தீக்காயங்களில் சிக்கியவர்களை உயிர் பிழைக்க வைக்க உதவும் தோல் தானம்..!!
உயிர் காப்பான் தோழனைப்போல்….உயிர் காப்பான் தோல் என்றால் அது நிகழ்கால உண்மையாக உள்ளது. ஆம்….தொப்புள் கொடிவரை தானம் செய்யும் வேளையிலும், தோல் தானே என்று தோலை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதனையும் தானம் செய்தால், அது தீக்காயம், விபத்துகளில் சிக்கிய பலரை உயிர்பிழைக்க வைக்கும் உயிராற்றலாக விளங்குகிறது.
இது குறித்து கங்கா மருத்துவமனை கை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.ராஜ சபாபதி என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்:-
இயற்கையான உடலுக்கு தோல், இறைவன் படைத்த ஆடையாக உள்ளது என்று சொல்வதுண்டு. கடுங்குளிர் பிரதேசங்களில் வசிக்கும் மனிதர்கள், விலங்குகளுக்கு தகுந்தாற்போன்று தோல் அமைந்து விடுகிறது. ஆகவே இந்த தோல் என்பது மனிதர்கள், விலங்குகளின் வெளிப்புற உடலின் பாதுகாப்பாக உள்ளது. உடலில் காணப்படும் உறுப்புக்களில் மிகப்பெரியதும், மிக விரைவான வளர்ச்சியைக் கொண்டிருப்பதும் தோல் பகுதிதான்.தோல்தான் உடலில் உள்ள தசைகள், எலும்புகள், தசைநார்கள், உள்ளுறுப்புக்களை பாதுகாக்கின்றது. உடலைக் கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது தவிர வெப்ப நிலையை பாதுகாப்பதற்கும், வெப்ப நிலையை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ளவும், உதவுகிறது. தொடு உணர்வுக்கு தோல் இன்றியமையாதது. உயிர்சத்து-டி, பி போன்றவற்றையும் பாதுகாக்கிறது.
தோலை பொறுத்தவரை மனிதர்களிடம் நிறம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. தோலின் மேற்பரப்பு பொதுவாக எண்ணெய் பசை கொண்டதாக உள்ளது. ஆனால் கால நிலைகளுக்கு தகுந்தாற்போன்று தோலின் தன்மை மாறுபடுகிறது. கடின உயிரணுக்களை கொண்ட மேற்புறத்தோல் அடுக்கில் கை, கால்களில் அமைந்துள்ளன. இந்த தோல் படலம் கடினத்தன்மை வாய்ந்ததாக 15 முதல் 20 வரையிலான அடுக்குகளைக் கொண்டுள்ளது. மேலும் கடினத்தோலின் அடிப்புற அடுக்கான இந்த அடுக்கு தெளிவாக ஒளி ஊடுருவக்கூடியத் தன்மை கொண்டது. மேற்புறத்தோலின் ஆழமான அடுக்கு கீழ்முனை உயிரணுப் படலமாகும். இந்த உயிரணுக்கள் மேலுள்ள பழைய உயிரணுக்களை வெளி நோக்கித் தள்ளிவிடுகின்றன. வெளி உயிரணுக்கள் புதிதாக உருவாகும் புதிய உயிரணுக்களைப் பாதுகாக்கின்றன.
தானம் செய்யலாம்
ஆகவே கண் பார்வையற்றோருக்கு கண்தானம் மூலம் மறு வாழ்வு கிடைப்பது போல் தீக்காயம், விபத்து போன்றவற்றில் சிக்கி தோல் சேதமடைந்து ஆபத்தான நிலையில் வருகிறவர்களுக்கு தோல் தானம் மறு வாழ்வு அளித்து வருகின்றது. தோல் தானம் மீண்டும் மலரச்செய்கிறது. ஆகவே தோல் தானம் செய்வதில் தயக்கம் காட்டக்கூடாது. ஒருவர் இறந்த 6 மணிநேரத்துக்குள் தோல் தானம் அளிக்க தகவல் தெரிவிக்கலாம். உடனே மருத்துவ குழு, அவர்கள் இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவர்களின் முதுகு, கால் மற்றும் தொடை பகுதிகளில் இருந்து 0.3 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் மட்டுமே தோல் எடுக்கப்படுவதால் இறந்தவர்களின் உடலில் இருந்து ரத்த கசிவு எதுவும் இருக்காது. மேலும் பார்ப்பவர்களுக்கும் உடலில் எந்தவிதமான மாறுதலும் இருக்காது. தற்போது தோல் கிடைக்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
காப்பாற்ற முடியும்
தற்போது கோவை கங்கா மருத்துவமனையில் தோல் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. தோல் தானம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் தோல் கிடைக்காமல் ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் அதிகப்படியானோர் தங்கள் தோல்களை தானம் செய்வதால் உடலில் 40 சதவீதம் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற முடிகிறது. பொதுவாக தீக்காயத்தால் உடல் பாதிக்கப்படும்போது குறிப்பிட்ட பகுதியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், இறப்பு நேரிடுவதை தடுக்க முடிவதில்லை. அந்த நேரங்களில் பெறப்பட்ட தோல் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படும் போது இறப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
குறிப்பாக தீக்காயம், விபத்து போன்றவற்றில் தோல் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தானமாக பெறப்பட்ட தோல், உடனே பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி இயற்கை தோல் பொருத்தப்பட்டது போன்று ஆகிவிடும். தீக்காய புண்கள் விரைவில் குணமடைந்து விடும். இதனை தொடர்ந்து, தானமாக பெறப்பட்ட தோலுக்கு பதிலாக, சம்பந்தப்பட்ட நோயாளியின் வேறு பகுதியில் இருந்து தோல் எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டு, இயற்கை தன்மை பொருந்தியதாக மாற்றப்பட்டு விடும். இதனை தொடர்ந்து அவரது உடலில் தோல் வளர்ச்சி அடைந்து விடுகிறது.
6 மணி நேரத்துக்குள்…
தொற்றுநோய் மற்றும் வைரஸ் கிருமி தாக்குதல், தோல் நோய்கள், எய்ட்ஸ் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களின் தோல்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதே சமயம் ஒருவர் இறந்தால் 6 மணி நேரத்திற்குள் அந்த உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படும் தோலை 5 வருடங்களுக்கு பதப்படுத்தி வைக்கலாம். இந்தத் தோலை 5 டிகிரி வெப்பநிலையில் ஒருவகையான திரவத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. தோல் தானம் பெற ரத்தப் பொருத்தம் அவசியம் இல்லை. உடலின் பாதுகாவலனாக இருக்கும் தோலை 18 வயது நிரம்பியவர்கள் யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம் என்கிறார் அவர்.
Average Rating