கல்லூரி மாணவியை திருமணம் செய்ய தடையாக இருந்த கள்ளக்காதலியை கொல்ல முயற்சி..!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் நேற்று இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்தும், கல்லால் தாக்கியும் உள்ளார்.
இதில் அந்த பெண் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அந்த பெண்ணை மீட்டு சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த இளம்பெண் யார் என்பது குறித்தும், திருமணத்துக்கு இடையூறாக அவர் இருந்ததால் காதலனே அவரை கொல்ல முயன்றதும் வாழவந்திநாடு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
சேலம் அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஜனனி(வயது 23). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு நவீன் (5) என்ற மகன் உள்ளார். ஜனனி டால்மியாபோர்டு பகுதியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக உள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் முத்துகுமார் என்பவர் டால்மியாபோர்டு பகுதியில் உள்ள மற்றொரு துணிக்கடையில் விற்பனையாளராக உள்ளார்.
ஜனனியும், முத்துகுமாரும் ஒன்றாக பஸ்சில் வேலைக்கு செல்லும்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறியது.
இந்த கள்ளக்காதல் விவகாரம் குறித்து ஜனனியிடம் குமார் கேட்டு உள்ளார். அப்போது இருவரும் காதலிப்பதாக கூறி அவருடன் சண்டை போட்டு விட்டு பிரிந்து சென்று கடந்த 6 மாதங்களாக முத்துகுமாருடன் ஜனனி தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே முத்துகுமார் நெல்லையில் உள்ள தனது மாமா மணி என்பவர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது மாமா வீட்டின் அருகே வசித்த தர்ஷினி (20) என்ற கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பழகினார்கள். அவரை திருமணம் செய்ய முத்துகுமார் முடிவு செய்தார்.
இந்த திருமணத்திற்கு கள்ளகாதலி ஜனனி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை கொலை செய்ய முத்துகுமார் திட்டம் தீட்டியுள்ளார்.
நேற்று அவர் ஜனனியை நைசாக பேசி கொல்லிமலைக்கு சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போது 68-வது கொண்டஊசி வளைவு அருகே சென்றபோது அங்கு வைத்து முத்துகுமார் ஜனனியிடம் தான் தர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதற்கு நீ தடையாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முத்துகுமார் ஜனனியின் கழுத்தை நெரிந்துள்ளார். பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து ஜனனியின் கழுத்திலும், முகத்திலும் குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி முத்துகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
மயங்கி கிடந்த ஜனனியை அக்கம்பக்கத்தினர் மீட்டு வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வாழவந்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜனனியிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தது.
ஜனனியை கொலை செய்ய முயன்ற காதலன் முத்துகுமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating