டெங்கு காய்ச்சல் பரவுகிறது… தடுப்பது எப்படி…?..!!

Read Time:11 Minute, 1 Second

201707220842097485_Dengue-Fever-Spreads-How-to-Prevent_SECVPFகேரள மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. தமிழகத்திலும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்புகள் ஏற்பட தொடங்கி இருப்பதால், டெங்குவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர். அரசாங்கத்தின் நடவடிக்கை ஒருபக்கம் இருந்தாலும், பொதுமக்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு தேவை.

டெங்குவை தடுப்பது எப்படி?:

குறிப்பாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதுடன், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே டெங்கு காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளை குறைத்துக் கொள்ளலாம். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது எப்படி? என்பது குறித்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் சார்பில் விளக் கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் இதோ-

ஏடிஸ் கொசு:

* டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும். கொசுவின் மூலமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.

* பயன்படுத்தாத உடைந்த சிமெண்டு தொட்டிகள், நீண்ட காலமாக சுத்தப்படுத்தாத தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் சிரட்டைகள், குடம்- வாளிகள், திறந்த கிணறு, காலி டப்பாக்கள், டயர்கள் போன்றவற்றில் தேங்கும் தண்ணீரில் உருவாகும் ஏடிஸ் கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் மனிதர்களை கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசுவானது, மற்றவர்களை கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது.

* டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது. அந்த முட்டைகளில் இருந்து 10 நாட்களில் கொசுவாக வளர்ச்சி வெளிவருகிறது. ஏடிஸ் கொசு 3 வாரங்கள் உயிர் வாழும். இந்த 3 வார காலத்தில் ஒரு கொசு நல்ல தண்ணீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.

இருமல்-தும்மல் :

* இவ்வாறு குறுகிய காலத்தில் ஏராளமான கொசுக்கள் உருவாகின்றன. ஏடிஸ் கொசு பகலில்தான் மனிதர்களை கடிக்கும். எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு காய்ச்சல் பரவாது.

* சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் சாதாரண மருத்துவ சிகிச்சையில் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா காய்ச்சல், எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் போன்றவற்றுக்கு உரிய பரிசோதனைகள் செய்து கொண்டு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவ சிகிச்சை தாமதமானாலோ, சுயமாக மருந்துகள் சாப்பிட்டாலோ, போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்றாலோ உடல்நலம் கடுமையான பாதிப்புக்குள்ளாக நேரிடும். எனவே காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் சென்று முறையான ஆலோசனையும், சிகிச்சையும் பெறுவது முக்கியமானதாகும்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க ஏடிஸ் கொசு உற்பத்தியாகாதவாறு பார்த்துக் கொண்டாலே போதும். அதாவது தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி சுத்தப்படுத்த வேண்டும். தண்ணீர் பாத்திரங்களை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டும்.

குணப்படுத்துவது எப்படி? :

டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:-

காய்ச்சல் வந்து ஒன்றிரண்டு நாட்கள் ஆகிவிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் என்று அறியப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் கொடுத்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். காய்ச்சலுக்கு டாக்டர்கள் கொடுக்கும் மருந்துகளை உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். டெங்கு காய்ச்சல் உடலில் நீர்ச்சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் மற்றும் மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர்காக்கும் ஓ.ஆர்.எஸ். போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் குறையவில்லை என்றால் பருத்தியால் நெய்யப்பட்ட சிறிய துண்டை சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரில் நனைத்து, பிழிந்து நெற்றி, கழுத்து, அக்குள், நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் துடைத்துவிட்டால் காய்ச்சல் குறையும். இதற்கு ஐஸ்கட்டியோ அல்லது மிகவும் குளிர்ந்த நீரையோ பயன்படுத்தக் கூடாது. மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க டாக்டர் ஆலோசனை வழங்கினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் நின்றபிறகு 3 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லையென்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் டாக்டரை அணுக வேண்டும்.

இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.

அறிகுறிகளை அறியுங்கள் :

காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, குமட்டல், வாந்தி, எலும்பு வலி, தோலில் சிவந்த நிறத்தில் தடிப்புகள் உருவாதல் ஆகியவை டெங்கு காய்ச்சல் நோயின் முக்கியமான அறிகுறிகள் ஆகும். ரத்தம் உறைவதற்கு ரத்த தட்டு அணுக்கள் மிக முக்கியமான காரணியாகும். டெங்கு வைரஸ் ரத்தத் தட்டு அணுக்களை அழித்துவிடும் தன்மையுடையது. எனவே அறிகுறிகளை அறிந்து உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உயிர் இழப்புகூட நேரிடலாம்.

நிலவேம்பு குடிநீர்- பப்பாளி இலைச்சாறு :

டெங்கு காய்ச்சலை குணப்படுத்தவும், தடுக்கவும், நிலவேம்பு குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு ஆகிய சித்த மருந்துகளை பயன்படுத்தலாம். நிலவேம்பு குடிநீர் தயாரிக்க 10 கிராம் நிலவேம்பு குடிநீர் சூரணத்தை எடுத்து 100 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து பாதியாக சுருக்கி, வடிகட்டி 50 மில்லி வீதம் நாளொன்றுக்கு காலை மற்றும் மாலை இருவேளைகள் குடிக்கலாம். ஒவ்வொரு முறை குடிப்பதற்காகவும் புதிதாக தயாரித்துக் கொள்ள வேண்டும். இது காய்ச்சலின் வீரியத்தை குறைக்கும் அருமருந்தாகும். காய்ச்சல் தணிந்தாலும் இதனை மேலும் 2 நாட்களுக்கு குடிப்பது நல்லது. நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவுகளில் இலவசமாக கிடைக்கும்.

பப்பாளி இலைச்சாறு தயாரிக்க புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். இவ்வாறு அருந்தினால் 5 நாட்களில் காய்ச்சல் தணிந்து விடும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். காய்ச்சல் தணிந்தபிறகும் இதனை மேலும் 2 நாட்களுக்கு அருந்த வேண்டும். பப்பாளி இலைச்சாறு வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தாகும். மலைவேம்பு இலைச்சாறு தயாரிக்க புதிதாக பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காரில் அடிபட்டு உயிருக்கு போராடிய குட்டி யானை: காப்பாற்ற போராடிய யானைகள்..!! (வீடியோ)
Next post குழந்தைக்கு பால் கொடுத்த தாய் – அபராதம் விதித்த அதிகாரிகள்..!!