கதாநாயகர்களின் கதை..!! (கட்டுரை)
சாண் ஏற முழம் சறுக்குவது’ பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சில விடயங்கள் ‘சாண் ஏறாமலேயே, மீற்றர் கணக்கில் சறுக்கி’க் கொண்டிருக்கின்றன.
ஒரு வியாபாரத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமாக இருந்தால், அதை நட்டம் என்போம். ஓர் ஆட்சியில் இவ்வாறானதொரு நிலை ஏற்படுவது தோல்வியாகும்.
நல்லாட்சி அரசாங்கமானது அதன் வாக்குறுதிகளிலிருந்து விலகிக் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம், சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் சொன்னது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் உள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான, இனவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று, தேர்தல் காலத்தில் ஆட்சியாளர்கள் உறுதி வழங்கினார்கள். ஆனால், முஸ்லிம்களை அச்சுறுத்தும் ஞானசார தேரரை, இந்த ஆட்சியாளர்களே மறைத்து வைத்துக் காப்பாற்றியதாகப் பேசப்படுகின்றது. இதை என்னவென்பது?
இவ்வாறானதொரு நிலையில்தான், ‘புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை இத்தோடு நிறுத்திக் கொள்வதுதான் நல்லது’ என்று கூறி, சிறுபான்மை மக்களின் எஞ்சியிருந்த எதிர்பார்ப்புகளிலும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக, மண்ணை வாரி இறைத்திருக்கின்றார்.
புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு பௌத்த மத பீடங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையினாலேயே, அதைத் தேவையில்லை என்று, அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கான மக்கள் ஆணை, தற்போது ஆட்சியமைத்திருக்கும் இரண்டு கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக, நல்லாட்சிக்குரியவரல்லர். அவர் நல்லாட்சியாளர்களைத் தேர்தல்களின்போது, எதிர்த்து நின்றவர். நல்லாட்சி அமைந்ததும் அதனுடன் வந்து ஒட்டிக் கொண்டவர்.
எனவே, மக்களுக்கு நல்லாட்சியாளர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை இவருக்குக் கிடையாது. மக்களும், எஸ்.பி. திஸாநாயக போன்றவர்களிடம் அவ்வாறான கடமைகளை எதிர்பார்க்கவும் முடியாது.
இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு, அதிகாரத்தை பரவலாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகும் என்பதைப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். புதிய அரசியல் யாப்பு ஒன்றினூடாகவே, அதிகாரத்தைச் சிறுபான்மை மக்களின் கைகளில் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும் என்பதிலும் அநேகமானோருக்கு நம்பிக்கை உள்ளது.
அதனால்தான், இனப்பிரச்சினைக்கான தீர்வாக, புதியதொரு அரசியல் யாப்பை உருவாக்குவோம் என்று, தேர்தல் காலத்தில் ஆட்சியாளர்கள் வாக்குறுதியளித்தனர்.
அதை நம்பித்தான் சிறுபான்மை மக்களும் வாக்களித்தார்கள். ஆனால், அந்த வாக்குறுதி காற்றில் பறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது போலவே தெரிகிறது.
“புதிய அரசியல் யாப்பு தேவையில்லை” என, பௌத்த மத பீடங்கள் அனைத்தும் ஒன்றித்துக் கூறியுள்ளன. இலங்கையில் பௌத்த மத பீடங்களுக்கும் அதன் தலைவர்களான மகாநாயக்க தேரர்களுக்கும் முக்கிய பெறுமானங்கள் உள்ளன. பௌத்த மதகுருக்களின் எதிர்ப்புகளை மீறி, இலங்கையின் ஆட்சியாளர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் தீர்மானங்களை எடுத்த வரலாறுகள் இல்லை.
புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியும் அப்படித்தான் ஆகி விடுமோ என்கிற அச்சமும், சிறுபான்மை மக்களிடம் உள்ளது. மகாநாயக்கர்களை எதிர்க்கும் திராணி, நல்லாட்சியாளர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான்.
‘இரும்படிக்கும் இடத்தில் இலையானுக்கு என்ன வேலை’ என்று, நம்மூர்களில் கேட்பார்கள். மதகுருக்கள் அரசியலில் மூக்கை நுழைப்பதைப் பார்க்கையில் அந்தக் கேள்விதான் நினைவுக்கு வருகிறது.
ஆனாலும், கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே, அரசியலிலும் ஆட்சியிலும் மதகுருக்கள் மூக்கை மட்டுமன்றி, முழு உடம்பையும் நுழைத்தே வந்திருக்கின்றனர் என்பதை, வரலாற்றைப் படிக்கும்போது அறிந்து கொள்ள முடியும்.
சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை வரலாற்றிலும் ஆட்சியாளர்கள் மீது, மதகுருக்கள் செலுத்திய தாக்கங்கள் எக்கச்சக்கமாகவே உள்ளன. பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கு, பௌத்த துறவிகளின் அழுத்தங்கள்தான் காரணமாக அமைந்தன.
அதுபோன்றே, டட்லி – செவ்வா ஒப்பந்தமும் பௌத்த தேரர்களின் எதிர்ப்பினால் வலுவிழந்து போனது. அதன் நீட்சியைத்தான் நல்லாட்சியில் நாம் கண்டு கொண்டிருக்கின்றோம். இது நல்லதாகத் தெரியவில்லை.
பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்ட வரலாற்றை, சத்கோரள மகாதிசாவே பிரதிப் பிரதம சங்க நாயக்க சாஸ்திரபதி மாகல்கடவல புஞ்ஞாசார தேரர், அண்மையில் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் நினைவு கூர்ந்தார்.
அதை இங்கு பதிவு செய்வது மிகவும் பொருத்தமானதாகும். “வடக்கில் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்க்க 1956, 1957 ஆம் ஆண்டுகளில் பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது.
பண்டாரநாயக்கவை ஆட்சிக்குக் கொண்டு வந்த பிக்குகளே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதனால், அந்த ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார். அதன்போது அவர் என்ன கூறினார் தெரியுமா? ‘இதை நான் இன்று கிழிக்கின்றேன்.
ஆனால், எதிர்காலத்தில் யுத்தமொன்று கூட உருவாகலாம்’ என்றார். அன்று பண்டாரநாயக்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களில் பொலன்னறுவ, ஹிங்குரக்கொட சேனாநாயகாராம தலைவராகவிருந்த ஸ்ரீ தீராநந்த தேரரும் ஒருவராவார்.
அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தூண் போன்றவர். அவர் அண்மையில் என்னிடம் கூறுகையில், அன்று பண்டா – செல்வா ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்ததையிட்டு இன்று வெட்கப்படுவதாகக் கூறினார்” என்று புஞ்ஞாசார தேரர் தனது பேட்டியில் விவரித்திருந்தார்.
மேலே கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் நோக்குகின்றபோது, பண்டா – செல்வா ஒப்பந்தம், அன்று கிழித்தெறியப்படாதிருந்தால், நாம் எதிர்கொண்ட 30 வருட கால, கோர யுத்தம் இல்லாமலே போயிருக்கும்.
அதாவது, பெறுமதி மிக்க அரசியல் தீர்மானமொன்றை 60 வருடங்களுக்கு முன்னர், பௌத்த தேரர்கள் குழப்பியடித்தமை காரணமாகவே, இந்த நாட்டில் கொடிய யுத்தமொன்றை நாம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது என்பதை, மூத்த பிக்கு ஒருவரே ஏற்றுக் கொண்டு, பேட்டியாகவும் வழங்கியிருக்கின்றார்.
இன்னொருபுறம், புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு பௌத்த மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையின் பின்னணியில், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மாகல்கடவல புஞ்ஞாசார தேரரும், அந்தக் குற்றச்சாட்டைத் தனது பேட்டியில் முன்வைத்திருக்கின்றார். அது உண்மையென்றால், விடயம் வெட்கத்துக்குரியதாகும்.
இலங்கையில் மிக உச்ச நிலையில் மதிக்கப்படுகின்ற மகா நாயக்க தேரர்கள், அரசியல் அலையில் அள்ளுண்டு போவதென்பது அவமானத்துக்குரியதாகும். அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற புனிதத்துவத்தை, இதன் மூலம் அவர்கள் இழந்து விடவும் கூடும்.
இனப்பிரச்சினை, கொடிய யுத்தம் போன்றவற்றினால் சிதைந்து போய்க் கிடக்கும் நமது தேசத்தின் காயங்களுக்கு, மருந்திட வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உள்ளது.
காயங்களுக்கு மருந்திடாமல் இருப்பதும், மருந்திடத் தாமதிப்பதும் புத்திசாலித்தனமான செயற்பாடுகளல்ல; மருந்திடப்படாத காயம் – நாறிச் சீழ் பிடித்து, இன்னும் பெரிதாகும். மருந்திடாமல் காயங்களை ஆற்றலாம் என்று நினைப்பது, பெரும் அபத்தமாகும்.
நமது தேசத்தின் காயங்களுக்கான மருந்து, அதிகாரத்தைப் பரவலாக்கும், புதிய அரசியல் யாப்பு ஒன்றில்தான் உள்ளது. அதை, பெரும் மதிப்புக்குரிய மகா நாயக்க தேரர்கள் தடுப்பதென்பது கவலைக்குரியதாகும்.
இன்னுமொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தற்போதுள்ள அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்வதையோ, புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதையோ ஏற்றுக்கொள்ள மறுக்கும் மகாநாயக்க தேரர்கள், புதிய தேர்தல் சட்டமொன்றை உருவாக்குவதில் தமக்கு ஆட்சேபனைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
இது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “புதிய தேர்தல் முறைமையானது, சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்களைக் குறைப்பதற்கான பாரிய சதி” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமையை இந்த இடத்தில் பதிவு செய்தல் பொருத்தமானதாகும். மு.கா தலைவர் ரவூப் ஹக்கீமும் புதிய தேர்தல் முறைமையில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளவுள்ள அபாயம் குறித்துப் பேசி வருகின்றார்.
ஆக, சிறுபான்மை மக்களுக்கு அதிகாரத்தைப் பகர்ந்தளிக்கும் வகையிலான, புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மகாநாயக்க தேரர்கள், சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களைக் குறைக்கும், புதிய தேர்தல் முறைமைக்கு ஆட்சேபனைகள் எவற்றையும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்பது அவதானத்துக்குரியதாகும்.
பௌத்த மகாநாயக்கர்கள் எவ்வாறான மனநிலையில் இருக்கின்றனர் என்பதை, இதன் மூலம் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
நடக்கின்றவற்றையெல்லாம் பார்க்கின்றபோது, நமது தேசம் எதிர்கொண்ட அனைத்துத் துயரங்களிலிருந்து, நம்மில் கணிசமானோர் எதையும் கற்றுக்கொள்ளவில்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
சமாதானத்தையும் இன உறவையும் கட்டியெழுப்ப வேண்டும் என்கிற எண்ணம் – சுடலை ஞானம் போல், யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது மட்டும்தான், நம்மில் அதிகமானோரிடம் இருந்திருக்கிறது என்பதை, இப்போது புரிந்து கொள்ள முடிகிறது.
கருணையையும் அன்பையும் தாராளமாகப் போதித்த புத்த மதத்தைப் பின்பற்றுகின்ற துறவிகள், தமது சக இனத்துச் சகோதரர்கள் தொடர்பில், விசாலமான மனதுடன் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என்பதை இங்கு வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
இன்னொருபுறம், மதகுருக்கள் இழுக்கும் பக்கமெல்லாம் சாய்பவர்களாக ஆட்சியாளர்கள் இருக்கின்றமை சரிதானா என்கிற கேள்வியும் இங்கு உள்ளது. கூழுக்கும் மீசைக்கும் ஒரே நேரத்தில் ஆசைப்பட முடியாது என்பார்களல்லவா.
அதுபோலதான், புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்று கூறுகின்ற மதத் தலைவர்களை அனுசரித்துக் கொண்டு, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதென்பதும் ஆட்சியாளர்களுக்கு முடியாத காரியமாகத்தான் இருக்கப் போகிறது.
“இன்னொரு தேர்தலில் இனி நான் போட்டியிட மாட்டேன்” என்று கூறித்தான் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார். அதன்படி பார்த்தால், மைத்திரிபால சிறிசேனவின் இறுதி அரசியல் காலம் இதுவாகத்தான் இருக்கப் போகிறது. இனி அரசியலில் அவர் ஈடுபடப் போவதில்லை.
எனவே, இனப் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில், எதற்கும் எவருக்கும் அஞ்சாமல் நியாயமாகவும் உறுதியாகவும் செயலாற்ற அவரால் முடியும். அடுத்தமுறை, யாரின் முன்பாகவும் வாக்குக் கேட்டு வர வேண்டிய தேவையில்லாத ஒருவர், தனது மனச்சாட்சிப்படி செயலாற்ற முடியுமல்லவா? அதைத்தான் ஜனாதிபதி மைத்திரியிடம் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால், ஜனாதிபதி மைத்திரி இப்போது சாய்வதையும், அஞ்சுவதையும் அவதானிக்கின்றபோது, இன்னுமொரு தேர்தல் பற்றிய பயம் அவரிடம் உள்ளது போலதான் தெரிகிறது.
அப்படியொரு அச்சம், உண்மையாகவே அவரிடம் இருக்குமாயின், சிங்களவர்களின் கதாநாயகனாக, தன்னைக் காண்பிப்பதையே பெரிதும் அவர் விரும்புவார்.
சிங்களவர்களின் அரசியல் கதாநாயகர்கள், தேசத்தின் தலையெழுத்தை, மகாநாயக்கர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் மையிலிருந்துதான் எழுதத் தொடங்குவார்கள்.
Average Rating