ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் திராவிட இயக்கங்களும்..!! (கட்டுரை)
“ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கோரிக்கை மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கைதான் இது என்றாலும், எட்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது.
2016, டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மரணமடைந்தார் என்றாலும், அவர் ‘அப்பலோ’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்தே அனைத்தும் மர்மம் நிறைந்த பரபரப்பூட்டும் காட்சிகள் போல் இருந்தன.
தமிழக ஆளுநர் ‘அப்பலோ’ மருத்துவமனை சென்றார். மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் ‘அப்பலோ’ மருத்துவமனைக்கு வந்தார்கள்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்றார்கள். ஆனால், முதலமைச்சராக சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவை யாராலும் பார்க்க முடியவில்லை.
மருத்துவமனையில் இருந்தபோது, அருகிலிருந்தது சசிகலாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே என்பதால், மற்ற அமைச்சர்கள் கூட ஒதுங்கியே நின்றார்கள்.
இந்த நிலையில்தான், 75 நாட்களுக்கு மேலான ‘அப்பல்லோ மருத்துவமனை இரகசியம்’ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெல்லியில் உள்ள, ‘எய்ம்ஸ்’ மருத்துமனை டாக்டர்களே, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தாலும், சிகிச்சை பெற்ற அவரை யாரும் பார்க்க முடியவில்லை என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
டிசெம்பர் ஐந்தாம் திகதி, ஜெயலலிதா மறைந்ததும், இரவோடு இரவாக
ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் அந்த மர்மத்தின் தொடர்ச்சியாகவே மக்களால் கருதப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சராக ஓ. பன்னீர்செல்வம் இருக்கும் வரை, ஜெ மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைக்கப்பட்ட பிறகே, “ஜெயலலிதா மரணம் குறித்து, பொறுப்பில் உள்ள சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை ஆணைக்குழு அமைத்து, நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
குறிப்பாக, ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் தியானம் செய்து விட்டு, இந்த அறிவிப்பை ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டார். ஆனால், அவரும் அதற்கான உத்தரவைப் பிறப்பிக்கவில்லை.
இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில், நான்கு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூர் சிறைக்குச் செல்லும் முன்பு, அவசர அவசரமாக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகத் தெரிவு செய்தார்.
அவரும், பெப்ரவரி 2017 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். உடனே, ‘தர்மயுத்தம்’ தொடங்கிய ஓ. பன்னீர்செல்வம், “ஜெ மரணம் குறித்து, சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார்.
அதையே, தமிழகம் முழுவதும் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் வலியுறுத்தினார். விசாரணை ஆணைக்குழு என்பது, “சி.பி.ஐ விசாரணை வேண்டும்” என்ற கோரிக்கையாக மாறியது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் “ஜெ, மர்ம மரணம் குறித்து, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், இது பற்றியெல்லாம் மதுரையில், தினகரன் கூட்டம் நடத்தும் வரை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவில்லை. மதுரைக் கூட்டத்தில் தினகரனின் ஆதரவு, சட்டமன்ற உறுப்பினர்கள் 20 பேரும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரும் பங்கேற்ற பிறகு, “ஜெ, மர்ம மரணம் குறித்த விசாரணை” பற்றிய கோரிக்கை தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது.
“ஆட்சி என்பது கண்ணாடிப் பாத்திரம் போன்றது. அது உடைந்து விடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான் இருக்கிறது. அ.தி.மு.கவுக்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கும் சம்பந்தமில்லை” என்று,
டி.டி.வி தினகரன், கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தார்.
அதன்பிறகு, ஓ. பன்னீர்செல்வத்திடம் உள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும் நோக்கத்தில், இப்போது விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை ஆணைக்குழுவால் அ.தி.மு.கவில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினகரனின் எதிர்ப்பைச் சமாளிக்க, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவை நாடியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் முதல்கட்டம்தான், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணைக்குழு. ஆகவே, ஓ.பி.எஸ்ஸும் சரி, இ.பி.எஸ்ஸும் சரி தங்களுக்குச் சோதனை வரும் நேரத்தில்தான், ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணை ஆணைக்குழுக் கோரிக்கையை கையில் எடுக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
இந்த விசாரணை ஆணைக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு கலப்படமாக இருக்கிறது. அக்கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், “இது வரவேற்கப்பட வேண்டியது. இரு அணிகள் இணைப்பு பற்றிப் பேச வேண்டிய தருணம் வந்து விட்டது” என்று கருத்து தெரிவித்தார்.
ஆனால், அதே அணியில் உள்ள இன்னொரு முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியோ, “நாங்கள் கேட்டது சி.பி.ஐ விசாரணை” என்று சுருதி மாறிக் கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்நிலையில் இரு அணிகளும் இணையுமா என்ற கேள்விக்கு இன்னும் உறுதியாகப் பதில் கிடைக்கவில்லை என்பதுதான் இன்றைய நிலைமை.
ஆனால், தமிழக அரசியல், அ.தி.மு.கவுக்குள் நடக்கும் உள்குத்துகளாலும் மாநில அரசாங்க நிர்வாக ஆட்சிக்குள் நடக்கும் கூத்துகளாலும் தடம் மாறி நிற்கிறது என்பதுதான் உண்மை.
அணிகள் இணைப்புக்கு ஓ. பன்னீர்செல்வம் சம்மதித்தால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு விடலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கணக்குப் போட்டுள்ளார்.
ஆனால், முதலமைச்சர் பதவி நமக்கு கிடைக்காமல், இணைப்புக்குச் சம்மதித்தால், என்ன இலாபம் என்று ஓ. பன்னீர் செல்வம் தயங்கி நிற்கிறார்.
இப்போதைக்கு, ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கட்சிப் பொறுப்பு வழங்கப்படும். குறிப்பாக, அ.தி.மு.கவின் வழி காட்டுக் குழுத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் ஓ. பன்னீர் அணிக்கு, வேறு சில தர்மசங்கடங்கள் கண் கூடாகத் தெரிகின்றன. அப்படி என்ன தர்மசங்கடங்கள்?
பீஹாரில் ஆட்சிக்கு தலைவராக முதலமைச்சர் நிதிஷ் குமாரும், ஐக்கிய ஜனதா தள கட்சிக்குத் தலைவராக சரத் யாதவும் இருக்கிறார்கள். திடீரென்று அங்கு நடைபெற்ற அரசியல் ‘சுனாமி’யில் லாலு பிரசாத் யாதவின் ஆதரவைக் கழற்றிவிட்டு, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் நிதிஷ் குமார்.
இப்போது, கட்சித் தலைவராக இருக்கும் சரத் யாதவ், வெளியேற்றப்பட்டு விட்டார். நாடாளுமன்றக் குழுத் தலைவராக இருந்த பதவியும் பறிக்கப்பட்டு விட்டது.
ஐக்கிய ஜனதாத் தள கட்சிக்கும் ஆட்சிக்கும் இப்போது நிதிஷ்குமாரே தலைவராகி, விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப் போகிறார் என்ற தகவலும் வெளிவந்து விட்டது.
இப்படியொரு, இடியப்பச் சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம், ஓ. பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது. ஏனென்றால், பன்னீர்செல்வம் போல், தனது, முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்பவர் அல்ல எடப்பாடி பழனிசாமி.
அவர், தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலினையும் எதிர்க்கிறார். ஓ. பன்னீர் செல்வத்தையும் எதிர்த்து இருக்கிறார். இப்போது தன்னைத் தேர்ந்தெடுத்த சசிகலாவையும் வழி நடத்திய டி.டி.வி தினகரனையும் எதிர்த்து விட்டார்.
அதைவிட, தனக்கு எதிராக இருக்குமோ என்று அஞ்சிய மத்திய அரசாங்கத்திடமே நட்பு பாராட்டும் வகையில் குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுடன் நெருங்கி விட்டார்.
இவ்வளவு துணிச்சலாக, அரசியல் ரீதியான காய்களை நகர்த்தும் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருக்கும் நேரத்தில், நாம் கட்சிப் பதவிக்கு செல்வது அரசியல் எதிர்காலத்தைச் சூன்யமாக்கி விடலாம் என்று ஓ. பன்னீர்செல்வம் அஞ்சுகிறார்.
அந்த அச்சத்தின் விளைவாகவே, ‘ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழு குறித்து, உடனடிக் கருத்து எதையும் தெரிவிக்காமல், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கிறார்.
ஆகவே, ‘ஜெ, மரணம் குறித்த விசாரணை ஆணைக்குழு’, அ.தி.மு.கவில் உள்ள இரு அணிகளையும் இணைக்குமா என்பது இன்னும் மில்லியன் டொலர் கேள்விகளாகவே இருக்கிறது.
பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, ஓகஸ்ட் 22,23,24 ஆகிய திகதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்தச் சுற்றுப் பயணத்துக்குள், அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைந்து விட வேண்டும் என்பது அகில இந்திய பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கிறது.
இந்த விருப்பத்தின் அடிப்படையில்தான், சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திரமோடியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, ஆலோசனை நடத்தினார்கள் என்ற பேச்சு வலுவாக மையம் கொண்டிருக்கிறது.
ஆகவே, எடப்பாடி பழனிசாமியின் விசாரணை ஆணைக்குழு அமைக்கும் முடிவுக்கு பா.ஜ.க, எந்த அளவுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறதோ அதன் அடிப்படையில்தான், அ.தி.மு.கவின் இரு அணிகளின் இணைப்பும் அரங்கேறும், என்பதே இன்றைய நிலைமை.
ஆனால், வலுவான இரு திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.கவில், இன்றைக்கு அ.தி.மு.க இந்த அளவுக்குச் சின்னாபின்னமாகச் சிதறி பல அணிகளாக நிற்பது தமிழகத்தில் திராவிட இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் சோதனை.
Average Rating