‘மிக்காரும் இல்லை; தக்காரும் இல்லை’: பிரதமர் மோடியின் காய்நகர்த்தல்கள்..!! (கட்டுரை)

Read Time:14 Minute, 3 Second

image_bc584225f0இந்திய பிரதமரின் 2019 நிகழ்ச்சித்திட்டம், ஏறக்குறைய இலக்கை எட்டி விட்டது.

காங்கிரஸ் முன்னின்று உருவாக்கிய, கூட்டணியை பீஹாரில் உடைத்துச் சிதறடித்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் வலுவான எதிர்க்கட்சியோ, எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த வேட்பாளரோ இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பீஹார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து விலகி, பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓரிரவுக்குள், மீண்டும் முதலமைச்சர் ஆகியிருப்பது பீஹாரில் நடக்கும் புதிய ‘மாஜாஜாலம்’ அல்ல!

என்றாலும், இது பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், அர்த்தமுள்ள விளையாட்டாகவே அமைந்திருக்கிறது. ‘மோடியுடன் மாத்திரம் இந்தியா’ என்ற அரசியல் சூழ்நிலை உருவாகி, பாரதீய ஜனதா கட்சிதான் முதன்மையான தேசியக் கட்சி என்று மாறியிருக்கிறது.

பா.ஜ.கவுக்கு தற்போது, இந்தி பேசும் வட மாநிலங்களில் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில், ஏற்கெனவே ஆட்சியைப் பிடித்திருக்கும் பா.ஜ.க, இப்போதைக்கு பீஹாரையும் பிடித்திருக்கிறது.

நிதிஷ்குமாருடன் கூட்டணியாக இங்கு ஆட்சி அமைத்தாலும், பீஹாரில் தனித்து பா.ஜ.க ஆட்சியைப் பிடிப்பதற்கான முதல் கட்ட முயற்சியில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சிகளைப் பொறுத்தமட்டில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு குறிப்பாக, பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதே ஆசை.

அந்த ஆசையின் வெளிப்பாடுதான், பீஹாரில் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் அமைத்த லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார், காங்கிரஸ் கூட்டணி. ஆனால், பீஹாரை விட்டுத் தாண்டாமல், அங்கேயே கூட்டணி கொடி அறுந்து விழுந்து விட்டமை, பா.ஜ.கவுக்கு இப்போதைக்கு கிடைத்துள்ள அதிர்ஷ்டம்தான்.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நிதிஷ்குமார் தயார் செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திரமோடிக்கு, எதிரான கருத்து கொண்டவர் நிதிஷ்குமார் என்பதுதான் அதற்கு காரணம்.

ஆனால், பீஹாரில் லாலு பிரசாத் யாதவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையில் இருந்த பழைய பகை, மோடியுடனான கருத்து வேறுபாடு ஒரு பிரச்சினையில்லை என்ற கட்டத்துக்கு நிதிஷ்குமாரை கொண்டு சென்றது.

இந்த மனநிலைக்கு வந்து விட்ட நிதிஷ்குமாருக்கு, அடுத்தடுத்து பா.ஜ.கவுக்கு கிடைத்த வெற்றியும் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, ஓர் உருப்படியான தலைமை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதும் கவலையளித்தது.

குறிப்பாக, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், உத்தரபிரதேசத்தில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக வெற்றி, குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் கிடைக்கப் போகும் வெற்றி; இவை அனைத்தும், பா.ஜ.க அனைத்து மாநிலங்களிலும் ஆணித்தரமாகக் காலூண்றி வருகிறது, என்ற எண்ணவோட்டத்தை நிதிஷ்குமாருக்கு ஏற்படுத்தியது.

காங்கிரஸாலோ அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தியாலோ, இனி பா.ஜ.கவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாது என்பதும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என்பதையும் உணர்ந்த நிதிஷ்குமார், தனது ‘பிரதமர் கனவை’ கைவிட்டார்.

அந்த நிமிடத்திலிருந்து, அவர் பா.ஜ.கவின் திசை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்தது முதற்கட்டம் என்றால், குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்தது இறுதிக் கட்டம்.

திரும்பிப் பார்த்த நிதிஷ்குமாரை, ஓடோடிச் சென்று அரவணைத்துக் கொண்டது பா.ஜ.க. இதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் மீதான அதிரடிகள் தொடங்கின. பத்து வருடங்களுக்கு முன்பு, அவர் மீது கூறப்பட்ட புகாரில் கூட, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

“சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்ததற்கு எனக்கு விளக்கம் சொல்லுங்கள்” என்று லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவிடம், நிதிஷ்குமார் கேட்டதும், அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதும்தான் வினோதம்.

ஏனென்றால், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தவர் லாலு பிரசாத் யாதவ் என்று முழுமையாகத் தெரிந்துதான், நிதிஷ்குமார் கூட்டணிக்குச் சம்மதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ், அவரது மகன், அவரது மகள் ஆகியோர் மீது, மத்திய விசாரணை அமைப்புகளின் அதிரடி நடவடிக்கைகளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு, அமைதி காத்தார் நிதிஷ்குமார்.

இந்த இடத்தில்தான் லாலு பிரசாத் யாதவ், “சி.பி.ஐ வழக்கு, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. அது குறித்து நிதிஷ்குமாருக்கு விளக்கம் அளிக்க வேண்டியதில்லை” என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.

பா.ஜ.கவுடன் நிதிஷ்குமார் நெருங்கிச் சென்று வெகு நாளாகி விட்டன என்பதை முடிவு செய்த லாலு பிரசாத் யாதவ், பா.ஜ.க மற்றும் நிதிஷ் எதிர்ப்பை முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக இருந்தார்.

விளைவு, பீஹார் கூட்டணி கலைக்கப்பட்டு, நிதிஷ்குமார் – பா.ஜ.க புதிய கூட்டணி உருவாகியிருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த 2019 பிரதமர் வேட்பாளரை, பா.ஜ.க வெற்றி கரமாக வளைத்துப் போட்டு விட்டது.

அதனால்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போது, போட்டிக்கு ஆள் யாரும் இல்லாமல் பிரதமர் நரேந்திரமோடி, தனித்துவமான வேட்பாளராக, மீண்டும் ஒரு முறை வெற்றி பெறும் வாய்ப்புடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் பா.ஜ.க இருக்கிறது.

பா.ஜ.கவுக்குப் போட்டியாகச் சொல்லப் போனால், பிரதமர் நரேந்திரமோடியைச் சவாலுக்கு அழைக்கும் வேட்பாளராகக் களத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிற்கப் போவது யார் என்று 2014 தேர்தல் நடந்த கையோடு கேட்டிருந்தால், அதில் முதலிடத்தில் இருந்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரின் திடீர் மறைவால், இன்றைக்கு அ.தி.மு.க பல துண்டுகளாகச் சிதறுண்டு கிடக்கிறது.

அடுத்தது, முலயாம் சிங். அவரோ தன் கட்சிக்குள், குறிப்பாகத் தன் சொந்த பிள்ளையின் அரசியலில் சிக்கி, அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற அந்தஸ்தை இழந்து விட்டார்.

மூன்றாவது, நிதிஷ் குமார். பீஹார் முதலமைச்சராக இருந்த இவர், இப்போது மாநில அரசியலே போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். “ஊழலுக்கு எதிராக, நான் லாலு பிரசாத் கூட்டணியை விட்டேன்” என்று கூறும் இவரும், “ஊழல் காங்கிரஸை விரட்டியடித்தேன்” என்று கூறும் பிரதமர் நரேந்திரமோடியும் எத்தனை நாளைக்கு “ஒரே உறையில் இரு கத்திகள்” போல் இருக்க முடியும் என்று தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையில் ஒரு கட்டத்தில், ஏன் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போதேகூட, நிதிஷ்குமார் தனித்து விடப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆகவே, நிதிஷ்குமாரும் பிரதமருக்கு இப்போது போட்டியில்லை.

எஞ்சியிருப்பது இருவர். ஒருவர் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆனால், அங்கும் அவருக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி வரும் ஜெகன்மோகன் ரெட்டியுடன் பா.ஜ.க நட்புக் காட்டி வருகிறது.

சந்திரபாபு நாயுடு ஊழல்கள் பற்றி, ஜெகன்மோகன்ரெட்டி போட்ட புத்தகத்தை பிரதமர் நரேந்திரமோடி பெற்றுக்கொண்டது, சந்திரபாபு நாயுடுவை எரிச்சலூட்டினாலும் இப்போதைக்கு என்ன செய்ய முடியும் என்ற தயக்கத்துடன் இருக்கிறார்.

அடுத்து இருப்பது, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி. இன்றைக்கு அவரது முழுக்கவனமும் மேற்குவங்கத்தில் மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தை மீட்ட மம்தா பானர்ஜி, அந்த மாநிலத்தை அவ்வளவு எளிதில் விட்டுவிட்டு தேசிய அரசியலுக்குப் போக மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது.

ஆகவே, இன்றைக்கு பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிட உருப்படியான பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதே இந்திய அரசியலின் யதார்த்தமான நிலை. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் என்று அதிரடி சீர்திருத்தங்களால் அனைத்துத் தரப்பு மக்களும் பா.ஜ.க அரசாங்கத்தின் மீது மோகத்தில் இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது.

ஆனால், அவர்களின் கோபத்தைக் காண்பிக்கும் வகையில், எதிரில் பிரதமர் வேட்பாளர் யாரும் இப்போதைக்கு இல்லை என்பதே பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு.

இந்த வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் இனி எஞ்சியிருக்கும் இரு வருடங்களுக்குள், பா.ஜ.க அரசாங்கம், மாநில உரிமைகள் விடயத்திலும் மக்களை பாதிக்கும் விடயங்களிலும் கவனம் செலுத்தினால், 2019 இல் மீண்டும் நரேந்திரமோடியே பிரதமராகும் வாய்ப்பே இருக்கிறது.

அதற்கான அரசாங்க ரீதியான பணிகளை ஏற்கெனவே பா.ஜ.க செய்து விட்டாலும், அரசியல் ரீதியாக அப்படியொரு வேட்பாளர் உருவாகி விடாமல் தடுக்கும் பணியில் பா.ஜ.க வெற்றி கண்டு விட்டது.

அதுதான், பீஹாரில் நடைபெற்றுள்ள கூட்டணி முறிவும், பா.ஜ.க கூட்டணியுடன் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டதும் என்றால், அதுதான் இன்றைய இந்திய அரசியல் நிலைப்பாடு.

இனி, பிரதமர் பதவிக்கு மீண்டும், நரேந்திர மோடி மட்டுமே என்ற அரசியல் கோட்பாடு அசைக்க முடியாத அளவுக்கு விதைக்கப்பட்டு விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு படத்தில் இத்தனை காட்சிகள் சென்ஸாரில் கட் செய்யப்பட்டதா? அதிர்ந்த திரையுலகம்..!!
Next post நடிகை கொய்னா மித்ராவுக்கு பாலியல் தொல்லை..!!