மூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..!!
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து என்கிறது மறைநூல். குழந்தைக்கு பசிக்குமே என்று அதற்குப் பசிவந்து அழு முன்பே பாலூட்டு வாளாம் தாய்! அந்த தாயை காட்டிலும் மிகுந்த பரிவை, கருணையைத்தன் அடியார்களிடம் காட்டுவானாம் இறைவன்.
அதைப்போல ஆயுர்வேதம் நினைந்து பரிந்து மனிதகுலத்தை வழி நடத்துகிறது. ஒரு நாளின் துவக்கம் தூக்கம் கலைந்து கண்விழித்து எழுதல், திருவள்ளுவர் ‘உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்றார். இன்று ஒருநாள் உறங்கி மீண்டும் விழித்தெழுவதே மறுபிறப்புக்கு சமம் என்பதுபோல வாழ்க்கை ஆகிவிட்டது.
பிரம்ம முகூர்த்ததில் எழுவது நன்மை பயக்கும். அதிகாலை 3 மணியில் இருந்து 5 மணிக்குட்பட்ட இந்த வேளையில் காற்றில் ஓசோன் மிகுந்திருக்கும். தியானம், நடைபயிற்சி முதலியன மேற்கொள்ள சரியான நேரம் இதுவே.
அறிவியல் பூர்வமாக பார்க்கும்போது இந்த நேரத்தில் இரத்த ஓட்டம் நுரையீரலுக்கு அதிக கவனம் செலுத்தி பாய்கிறது என்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதை கணித்திருக்கிறார்கள். ஆகவே தான் மூச்சுப்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து காலை 5 மணி முதல் 7 மணிவரை உடலில் பெருங்குடலுக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்குமாம். பெருங்குடலை சுத்தப்படுத்தும் விதமாக அப்போது மலஜலம் கழிப்பது இயல்பாக நடக்க வேண்டும்.
அடுத்து பல் துலக்குவது, அதிக நுரைவரும் பற்பசை யையே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிறார்கள். ஆனால் எத்தனை தீயபொருட்கள் (ரசாயனங்கள்) இவற்றில் இருக்கின்றன என்று பாருங்கள் ட்ரிகிளோசன் – தோலில் எரிச்சலை உண்டாக்கும்.
கிளசரனின் – பல் மீது ஒரு படிமத்தை உண்டாக்கி விடும்.
சர்பிட்டல் – அடிக்கடி மலம் கழிக்கும் உபாதையை தரும்
தோல் எரிச்சல் தரும். காலப்போக்கில் ஈரல் சிறுநீரக பாதிப்பு வரும்.
(செயற்கை இனிப்பு) :
சேக்கரின் – அலர்ஜி தரும். புற்றுநோய் வரும்.
இத்தனை தீங்கு விளை விக்கும் பற்பசைகளில்தான் எத்தனை ரகங்கள். இந்த ரசாயனம் கலந்த எச்சிலால் நிலமும் மாசுபடுகிறது. மேற்கத்திய நாகரிகத்தால் விளைந்த மாபெரும் கேடுகளில் இதுவும் ஒன்று.
நம் முன்னோர்கள் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று ஆலமரக்குச்சிகளாலும், வேப்பமர குச்சிகளாலும் பல்துலக்கினர். இவை தீங்கு விளைவிக்காதவை. இக்குச்சிகள் பற்சிதவை தடுக்கும். ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தையும், தொற்றுகளையும் தடுக்கும். தவிர, நெல்உமிக்கரியுடன் மிளகும் உப்பும் சேர்த்து அரைத்து, அதைக்கொண்டும் பல் துலக்கினர். இது கிருமிகளை அழிப்பதோடு வாயிலுள்ள சுவைமொட்டுக்களை சுறுசுறுப்பாக்கி பசியை தூண்டும்.
வாய் கொப்பளிப்பது :
எண்ணெயை உபயோகித்து வாய் கொப்பளிப்பதால் வாய் துர்நாற்றம் நீங்கும். பல்சொத்தை வராமல் தடுக்கும். பல்கரை நீங்கும். ஈறுவீக்கம் சரியாகும். வாயில் இருக்கும் ஒருசெல் உயிரினங்களின் செல் மெம்பரேன் கொழுப்பு சத்தால் ஆனதாக இருக்கும். அது எண்ணெயில் இருக்கும் கொழுப்புடன் சேர்ந்து வெளியேறி விடுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.
அப்யங்கம், குளியல்
“சனி நீராடு” என்று பழமொழி இருக்கிறது. சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயுடன் இஞ்சி, பூண்டு, மிளகு, வற்றல் மிளகாய் ஆகியன சேர்த்துக் காய்ச்சி, கைபொறுக்கும் சூட்டில் தலை முதல் பாதம் வரை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிப்பர். பின் ஓய்வெடுப்பர். குளிப்பதனால் இழந்த சக்தியை உடல் மீண்டும் பெறவே இந்த ஓய்வு!
இவ்வாறு தொடர்ந்து எண்ணெய் தேய்த்து வந்தால் மூட்டுக்கள் இலகுவாக இயங்கும். ஏன் முழு உடலுமே இலகுவாக இயங்கும். தோல் வனப்புடன் இருக்கும். இன்று இவையெல்லாம் மறக்கப் பட்டதால் மருத்துவமனைக்கு போய் சிகிச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
* எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதால் மனித உடல் வளர்ச்சிக்கான சுரப்பு அதிகமாக சுரக்கிறது.
* ரத்தத்திலிருந்து செரி மானம் ஆன புரதத்தை செல்களுக்கு வேகமாக அனுப்புகிறது. இதன் காரணமாக வளர்ச்சி தூண்டப்படுகிறது.
*இந்த சுரப்பு கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்டின் வேகமான வளர்சிதை மாற்றத்திற்கும் காரணமாகிறது.
* ரத்தத் திலுள்ள சர்க்க ரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கிறது.
* குழந்தைகள் வளர்ச்சி யில் நம்ப முடியாத அளவுக்கு வேகம் காணப்படுகிறது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
டாக்டர் பெர்னி ஸீகல் என்பவர் புற்று நோய் வந்தவர்கள் கீமோதெரபி எனப்படும் கதிர் வீச்சு சிகிச்சைக்குப் போகு முன் முழு உடம்பு மசாஜ் எடுத்துக் கொண்டால் வேகமாக குணமாவது கண்கூடு என்று கூறுகிறார்.
நல்லெண்ணெய் பற்றிய ஆராய்ச்சிகள் கூறும் உண்மைகள் நம் முன்னோர் கள் அன்றே இவற்றை யெல்லாம் நுண்ணிய முறையில் அறிந்தே அப்யங்கம் முதலியவற்றை வகுத்திருக்கிறார்கள் என்பது வியப்பை தருகிறது.
* நலலெண்ணெய் பேக்டிரியா போன்ற நுண் கிருமிகள், வைரஸ் கிருமிகள் வளர விடாமல் தடுக்கிறது.
* ஆன்டி ஆக்சினைட்டாக செயல்பட்டு புற்று நோய்காரணிகளை வெளியேற்றுகிறது.
* நல்லெண்ணெய் மட்டுமே மிகவும் அடிப்படையான உடற்கூறான டி.என்.ஏ. நிலையிலிருந்து வேலை செய்கிறது என்று புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
* நல்லெண்ணெயுடன் மசாஜ் சேரும் போது வியக்கத்தக்க நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று டாக்டர் பெர்னியர் ஸீகல் கூறுகிறார்.
* நல்லெண்ணெய் போலவே விளக்கெண்ணையும் மிகப்பெரிய நன்மைகளை விளைவிக்கிறது.
* நம் மூளையில் உள்ள தைமஸ் சுரப்பியைத் தூண்டி வெள்ளை அணுக்கள் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
* வெள்ளை அணுக்கள் தான் நமது உடலில் நுழையும் வேண்டாத பொருட்களுடன் போராடி அவற்றை வெளியேற்றுகின்றன. கழிவுகளை வெளியேற்றி உடலை மீண்டும் பூரண குணமடையச் செய்கின்றன.
இவ்வாறு தேய்த்த எண்ணெயை போக்க பயறு மாவு, கடலை மாவு ஆகியவற்றை உபயோகித்தனர். கிராமங்களில் களிமண்ணைக்கூட பயன்படுத்துவர் (இயற்கை மருத்துவத்தின் ஓர் அங்கமாக “களிமண் குளியல்” இருக்கிறது.)
எல்லாவற்றையும் விட வாகை மரப்பட்டை பொடி சிறந்த சோப்பு ஆகும். நன்கு காய்ந்த மரப்பட்டையை தோலை நீக்கி, சிறு,சிறு துண்டுகளாக்கி, பொடி செய்து, சலித்து பயன்படுத்துவர்.
ஆனால் இன்று எத்தனை சோப், எத்தனை நிறங்களில், வாசனைகளில். தமது சோப்தான் உலகிலேயே சிறந்தது என விளம்பரங்கள். இவற்றில் மயங்கி, இந்த சோப்புகளை பயன்படுத்துகிறோம், அவை என்னென்ன தீங்குகளை விளைவிக்கும் என்று தெரியாமலேயே!சோப்பில் உள்ள ரசாயனங்களால் கண் மற்றும் சுவாச உறுப்புகளை பாதிக்கும், புற்றுநோயை உண்டாக்கும், தோலை பாதிக்கும் எக்ஸிமா (தோல் நோய்) வரும், நாளமில்லா சுரப்பிகளின் செயலை பாதிக்கும், சுரப்புகளை போலவே இயங்க தொடங்கும்.
இவையெல்லாம் இல்லாத சோப்பாக பார்த்து வாங்கி உபயோகிக்க வேண்டும். இல்லையெனில் சொந்த செலவில் நமக்குநாமே சூன்யம் வைத்துக் கொள்வது என்பார்களே, அதுபோல தீமையை விலை கொடுத்து வாங்கிய நிலை வரும்.
ஆடி மாத ஆலோசனைகள் :
இப்போது ஆடிமாதம் தொடங்கியுள் ளது. “ஆடிக் காற்றில் அகப்பட்ட பஞ்சுபோல” என்று பழமொழி இருக்கிறது. இந்த வேகமான காற்று நேரே உடல் மீது படாதவாறு பார்த்துக்கொள்வது நல்லது. காது, நெஞ்சுப்பகுதி ஆகியவை முழுவதும் மூடப்பட்டிருப்பது நல்லது.
சூழலே பாக்டிரியா போன்ற நுண்கிருமிகளால் மாசுபட்டு இருக்கும். ஆகவே பாதுகாப்பான குடிநீர் தேவை. பசி குறைவாக இருக்கும். ஆகவே எளிதில் சீரணமாகும் உணவுகளையே எடுத்துக்கொள்ள வேண்டும்.
* இது இருபருவங்களின் சந்திப்புக் காலம் (ரிது சந்தி) (வெயில் காலம் + மழைக்காலம்). ஆகவே ஒரு முறை வயிற்றைச் சுத்தப்படுத்திக் கொள்வது நல்லது.
* குழந்தைகளுக்கு எளிதில் ஜலதோஷம் பிடிக்கும். அதற்கு ஆடாதோடை இலை 3 எடுத்து, ஆவியில் வேகவைத்து, வெள்ளைத் துணியில் வைத்துக் கட்டிப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாறு 5 துளியுடன் 5 துளி தேன் கலந்து கொடுக்க வேண்டும்.
* சீரகத் தண்ணீர் குடித்தால் கபம் வராது.
* வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி, கண்டங்கத்திரி இலை இவை அனைத்தும் சேர்த்து 30 கிராம் எடுத்து அத்துடன் 1 கிராம்பு சேர்த்து 500 மிலி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து 250 மிலி ஆகக் குறைந்தவுடன் அதைக் குடிக்கலாம். (குழந்தைகளுக்கு இலைகளின் அளவைக் குறைக்கவும்).
* இஞ்சியைக் கழுவி தோல்சீவி, துண்டாக்கி வெள்ளைத் துணியில் வைத்து மடித்து அடித்து நசுக்கி சாறு எடுக்க வேண்டும். இஞ்சிச்சாறில் 5 துளி + 5 துளி தேன் கலந்து சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
* வாரம் ஒருமுறை நிலவேம்புக் கசாயம் கொடுக்கலாம்.
இப்போது மக்களிடையே இதைப்பற்றி விழிப்புணர்வு மிகுந்துள்ளது. அரசே ஊக்குவிக்கிறது.
Average Rating