பிராயச்சித்தம்..!! (கட்டுரை)
கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுவதென்பது சில அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாகும்.
‘குழி’ என்று தெரிந்து கொண்டே விழுந்து விட்டு, அதற்கான பழியை வேறொருவரின் தலையில் சுமத்தி விடுவதில், சில அரசியல்வாதிகள் விற்பன்னர்கள்.
குழிக்குள் தானும் விழுந்து, தான் சார்ந்த சமூகத்தையும் சேர்த்துத் தள்ளி விட்ட, அரசியல்வாதிகளும் நமக்குள் இல்லாமலில்லை.
தங்கள் பலவீனங்கள் காரணமாக, அரசியல் எதிராளிகளிடம் சிக்கிக் கொள்கின்றவர்கள், பின்னர் எதிராளிகளின் மகுடிச் சத்தங்களுக்குப் படமெடுத்தாட வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் மாட்டிக்கொள்வதுண்டு. கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழும் படலம் அப்போதுதான் ஆரம்பமாகும்.
ஆயுள் முழுவதும் இந்த நாட்டின் ஆட்சியாளராக, தானே இருக்க வேண்டும் என்கிற பேராசையுடன், மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்ட மூலத்தை ஆதரித்து விட்டு, முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வெளியில் வந்து சொன்னதெல்லாம், “கண்களைத் திறந்து கொண்டே, குழிக்குள் விழுந்து விட்டோம்” என்றுதான்.
குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் என்பது, ஒரு வகைத் தற்காப்புத் தந்திரமாகும். ‘எனது இயலாமை காரணமாக, இந்தக் குற்றத்தைச் செய்து விட்டேன்’ என்பதைத்தான், ‘கண்களை திறந்து கொண்டு குழிக்குள் விழுந்து விட்டேன்’ என்கின்றனர்.
உண்மையில், கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் விழுதல் என்பது முட்டாள்தனமாகும். கூடவே, தனது சமூகத்தையும் சேர்த்துக் கொண்டு வீழ்வது, பெரும் துரோமாகும்.
‘கண்களைத் திறந்து கொண்டு குழிக்குள் வீழ்ந்து விட்டேன்’ என்று, அரசியல் அரங்கில் வாக்கு மூலம் வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும், அதற்காக அவர்களின் ஆதரவாளர்களால் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அந்தத் தைரியத்தின் காரணமாகாவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப, கண்களைத் திறந்துகொண்டு குழிக்குள் வீழ்வதை, ஒரு விளையாட்டுப்போல் செய்து வருகின்றார்கள்.
மாகாண சபை முறைமை என்பது, சிறுபான்மை சமூகங்களுக்குக் கிடைத்த அரசியல் அதிகாரமாகும். அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கென்று 13ஆவது திருத்தத்தினூடாகக் குறித்துச் சொல்லப்பட்ட அதிகாரங்களில் கணிசமானவை, இன்னும் மாகாண சபைகளின் கைகளுக்கு வந்து சேரவில்லை.
அதற்குள், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை, தட்டிப்பறிக்கும் செயற்பாடுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இவை பெரும் அநீதியாகும்.
‘திவிநெகும’ சட்ட மூலமொன்று 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. ‘திவிநெகும’ சட்ட மூலத்தினூடாக, மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் குறைக்கப்படுவதாகவும், கிராமிய மட்டத்தில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் அதிகாரம், மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கத்தின் கைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அப்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இன்னொருபுறம், “திவிநெகும சட்ட மூலமானது, வலது கையால் கொடுத்ததை, இடது கையால் பறித்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகும். மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களை ‘திவிநெகும’ சட்டத்தினூடாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் பிடுங்கிக் கொள்கின்றார். அந்த வகையில், அதிகாரப் பரவலாக்கலை விரும்பும் எவரும், இந்தச் சட்ட மூலத்தை ஆதரிக்க மாட்டார்கள்” என்று முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனாலும், 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கிழக்கு மாகாண சபையில் ‘திவிநெகும’ சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
கண்களைத் திறந்த கொண்டு குழிக்குள் விழுதல் என்பதற்கு, மிகச் சிறந்த உதாரணமாக, மு.கா உறுப்பினர்களின் அந்தச் செயற்பாடு அமைந்தது. கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக இருவர் அமைச்சுப் பதவிகளை அப்போது வகித்துக் கொண்டிருந்தனர்.
கிழக்கு மாகாண சபையில் இப்போது எதிரணியில் அமர்ந்திருக்கும் 10 பேரும், அப்போது ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர். குறிப்பாக, அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ் சார்பான ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பையும் ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்தே வாக்களித்திருந்தார்.
அப்போது உதுமாலெப்பை, ஓர் அமைச்சராக இருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ‘திவிநெகும’ சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர்.
காலம் ஆச்சரியங்களால் நிறைந்தது. கிழக்கு மாகாண சபையில் ‘திவிநெகும’ சட்ட மூலம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, ஆளும்தரப்பில் இருந்தவர்கள், இப்போது எதிரணியில் உள்ளனர். அப்போது எதிரணியிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இப்போது ஆளுந்தரப்பில் இருக்கின்றார்கள்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபைக்கு வருகிறது.
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அங்கிகாரம் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளது. மாகாண சபைகளைக் கலைத்தல் மற்றும் அவற்றுக்கான தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினூடாக நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்படவுள்ளன.
அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாகாண சபைகளுக்குரிய தேர்தல்கள் தொடர்பான 20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடாகும் என்று பரவலாக விமர்சிக்கப்படுகிறது. 20ஆவது சட்ட மூலத்தை எதிர்த்து, தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. ஏராளமான சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகின்றன.
20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையாகும். ஒக்டோபர் மாதம் கலையும் கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல்களைப் பிற்போடுவதற்காகவே, 20ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்னொரு வகையில் சொன்னால், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு, வடமத்தி மற்றும் ஊவா மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் பிற்போடப்படும் நிலை ஏற்படும். இவ்வாறானதொரு நிலையில், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதேவேளை, 20ஆவது திருத்தம் தொடர்பில் மாகாண சபைகளும் தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தும் வகையில், வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன.
வடமத்திய மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற போது, அதற்கு ஆதரவாக பெரும்பான்மையானோர் வாக்களித்தனர். அந்த வகையில் மேற்படி சட்ட மூலத்துக்கு ஆதரவாக 15 உறுப்பினர்களும் எதிராக 13 பேரும் வாக்களித்திருந்தனர்.
அதன்பின்னர் கடந்த 24ஆம் திகதியன்று ஊவா மாகாண சபையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பொன்று இடம்பெற்றது. இதன்போது பெரும்பான்மையானோர் அதற்கு எதிராக வாக்களித்தனர். 12 உறுப்பினர்கள் எதிராகவும், 05 உறுப்பினர்கள் ஆதரவாகவும் அங்கு வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, இன்று செவ்வாய்கிழமை கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
சிறுபான்மை சமூகத்தினுடைய ஆதிக்கத்தின் கீழ், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகள் மட்டுமே உள்ளன. எனவே, சிறுபான்மை சமூகம் தொடர்பான நிலைப்பாடுகளை நாட்டுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் தெரியப்படுத்துவதற்கு, மேற்படி இரண்டு மாகாண சபைகளையும் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அந்த வகையில், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கிழக்கின் அபிப்பிராயம் என்ன என்பதை, நாம் இன்றைய தினம் தெரிந்து கொள்ளலாம்.
கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாகவே அதிகமானோர் வாக்களிப்பார்கள் எனும் எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்பதையும் அனுமானிக்க முடிகிறது.
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைகளை உயர்த்துவதற்கான சாத்தியங்கள்தான் அதிகமாகத் தெரிகின்றன.
கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான வாக்கெடுப்பை நடத்துவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து, எதிரணி உறுப்பினர்கள் இது தொடர்பில் எவ்வாறான மனநிலையில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகிறது.
கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையிடம் குறித்த அமைச்சர் இது தொடர்பில் பேசியிருந்தார். 20ஆவது திருத்தத்துக்கு ஏன் ஆதரவு வழங்கக் கூடாது என்றும் உதுமாலெப்பையிடம் அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராகவே, தான் வாக்களிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பை இதன்போது உறுதிபடத் தெரிவித்துள்ளார். இது மட்டுமன்றி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பாகவும், அதிகாரியொருவர், உறுப்பினர்களிடம் பேசி இவ்வாறான நாடி பிடித்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனவும் அறிய முடிகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இடையில் குறிப்பிடத்தக்கதொரு நட்பு உள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் கிழக்கு முதலமைச்சரின் சொந்த ஊரான ஏராவூரில், நகரசபை கட்டட திறப்பு விழாவொன்று இடம்பெற்றது. முதலமைச்சருடனான நட்புக்காகவே அந்த நிகழ்வில் பிரதமர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
20ஆவது திருத்தச் சட்ட மூலமானது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யோசனையாகும். எனவே, கிழக்கு மாகாண சபையில் அதற்கு எதிராக வாக்களிக்கப்படுவதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதற்கே, முதலமைச்சர் முயற்சிப்பார்.
எவ்வாறாயினும், 20ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வாக்கெடுப்பு, இன்று செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், மாகாண சபை அமர்வுக்கு முன்னதாக, கிழக்கு மாகாண சபையின் மு.கா பிரதிநிதிகளை இன்று காலை சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது, 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு மு.கா பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது அனுமானத்தின்படி கிழக்கு மாகாண சபையில் 20ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குமாயின், அது மற்றொரு சமூகத் துரோகமாகவே பார்க்கப்படும்.
சிறுபான்மை சமூகமொன்றின் அரசியல் கட்சியாகிய முஸ்லிம் காங்கிரஸானது, மாகாண சபைகளின் அதிகாரங்களைத் தட்டிப் பறிக்கும் முயற்சிக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கெனவே, ‘திவிநெகும’ சட்ட மூலத்தை ஆதரித்த பாவத்தையும், கறையையும் கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமந்து கொண்டிருக்கின்றனர். அந்தப் பாவத்துக்கான பிராயச்சித்தமாகவேனும் 20ஆவது சட்ட மூலத்தை எதிர்த்து மு.கா பிரதிநிதிகள் இன்றைய தினம் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் கிழக்கு முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘அரசியலில் நாங்கள் சோரம் போகாதவர்கள்’ என்று, மேடைக்கு மேடை, தம்மைத் தாமே சொல்லிக்கொள்ளுகின்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு, அதை நிரூபிப்பதற்கான மற்றொரு சர்ந்தப்பம் இன்று வருகிறது. அதையும் குழி தோண்டிப் புதைத்து விடாதீர்கள்.
Average Rating