மாகாண அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகங்கள்..!! (கட்டுரை)

Read Time:20 Minute, 48 Second

image_87fedeb3e8அதிகாரத்துக்கான போட்டி என்பது மிகவும் முக்கியமானது. அதிலும், அரசியல் அதிகாரம் மற்றும் அதன் வழிவந்த பதவிகள் மீதான வேட்கை, பல சூட்சுமங்களைக் கொண்டது.
ஏனெனில், ஆட்சியதிகாரமும் பதவியும் ஒருவிதமான போதை. ‘அது’ இல்லாமல் பயணித்தால், சம்பந்தப்பட்டோருக்கு தள்ளாடுவது போலிருக்கும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசமைப்பில் 18ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்ததும், உரிய காலத்துக்கு முன்னர், தேர்தலை நடத்தியதும், இப்போது நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களை நடத்துவதற்கு பின்னிற்பதும், ஏன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “படைக்குத் திருநங்கைகளையும் ஆட்சேர்ப்பு செய்யத் தடை” போன்ற அரசியல் சார்பற்ற விடயங்களைக் கூறி, மக்களைப் பராக்குக்காட்ட முனைவதும் அதிகாரங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான இராஜதந்திரங்கள் என்றே சொல்ல வேண்டும்.

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலா அல்லது மாகாண சபைகளுக்கான தேர்தலா முதலில் நடைபெறும் என்பதும் அது எப்போது நடைபெறும் என்பதும் இன்னும் உறுதியாக அறிவிக்கப்பட்டிருக்காத சூழ்நிலையில், மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஒரு தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவது போல, மாகாணத்திலும் பிரதேச மட்டத்திலும் வெற்றி பெறுவதற்கான, மூலோபாயத் திட்டங்களை வகுப்பதில், சிறுபான்மைக் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அதிலும் குறிப்பாக மாகாண சபைகளின் ஆட்சியைத் தம்வசப்படுத்துவது எவ்வாறு என்று தமிழ், முஸ்லிம் கட்சிகள் மூளையைப்போட்டுக் குடைந்து கொண்டிக்கின்றன.

தென்னிலங்கையில், பெருந்தேசியக் கட்சிகளிடையே, ஆட்சியதிகாரத்துக்கான போட்டி ஆரம்பமாகி இருப்பதற்குச் சமாந்திரமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சிறுபான்மைக் கட்சிகளிடையே, நிழல் அதிகாரப் போட்டி ஒன்று, ஆரம்பமாகி இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

வடக்கில் தமிழர்களுக்குள்ளேயே ‘யார் பெரிய ஆள்’ என்கிற மாதிரியான, ‘ஈகோ’ சார்ந்த எதிர்த்தாடல்கள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்ற அதேநேரத்தில், கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தைப் பெறுவதற்காக, தமிழர்கள் தங்களுக்குள்ளும், முஸ்லிம்கள் தங்களுக்குள்ளும் காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

வடக்கைப் பொறுத்தவரை, நடைமுறைச் சாத்தியத்தின் அடிப்படையில், எப்போதும் தமிழர்களின் ஆட்சியதிகாரமே மேலோங்கி இருக்கும். அங்கு முஸ்லிம் கட்சிகள் ஆட்சியமைப்பதோ, முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படுவதோ, உடனடியாக சாத்தியமற்ற விடயங்களாகும்.

உயர்ந்தபட்சமாக, வடக்கில் முஸ்லிம்கள் மாகாண அமைச்சுப் பதவிகளையே பெற முடியும். எனவே, வடக்கில் ஆட்சி அதிகாரத்தில் பங்காளியாவதற்கு முஸ்லிம் கட்சிகள் முயற்சி செய்யலாமேயொழிய, ஆட்சியைக் கைப்பற்ற வேண்டுமாயின் சாத்தியங்களைத் தேடி, இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

வட மாகாண சபையில், அண்மைக்காலமாக, ஒரு கொதிநிலை அவதானிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்கின்ற போதிலும், இவ்வாட்சியில் அங்கம்வகிக்கும் உறுப்பினர்கள், கிட்டத்தட்ட எல்லோரும், தமிழ் மக்களின் அபிலாஷையை வென்றெடுத்தல் என்ற விடயத்தில், ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற போதிலும், அதிகார தோரணையிலான உள்ளக முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன.

மாகாண சபையைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணி, முதலமைச்சரின் அணி என, ஒரு பனிப்போர் ஆரம்பமாகி இருப்பதாகவே, கருத முடிகின்றது.

இவ்வாறான களச்சூழல் நீடித்திருக்கையில், இன்னும் ஒரு வருடம் மீதமிருக்கின்ற வடக்கு மாகாண சபைக்கு, 2018இலோ அல்லது 2019 இலோ ஒரு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமாயின், அவ்வேளையில் வடக்கில் இருக்கின்ற கட்டுக்கோப்பு, சீர்குலைந்து விடுமாயின், தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிவிடும் அபாயமிருக்கின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான ஆட்சிக்காலம் முடிவடைவதால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில், அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவர வேண்டும். ஆனால், இம்மாதத்தோடு ஆட்சிக்காலம் நிறைவுக்கு வரும் வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் தேர்தலை நடாத்துவதில், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒவ்வாத நிலைப்பாடுகள் காணப்படுகின்றன.

ஆணைக்குழு, இதைச் சட்டமுறையான விடயமாக நோக்குகின்றது. அரசாங்கம் இதில் அரசியல் செய்யப் பார்க்கின்றது. எனவே, கிழக்கு மாகாணத்துக்கு ஒரு தேர்தல் நடைபெற்றால், எவ்வாறான அணுகுமுறைகளைக் கையாள்வது என்பது தொடர்பில், தமிழ், முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டன.

வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாகப் பிரிந்த பிறகு, கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல், 2008இல் முதற்தடவையாக இடம்பெற்ற போது, முன்னாள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்), முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதற்குப் பிறகு, நஜீப் ஏ.மஜீட் முதலமைச்சராக நியமனம் பெற்றார். சுருங்கக் கூறின், இவர்கள் இருவரும், சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, இவ்விருவருடைய மூக்கணாங்கயிறுகளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்தது என்றால் மிகையில்லை.

ஆனால், 2012இல் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம், சிறுபான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை நிறுவுவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கின் ஆட்சியில் பங்காளர்களாகினர்.

எவ்வாறிருப்பினும், ஆரம்பம் தொட்டே கிழக்கு முதலமைச்சராக, ஒரு தமிழரை நியமிப்பதா, முஸ்லிமை நியமிப்பதா என்ற அடிப்படையில், ஏற்பட்டிருந்த சர்ச்சை இன்னும் தொடர்கின்றது. கடந்த முறை ஆட்சியமைக்க வேண்டும் என்ற ஓர் இக்கட்டான சூழ்நிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியை, முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்த தமிழர் தரப்பு, அடுத்த தேர்தலில் அதை விட்டுத்தராது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்ற ஒரு சூழலே இன்று காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி, கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் நீடிக்கப்பட்டால் கூட, முதலமைச்சர் பதவியில் சர்ச்சை தோன்றலாம்.

இப்போதிருக்கின்ற களநிலவரத்தின் படி, கிழக்கில் தனியொரு தமிழ்க்கட்சியோ தனியொரு முஸ்லிம் கட்சியோ ஆட்சியமைப்பது சாத்தியமற்றது. எல்லாத் தமிழ்க் கட்சிகளும் ஒரு கூட்டாக இணைந்து, போட்டியிட்டால் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியும்.

அதேபோன்று, முஸ்லிம் கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிட்டாலும் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றிக் கோட்டைத் தொட்டுப் பார்க்க முடியும். ஆனால், தமிழர் அரசியலிலோ முஸ்லிம்களின் அரசியலிலோ 100 சதவீத ஒற்றுமை என்பது இன்னும் பகற்கனவாகவே இருக்கின்றது.

கிழக்கில், அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்க் கூட்டமைப்புக்குப் போட்டியாக, வேறு சில உதிரிக்கட்சிகள் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தமிழர்களின் வாக்குகள் சிதறுண்டு போகலாம்.

மறுபுறத்தில், கிழக்கைப் பொறுத்தவரை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்வேறு களநிலைச் சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தோ அல்லது தனித்தோ போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

அதற்கெதிராகப் பல முஸ்லிம் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு, களமிறங்கக் கூடும். மு.காவைத் தவிர்த்து, அவ்வாறு ஒரு கூட்டமைப்பு போட்டியிட்டாலும் ஒப்பீட்டளவில் அதிக வாக்குகளைப் பெற முடிந்தாலும் தனியே முஸ்லிம் கூட்டமைப்பால் ஆட்சியமைப்பது, ‘கல்லில் நார் உரிக்கின்ற வேலை’யாக இருக்கும்.

அவ்வாறு, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக, கூட்டமைப்பு சாத்தியப்படவில்லை என்றால், கிழக்கில் பல முஸ்லிம் கட்சிகள் போட்டியிட்டு, ஆட்சியில் பெரும்பான்மைப் பலத்தைக் கூட, முஸ்லிம்கள் அடைந்து கொள்ள முடியாதவாறு வாக்குகள் சிதறிப் போவதற்கு நிறையவே சந்தர்ப்பம் உள்ளது.

எது எவ்வாறிருப்பினும், கிழக்கு மாகாணத்தில், ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் முதலமைச்சுப் பதவியை தம்வசப்படுத்துவதிலும் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே கடுமையான பனியுத்தம் ஆரம்பித்திருக்கின்றது.

சமகாலத்தில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை, கிழக்கின் புதிய ஆளுநராக நியமித்திருக்கின்ற அரசாங்கமும் நேரடியாகவோ அல்லது சிறுபான்மைக் கட்சிகளைத் துணைக்கழைத்துக் கொண்டோ, அடுத்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை நாடிபிடித்துக் கொண்டிருக்கின்றது.

பல அமைச்சுகளைப் பெறுவதை விட, ஒரு முதலமைச்சைப் பெறுவது அனுகூலமானது என்று விடயமறிந்தவர்கள் கூறுவர். அந்த வகையிலேயே, முதலமைச்சுப் பதவியைப் பார்த்து எல்லாக் கட்சிகளும் வாயூறிக் கொண்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

கிழக்கு மாகாணத்தில், இதற்கு முன்னர், தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருந்த போதிலும் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிவந்தவர் அல்லர். அத்தோடு அதற்குப் பிறகு முஸ்லிம் முதலமைச்சர்கள் இருவர் பதவி வகித்திருக்கின்றனர். எனவே, இன்னுமொரு தடவை அந்த வாய்ப்பை முஸ்லிம் தரப்பு விட்டுத் தருவதில்லை என்பதில்,
த.தே.கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது.

தமிழ்க் கூட்டமைப்பின் ஆட்சியையும் முதலமைச்சுப் பதவியையும் உறுதிப்படுத்துவதற்காக கிராம மட்டத்தில் இருந்து, வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற அதேநேரத்தில், அடுத்த முதலமைச்சர் தமிழராகவே இருக்க வேண்டும் என்ற கோதாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துகளை வெளியிடுவதையும் காண முடிகின்றது.

இதற்கு, முஸ்லிம்களை இணங்க வைப்பதற்கு த.தே.கூ முயற்சி செய்யும். அந்த முயற்சி பலிக்காவிட்டாலும் முஸ்லிம் ஒருவரை மீண்டும் முதலமைச்சராக்க தமிழர் அரசியல் விரும்பாது. அதற்குப் பல நேரடி, மறைமுகக் காரணங்கள் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க, சில காலம் சத்தமின்றி இருந்த முன்னாள் பிரதியமைச்சரும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் பிரதித்தலைவரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அண்மையில் வெளியிட்டுள்ள கருத்து, கடும் அவதானத்தைப் பெற்றிருக்கின்றது.

“கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது. கிழக்கை முஸ்லிம்களுக்குத் தாரை வார்ப்பதில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உறுதியாக இருக்கின்றன. எனவே, இதை மாற்றியமைப்பதற்கு, தமிழ் மக்கள் போராட வேண்டும். அதற்காக வேற்றுமைகள் மறந்து, எம்முடன் கைகோர்க்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

கிழக்கில் முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது என்பது ஒரு பெருப்பிக்கப்பட்ட தோற்றப்பாடாகும். இரண்டு முஸ்லிம் முதலமைச்சர்கள், தொடர்ச்சியாகப் பதவியில் இருப்பதாலும், முஸ்லிம்கள் மத்தியிலும் மாகாணத்திலும் அதிகாரத்தில் இருப்பதாலும் அவர்கள் ஆதிக்கத்துடன் இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், ஆதிக்கம் மேலோங்கிவிட்டது என்பது மிகைப்படுத்தப்பட்டதாகும்.

கிழக்கில், அடுத்த தேர்தலில் மாற்று அணியாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள கருணா அம்மான், எதற்காக இவ்வாறான ஒரு கருத்தை கையில் எடுத்திருக்கின்றார் என்று அனுமானிப்பது கஷ்டமான விடயமல்ல.

மத்தியில் ஆட்சிமாற்றத்துக்கு எதிரணியினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், மஹிந்தவுக்கு நெருக்கமாக இருந்தவரும், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் எனக் கூறியுள்ளவருமான இவர், தமிழ்க் கூட்டமைப்பையும் ஐ.தே.கட்சியையும் விமர்சிக்கின்றார் என்றால், இவ்விரு கட்சிகளும் இல்லாத, வேறு தரப்பு ஒன்று இவருக்குப் பின்னால் இருந்து உற்சாகம் ஊட்டுகின்றதோ என்ற நியாயமான ஐயப்பாடு ஏற்படுகின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பதவியில் இருந்தவர் என்ற வகையில், கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு உயிர்ப்பறிப்பு சம்பவங்களுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் என்று முஸ்லிம்களால் சுட்டுவிரல் நீட்டப்படுகின்ற சமகாலத்தில், புலிகள் அமைப்பில் பிளவை ஏற்படுத்தி, போராட்டம் தோல்வியுறக் காரணமானவர் என்று தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகின்ற முரளிதரன், இன்று முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதெனக் கூறி, அதற்கெதிராகத் தமிழர்களை ஒன்றுபடுமாறு அழைப்பு விடுப்பது, சிறுபான்மைச் சமூகங்களுக்கு இடையில், எதிர்ப்பு அரசியலுக்கு உரமிடும் என்பதுடன், பெரிதும் தனிப்பட்ட அரசியல் நலனை நோக்காகக் கொண்டதாகவும் தெரிகின்றது.

எனவே, வழக்கமான சிறுபான்மைக் கட்சிகளுக்கு மேலதிகமாக, வேறு தரப்பினரும் கிழக்கில் அதிகாரம் மற்றும் உயர்பதவி மீது கண்வைத்துள்ளமை கண்கூடு. எது எவ்வாறாயினும், சிறுபான்மையினரின் ஆட்சியதிகாரத்தில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு என இரு மாகாண சபைகளிலும் அதிகாரப் போட்டி ஆரம்பமாகியிருக்கின்றது.

வடக்கில் உள்ள, குத்து வெட்டுக்களாகவும் கிழக்கில் இரு இனங்களுக்கு இடையிலான பலப்பரீட்சையாகவும் இது வியாபித்திருக்கின்றது. எனவே பல்லின சமூகங்கள் வாழும் மாகாணங்களில் அதிகாரங்களைத் தமக்கிடையே பகர்ந்து கொள்ளவும் முதலமைச்சர் பதவியைக் கூட பகர்ந்து கொள்ளவோ அல்லது சுழற்சி முறையில் கைமாற்றிக் கொள்ளவோ தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும்.

வடக்கில் தமிழர்களுக்கு இடையிலும் முஸ்லிம்களுடனும் அதிகாரம் பகர்ந்து கொள்ளப்பட வேண்டும். கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் தமக்கிடையே எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொள்ளும் விதத்திலமைந்த அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..!!
Next post `முதல்வன்’ படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் நடிக்கிறாரா?..!!