கருத்துகளைத் தொடர்ந்து, இதுபற்றிய கலந்துரையாடலும் கவனமும் மேலும் அதிகரித்தது. அதை, அப்படியே கதைக்காமல் விடுவது ஆரோக்கியமானது அல்ல என்பதை, ஜனாதிபதி உணர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும், இவ்விடயத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு ஆதரவளிக்குமாறு, பகிரங்கமாகவே அரசாங்கத்தைக் கோரினார். எனவே, பெரும்பான்மையினத்தவர்களைச் சமாளிக்க வேண்டுமாயின், இவ்விடயத்தில் தலையிட்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனால் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவின் போது, “ஜகத் ஜயசூரியவை மாத்திரமல்லாது, வேறு எந்த இராணுவத் தளபதி மீதோ அல்லது வேறு எந்தப் போர் நாயகர்கள் மீதோ கைவைப்பதற்கு அனுமதிக்க மாட்டேன்” என, நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கும் நிலைமை, ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. இது, அவரைப் பொறுத்தவரை, தோல்வியான நிலைமையே.

கருத்துத் தெரிவித்தால், சர்வதேசம், சிறுபான்மையினர் உள்ளிட்டோர், அக்கருத்தை வரவேற்கப் போவதில்லை. நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள், ஜனாதிபதியின் கருத்துக்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. மறுபக்கமாக, இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்காவிட்டால், இப்பிரச்சினை மேலும் பூதாகரமாகி, கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லக்கூடிய ஆபத்துக் காணப்பட்டது.

தன்னுடைய கருத்தோடு, இப்பிரச்சினை முடிந்துவிடும் என்று ஜனாதிபதி எதிர்பார்த்திருந்தால், அது தவறாகிப் போனது. அவரது கருத்துக்குப் பதிலடி வழங்கியுள்ள அமைச்சர் பொன்சேகா, “யாராவது அரசியல்வாதி, தவறு செய்தவர்களைத் தண்டிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறுவாரென்றால், தன்னுடைய வாக்குகளுக்காக அவர் அதைக் கூறுகின்றார் என்று அர்த்தம்” என்று, நேரடியாகவே கூறியுள்ளார். இதன் மூலம், ஜனாதிபதியுடனும் இவ்விடயத்தில் மோதுவதற்கு, அவர் தயாராகிவிட்டார் என்பதை அறிய முடிகிறது.

சரத் பொன்சேகாவுக்கும் ஜகத் ஜயசூரியவுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சினைகளின் விளைவாகத் தான், இவ்வாறான கருத்துகளை, சரத் பொன்சேகா வெளிப்படுத்துகிறார் என்பதை, அனைவரும் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.

இருவருக்கும் இடையிலான பிரச்சினைகளின் உச்சமாக, சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷலாக நியமிக்கப்பட்ட போது, அப்போது இராணுவப் பணியாட்தொகுதியின் பிரதானியாக இருந்த ஜகத் ஜயசூரியவுடன் கைகுலுக்க மறுத்தமை நினைவிலிருக்கலாம். ஆகவே, ஜகத் ஜயசூரியவை அவர் இலக்குவைப்பது, தனிப்பட்ட விரோதமேயன்றி, வேறேதுமில்லை.

சரத் பொன்சேகா, திடீரென நல்லவராகி, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விமோசனம் தேடுவதற்காக, உண்மைகளையெல்லாம் வெளியிடப் போகிறார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

அதேபோல், அரசியல் தேவைகளுக்காகவும் அவர் இதைச் செய்கிறார் என்று எதிர்பார்க்க முடியாது. அவருக்கு, ஜனாதிபதியாகும் ஆசை இருக்கின்றது என்ற போதிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னமும் காலமிருக்கிறது.

அத்தோடு, ஜனாதிபதியாக அவர் விரும்பினால், அவருக்கிருக்கும் அதிக வாய்ப்பு, அவரது வாக்கு வங்கியைப் பாதுகாப்பது தான். அவருடைய வாக்கு வங்கியென்பது, கடும்போக்கு பௌத்த வாக்குகள் தான். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ, சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் வாக்களிப்பதென்பது, சாத்தியப்படாது.

2010ஆம் ஆண்டு, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிரான வாக்குகளாக, சரத் பொன்சேகாவுக்கு வழங்கியமை போன்று, 2020இல் கோட்டாபய ராஜபக்‌ஷ போட்டியிட்டால், அவருக்கெதிரான வாக்குகளாக, பொன்சேகாவுக்குச் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றனவே தவிர, வேறு வாய்ப்புகள் இல்லை.

தனிப்பட்ட கோபத்துக்காக, அவசரப்பட்டுக் கருத்துகளை வெளியிட்டிருக்கும் பொன்சேகா, இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணை செய்ய ஆரம்பிக்கப்பட்டால், தனது தலையும் உருளும் என்பதை அறியாமல் இருக்கிறாரா என நம்ப முடியவில்லை. யுத்தத்தை நடத்தியவரிடம், இந்த அடிப்படையான புரிதல் கூட இருக்காதா என்ற சந்தேகம், இருக்கவே செய்கிறது.

அவரது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தேரை இழுத்துத் தெருவில் விட்டிருக்கும் சரத் பொன்சேகா தந்திருக்கும் வாய்ப்பை, தமிழ்த் தரப்புப் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும். போரை நடத்திச் சென்றவரே போர்க்குற்றம் இடம்பெற்றது என்கிறார், விசாரணையை நிச்சயமாக நடத்த வேண்டும் என, சர்வதேச சமூகத்திடம் முறையிட முடியும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இவ்விடயத்தைக் கொண்டுசென்று, அரசாங்கத்துக்கான அழுத்தங்களை வழங்க முடியும்.

எது எப்படியாக இருந்தாலும், பொன்சேகா தொடக்கி வைத்திருக்கும் இந்த விடயம், தமிழர் தரப்புக்கான முக்கியமான துருப்புச்சீட்டாக மாறியிருக்கும் அதேநேரத்தில், ஜனாதிபதி தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கான பிரதான தலையிடியாக மாறியிருக்கிறது என்பது தான் உண்மையாக இருக்கிறது.

இந்த விடயத்தை, எந்த விதத்தில் அரசாங்கம் கையாளுமென்ற எதிர்பார்ப்பு, தற்போது ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற ஒருவர், போரை நடத்திச் சென்ற முக்கியமானவர்களுள் ஒருவர், இறுதிக்கட்ட யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்று கூறுகிறார். அதை மறுப்பதென்பது, அரசாங்கத்துக்குச் சாத்தியப்படாது.

மறுபக்கமாக, இதன் மீதான விசாரணைகளை ஆரம்பிப்பதென்பது, ஒன்றிணைந்த எதிரணி உட்பட கடும்போக்குப் பிரிவுகளுக்குச் சாதகமானதாக, “போர் நாயகர்களை, இந்த அரசாங்கம் காட்டிக் கொடுக்கிறது” என்ற அவர்களின் பிரசாரங்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

இது மீதான அழுத்தங்கள் அதிகரித்தால், போர் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், சரத் பொன்சேகாவை, மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும் ஒதுக்கி, ஓரங்கட்டினார்களோ, அதே பாணியிலான நடவடிக்கைகளை எடுப்பதே, அரசாங்கத்துக்கு வாய்ப்பானதாக அமையும். ஆனால் அவ்வாறு செய்யின், சரத் பொன்சேகாவின் குணத்தை அறிந்து தான் மஹிந்த ராஜபக்‌ஷ அவரை ஒதுக்கினார் என, ஒன்றிணைந்த எதிரணியினர், இவ்விடயத்தைத் தங்களது வெற்றிப் பிரசாரமாக முன்னெடுக்க முடியும்.

அரசாங்கத்தின் நிலைமை என்னவோ, ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் காணப்படுகிறது. ஏற்கெனவே, உள்ளூர் மட்டத்தில் பொருளாதார வீழ்ச்சி அல்லது பொருளாதாரத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை காரணமாக, ஏராளமான அழுத்தங்களை, அரசாங்கம் எதிர்கொண்டு வருகிறது.

நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, பின்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு, நாட்டின் பொருளாதாரம் தொடர்பான அழுத்தங்களே காரணமாக அமைந்தன. (அதே ரவி கருணாநாயக்க, பின்னர் வேறு காரணங்களுக்காக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வைக்கப்பட்டமை, இன்னொரு விடயம்)
ஆனால், சர்வதேச ரீதியில், இலங்கைக்கான ஆதரவென்பது, ஓரளவு திடமான நிலையிலேயே காணப்பட்டது.

ஜனாதிபதியினதும் பிரதமரினதும் அமைச்சர்களினதும் தொடர்ச்சியான கருத்தாக, “முன்னைய அரசாங்கம், சர்வதேசத்துடன் பகைத்துக் கொண்டமையால், நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டது. அதை நாங்கள் மாற்றியமைத்தோம். சர்வதேசம் இப்போது, எங்களோடு நெருக்கமாக இருக்கிறது” என்பது தான் இருந்து வந்தது.

அவர்களின் கருத்திலும் தவறு காணப்பட்டிருக்கவில்லை. முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, சர்வதேசத்துடன் அனுசரித்து அல்லது இராஜதந்திர ரீதியாகச் செயற்பட்டு வந்த அரசாங்கமாக, இந்த அரசாங்கம் கருதப்பட்டது. அதற்கு, இந்த அரசாங்கம், ஓரளவு வெளிப்படைத்தன்மையுடன் அல்லது ஓரளவு சிறப்பான எண்ணங்களுடன் செயற்படுவதாக, சர்வதேசத்தை நம்பவைத்தமை, முக்கியமான காரணமாக அமைந்தது.

ஆனால், தற்போது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள், அதை மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டதாக அமைந்துள்ளன. ஒன்றில் சர்வதேசம் அல்லது உள்நாடு என்ற தெரிவை மேற்கொள்ள வேண்டிய நிலைமைக்கு, அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

சர்வதேசத்தைத் திருப்திப்படுத்துவதற்காக, இவ்விடயத்தில் விசாரணை என அரசாங்கம் அறிவித்தால், உள்ளூரிலுள்ள பெரும்பான்மையினத்தவர்கள், அதை விரும்பப் போவதில்லை. வாக்காளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, இதை விசாரணை செய்ய முடியாது என அறிவித்தால், சர்வதேசத்தின் “செல்லப் பிள்ளை” என்ற பெயர் இல்லாது போகும்.

இந்த விடயத்தை, ஜனாதிபதி எவ்வாறு கையாள்கிறார் என்பதை விட, பிரதமரும் அவரது கட்சியினரும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பது தான் முக்கியமாக அமையும். ஏனென்றால் பொன்சேகா, அவர்களது கட்சியைச் சேர்ந்தவர் தான்.

எது எவ்வாறாக இருப்பினும், அடுத்துவரும் சில வாரங்கள், சுவாரசியமான அரசியலை வழங்கப்போகும் வாரங்களாக இருக்கப் போகின்றன என்பது தான் உண்மையாக இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாசுக்கு பாடம் நடத்தும் ‌ஷரத்தா கபூர்..!!
Next post மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை : அஞ்சலி..!!