மதுக்கரை அருகே பெண் கொலையில் காதலன் கைது..!!
கோவையை அடுத்த ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்தவர் விஜயராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரேவதி (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி கடந்த 1 மாதத்துக்கு முன்பு கணவர், குழந்தைகளை பிரிந்து மதுக்கரை அருகே அரிசிபாளையத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினார். கடந்த 25-ந் தேதி ரேவதி வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மதுக்கரை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ரேவதிக்கு அதே பகுதியை சேர்ந்த கார் டிரைவருடன் பழக்கம் இருந்ததும், அவர் தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். ஆனால் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். இதில் ரேவதி கணவர் மற்றும் குழந்தைகளுடன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான பாலகிருஷ்ணன்(27) என்பவருடன் பழக்கம் இருந்ததாக தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் ரேவதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
கோத்தகிரியை சேர்ந்த ரேவதி கடந்த 5 வருடமாக குடும்பத்துடன் எனது வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்தார். அவருக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ரேவதி கார் டிரைவர் ஒருவருடன் நெருங்கி பழகினார். அதையறிந்த நான் வாடகை வசூலிக்க சென்ற போது ரேவதியுடன் சகஜமாக பேசினேன். இதில் அவர் எனது காதல் வலையில் வீழ்ந்தார்.
நான் ரேவதியை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக இருந்தேன். அவருக்கு நான் இதுவரை ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளேன். ரேவதி கார் டிரைவருடன் சுற்றுவதை நிறுத்துமாறு கூறினேன். ஆனால் ரேவதி என்னுடன் பேசுவதை தவிர்த்து கார் டிரைவர் எடுத்துக் கொடுத்த வீட்டில் தங்கினார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.
இதனால் ரேவதிக்கு நான் கடனாக கொடுத்த ரூ.1½ லட்சத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் பணத்தை தர முடியாது, மீறினால் உன்னை பற்றி வெளியில் தவறாக கூறுவேன் என மிரட்டினார். இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இனியும் ரேவதியை உயிரோடு விட்டால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன்.
சம்பவத்தன்று நள்ளிரவு ரேவதி வீட்டுக்கு சென்று கதவை தட்டினேன். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றேன். அங்கு தரையில் படுத்து உறங்கிய அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றேன். போலீசார் துப்பு துலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பாலகிருஷ்ணனிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று பால கிருஷ்ணனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
Average Rating