இந்தியா – சீனா: எல்லையில்லா எல்லைகள்..!!! (கட்டுரை)

Read Time:22 Minute, 6 Second

image_bc5f1123a0எல்லைப்பிரச்சினைகள் எப்போதும் சிக்கலானவை. இரண்டு வீட்டாருக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகளே தீராத பகையாகி தலைமுறைகள் தாண்டி நிலைத்திருக்கிறபோது, நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சினைகளின் தன்மைகளைச் சொல்லவேண்டியதில்லை. எல்லைப் பிரச்சினைக்கு எல்லையில்லை; அது எவ்வகையான வடிவத்தையும் தன்மையையும் எடுக்கவியலும்.

இதுதான் எல்லைகளின் எல்லையில்லாத தன்மை. நாடுகளுக்கிடையிலான எல்லை தொடர்பான சிக்கல் அதன் புவியியல் தன்மைகளுக்கும் மேலாக, அயலுறவுக் கொள்கை, தேசிய அரசியல், வரலாற்றைத் திரித்தல் போன்ற பல காரணங்களுக்காக தீர்ப்பதற்கு கடினமானதாகியுள்ளது.

1962 இல் நடந்து முடிந்த இந்திய-சீனப் போருக்குப் பின்னர், இந்திய-சீன எல்லைகள் பெரும்பாலும் அமைதியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த ஒரு மாதகாலமாக இந்திய-சீன எல்லைப்பகுதியில் நீடிக்கின்ற அசாதரண நிலை, இன்னொரு வலிந்த போருக்கு இந்திய முற்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

சீனாவின் எல்லைக்குள் இந்தியா, பாதுகாப்பு அரண்களை அமைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய சீனாவின் அயலுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் கவலையளிப்பதாகவும் இவ்விடயம் தொடர்பில் இந்திய இராணுவத்தளபதி தெரிவித்த பொறுப்பற்ற கருத்துகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

அதேவேளை, வரலாற்றின் பாடங்களை நினைவிலிருத்த வேண்டும் என்றும் சீனா சொல்லியுள்ளது. இது 1962 இல் சீனாவிடம் இந்தியா அடைந்த அவமானகரமான தோல்வியையே சுட்டுகிறது.

இதற்குப் பதிலளித்த இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லீ, “1962 இல் இருந்த நிலை வேறு; இப்போதுள்ள நிலை வேறு” என்று பதிலளித்துள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் தேசியவாத நோக்கிலும், அமெரிக்காவின் அடியாளாகச் செயற்படும் நோக்கிலும் சீனாவுடன் ஒரு மோதலுக்கு வழிகோலுகிறது. இது இந்திய நலன்களுக்கானதாக இராது என்பதை உறுதியாகச் சொல்லவியலும்.

சீனா கடந்த இரு தசாப்தங்களாகத் தனது எல்லைப்புற நாடுகளுடன் உடன்பாடுகளை எட்டியுள்ளது. தனது எல்லை நாடுகளான வடகொரியா, ரஷ்யா, மொங்கோலியா, கசகிஸ்தான், கிர்கிஸ்தான், தஷிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மியன்மார், லாவோஸ் மற்றும் வியட்னாம் ஆகியவற்றுடன் எல்லைகள் தொடர்பில் உடன்பாடுகளை எட்டியுள்ளது.

இந்தியாவுடன் மட்டுமே உடன்பாட்டை எட்டவியலவில்லை. எல்லைத்தகராறுகள் சீனா போன்ற பெரிய நாட்டின் வளர்ச்சியையும் அமைதியையும் பாதிக்கும் எனச் சீனா நன்கறியும். அதனாலேயே விட்டுக்கொடுப்புடன் பல எல்லை உடன்படிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது என்பதை நினைவிலிருத்த வேண்டும்.

அண்மைய நெருக்கடியின் தோற்றுவாய் சீனா-இந்தியா-பூட்டான் எல்லைகளின் முச்சந்திப்பில் உள்ள டோகா லா பகுதியில் தொடங்கியது. அங்கு சீனாவின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில், இந்திய இராணுவம் பதுங்கு குழிகளை அமைத்ததிலிருந்து தொடங்கியது. இதை வெளிப்படையாகத் தெரியப்படுத்திய சீனா, இவ்வாக்கிரமிப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளமுடியாதென்றும் அறிவித்தது. இந்தியா இப்பகுதி தங்களுக்குரியது என்று வாதிட்டதோடு பதுங்குகுழிகளை அகற்ற மறுத்தது.

இதற்குப் பதிலளித்த சீனா, 1890 ஆம் ஆண்டு இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட எல்லை உடன்படிக்கையை இந்தியா மதிக்க வேண்டும் என்று கோருகிறது.

இந்திய, சீன எல்லைச் சிக்கல் மிகவும் நீண்டது. இந்தியாவின் வீரசாகசப் பேச்சுகள் 1962 இல் ஒரு போரில் முடிந்தன. இந்திய, சீன எல்லைப் பிரச்சினை மீண்டுமொரு முறை போராகுமிடத்து, அது ஆசியப் பிராந்தியத்தையே பாதிக்கும்.

அதேவேளை, இவ்விடயத்தை வரலாற்று அணுகுமுறையில் நோக்குவதும் பிரதானமானதாகும்.
சீனாவும் இந்தியாவும் உலகின் அதிக சனத்தொகை கொண்ட நாடுகள். கொலனி ஆட்சியிலிருந்து இந்தியாவும் அயல் ஆதிக்கத்திலிருந்தும் பிரபுத்துவத்திலிருந்து சீனாவும் பெற்ற விடுதலைகள், கொலனி ஆட்சியிலிருந்து விடுபட்ட நாடுகளுக்கும் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருந்த நாடுகளுக்கும் மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்தன.

1950 களில் விருத்திபெற்ற இந்திய-சீன நட்பும் அணிசேரா நாடுகளின் உருவாக்கமும் அத்தகைய நம்பிக்கைகளை மேலும் வலுப்படுத்தின. ஆனால், பின்னர் இந்திய-சீன உறவில் ஏற்பட்ட கசப்பு, நம்பிக்கைகளின் தளர்வுக்கும் முன்னாள் கொலனி ஆதிக்க நாடுகளின் களிப்புக்கும் காரணமானது.

பிரித்தானிய கொலனி ஆட்சி பல நாடுகளிடையில் விட்டுச் சென்ற எல்லைப் பிரச்சினைகள் போல் சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் உருவாக்கிச் சென்ற பிரச்சினையை இரு நாடுகளும் தீர்க்கத் தவறியமை, இரு நாடுகளுக்குமிடையில் எல்லை மோதல்களுக்கும் ஈற்றில் 1962 இல் ஓர் எல்லைப் போருக்கும் காரணமாயிற்று. அதன் விளைவுகளிலிருந்து இரு நாடுகளும் இந்து சமுத்திரப் பிரதேசமும் இன்னமும் விடுபடவில்லை.

இச் சூழலில் இந்திய-சீன எல்லைத் தகராற்றின் காரணமென்ன? அது ஏன் மோதல்களுக்குக் காரணமாயிற்று? மோதல்கள் எவ்வாறு போராயின என்பவற்றை அறியும் முயற்சிகள் நம்மிடையே குறைவாகவே இருந்துள்ளன.

பொதுவாகவே, அகச்சார்பான காரணங்களால் ஒரு தரப்பைக் குறைகூறுவதும் மறுதரப்பு வாதங்களைக் கேட்க மறுப்பதும் விவாதங்களை மறிப்பதும் நம் வழமையாகி, உண்மைகளை நாமறியத் தடையாயிருந்துள்ளன.

இன்று இலங்கைக்கும் தமிழருக்கும் இரு நாடுகளும் முக்கியமானவை. அவற்றின் செல்வாக்கினின்று தமிழர் விலக இயலாது. எனவே இந்திய-சீனப் பகையாகத் தெரிவதன் அடிவேரெனச் சிலர் கருதும் எல்லைப் பிரச்சினையையும் போரையும் திறந்த மனத்துடன் விசாரிக்கும் தேவை நமக்குண்டு.

எல்லைத் தகராற்றைப் பேசித் தீர்த்திருக்க இயலாதா? போரைத் தவிர்த்திருக்க இயலாதா? மோதல்களும் போரும் ஏன் தவிர்க்கப்படவில்லை? இவை இரு நாடுகளின் மக்களும் விசாரிக்கவேண்டிய உண்மைகள் மட்டுமல்ல, இப்பிராந்திய மக்கள் அனைவரும் அறிய அக்கறை காட்டவேண்டிய உண்மைகள். இன்றைய சூழலில் இக்கேள்விகள் இன்னமும் முக்கியத்துவம் பெறுகின்றன.

கடந்த முப்பது ஆண்டுகளுள் இந்திய-சீன உறவுகளில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் ஏற்பட்டன. எனினும், உறவு முன்னேறாமல் மறிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. இந்தியாவில் அதிகாரத்திலுள்ளோர், தொடர்ந்தும் மக்களிடமிருந்து உண்மைகளை மறைக்கின்றனர். அது அவர்களுக்கு வாய்ப்பானது மட்டுமன்றி சீன-விரோத இடதுசாரி விரோதத்துக்கும் வாய்ப்பானது.

இப்பின்னணியில், 1970க்கு முன்பிருந்தே எல்லைப் பிரச்சினையும் போரும் பற்றி விடாது விசாரித்து எழுதிவரும் இந்தியரான ஏ.ஜி. நூரானியின் கட்டுரைகள் முக்கியமானவை. அவருடன் உடன்படாதோரும் அவருடைய தகவல்களின் செம்மையை மறுப்பது கடினம்.

1962இல், இந்திய மக்களுடைய அழுத்தங்களுக்குப் பணிந்து இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேண்டியதன் பெயரில் எல்லைப் போர் பற்றித் தயாரித்த ஓர் அறிக்கை, 1970 அளவில் வெளியுலகத்துக்குத் தெரியவந்தும், 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்களிடமிருந்து மறைக்கப்பட்டது என்பதையும் நினைவூட்ட வேண்டும். அதேவேளை, அதன் தகவல்கள் சிலரின் சுயலாபத்துக்குப் பயன்பட்டன. இந்நிலையில் நூரானி தெரிவித்துள்ள சில கருத்துகளை இங்கு பகிரல் பயனுள்ளது.

1914 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையின்படி பிரிக்கப்பட்ட எல்லைக்கோடான மக்மஹொன் எல்லைக் கோட்டை, இந்தியா மதித்து நடக்க வேண்டும் என்ற சீனாவின் கோரிக்கையை, இந்தியா ஏற்கவில்லை.

இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் அவரது அமைச்சரவையும் சீனாவுக்கு உரித்தான பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதன் ஆபத்துகளைக் குறைவாகவே மதிப்பிட்டன. குறிப்பாக நேரு அதிகம் நம்பியிருந்த புலனாய்வுச் செயலகத் தகவல்கள், சீனாவின் எல்லைக்குள் புதிய இராணுவ நிலையங்களை நிறுவுவதற்குச் சீனா எதிர்வினையாற்றாது என்பதோடு, சீனா தாக்குவதற்கு இயலுமான நிலையில் இருந்தாலும், தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தன.

1960 ஏப்ரலில் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாட சீனப்பிரதமர் சௌ என்-லாய் புது டில்லிக்கு வரமுன்பே, “இரு தரப்பினருக்குமிடையே பொது அடிப்படை எதுவுமே இல்லை” என நேரு அறிவித்தார்.

மக்மஹொன் எல்லைக் கோட்டை ஏற்பதை உள்ளடக்கிய சௌ என்லாயின் இசைவை, அவர் ஏற்க மறுத்தார். “இப் பிரதேசத்திலிருந்து அவர்கள் வெளியேறினாலே இப்பிரச்சினை தீரும்” என்று அவர் நாடாளுமன்ற மேலவைக்குத் தெரிவித்தார்.

இவ்வாறு பிடிவாதமாய் பேச மறுத்தமை மூலமும் 1954 ஆம் ஆண்டு தேசப்படத்தில் தனது ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் மூலமும் எவரும் உணரத் தவறும் விடயமான மக்மஹொன் எல்லைக் கோட்டின் நிலையத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றியமை மூலமும், நேரு போருக்கான முன்னறிப்பை விடுத்தார்.

மக்மஹொன் கோடென்பது, மார்ச் 1914 இந்தியா-திபெத் உடன்பாட்டில் எழுத்தில் விவரிக்காமல் அதற்கான குறிப்புகளுடன் இணைத்த ஒரு அங்குலத்துக்கு எட்டு மைல் அளவிடையில் வரைந்த வரைபட மொன்றில் தடித்த அலகுப் பேனாவால் சிவப்பு நிறத்தில் வரைந்த ஒரு கோடாகும்.

அது 1914 ஆம் ஆண்டின் புவிப்பட வரைதலின் நிச்சயமின்மைகளைக் கொண்டது. இங்கும் நேரு ஆணவத்துடன், நம்பவியலாத, சட்டவிரோதமில்லாவிடினும் அறமற்ற ஒரு காரியத்தைச் செய்தார்.

1959 செப்டெம்பரில் நேரு, ஒளிவுமறைவின்றி, “மக்மஹோன் எல்லைக்கோடு சில இடங்களில் ஒரு நல்ல கோடாகக் கருதப்படாததால் அது நம்மால் மாற்றப்பட்டது” என நாடாளுமன்றத்துக்குத் தெரிவித்தார். 1962 ஜூனில், தோலா இராணுவ நிலையம், மாற்றிய கோட்டுக்குள், ஆனால் வரைபடம் காட்டிய எல்லைக்கு வெளியே இந்திய இராணுவத்தால் நிறுவப்பட்டது.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், 1954 இல் அக்ஸய் சின் பகுதி இந்தியாவினது என்று காட்டுமாறு, 1950 ஆம் வருடத் தேசப்படத்தை மாற்றுமாறு நேரு ஆணையிட்டார். அதையே அவர் மக்மஹொன் எல்லைக்கோட்டு விடயத்திலும் செய்தார் என்பதாகும்.

இதேவேளை 1962 நவம்பர் 15 ஆம் திகதியிட்டு சௌ என்லாய் சீன-இந்தியப் பிரச்சினை பற்றி ஆசிய, ஆபிரிக்கத் தலைவர்களுக்கு எழுதிய கடிதத்துடன் இந்திய நில அளவையாளர் நாயகத்தின் 1950 ஆம் வருட வரைபடத்தையும் 1954 இல் நேரு மாற்றிய வரைபடத்தையும் உள்ளடக்கிய ஆறு வரைபடங்களை இணைத்திருந்தார்.

இவை உலகுக்கு குறிப்பாக இவ்விரு நாடுகளுக்கும் நேசமான நாடுகளுக்கு நடப்பதை விளக்கப் போதுமானவையாக இருந்தன. இச்செய்திகள் சொல்லப்படுவதில்லை.

சீனா 1962 இல் வலிந்து ஒரு போரை இந்தியா மீது தொடுத்தது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சொல்லாத சில அடிப்படைகளையும் இங்கு சொல்லல் பொருந்தும். எமக்குச் சொல்லப்படுவது போல வரைபடங்களுக்காகப் போர்கள் நிகழ்வதில்லை. சீனா ஏன் எப்போது போர் தொடுக்க முடிவெடுத்ததென எந்த அவதானியும் அறிவார்.

1962 ஜூலையில் மாஓ சேதுங் இந்தியாவின் ‘கொறித்துத் தின்னற் கொள்கை’யை எதிர்கொள்வதற்குரிய வழிகாட்டல் கொள்கையைச் சீன மக்கள் விடுதலைப் படைக்கு அறிவுறுத்தினார். அதன்படி ஒருபோதும் விட்டுக்கொடாதீர்கள்.

ஆனால் குருதி சிந்துதலைத் தவிர்க்க இயன்றதைச் செய்யுங்கள். எல்லையை வசப்படுத்தச், சீரற்ற, ஒன்றோடொன்று கட்டுண்ணும் வியூகம் அமையுங்கள். நீண்டகால ஆயுத உடனிருப்புக்கு ஆயத்தமாயிருங்கள். இக்கட்டளைகள்; வலிந்த யுத்தமொன்றை சீனா விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றன.

1962 முதல் இன்றுவரை இந்தியாவின் இராஜதந்திர மனோநிலையில் பாரிய மாற்றங்கள் நிகழவில்லை என்பதை இந்திய அயலுறவுக் கொள்கை தொடர்பிலான இந்திய நிலைப்பாடுகள் கோடு காட்டுகின்றன.

பரந்த பூகோள அரசியல் ரீதியில் இன்னொன்றையும் அவதானிக்க வேண்டும். அமெரிக்க-இந்திய நெருக்கம், சீனாவைச் சீண்டும் செயற்பாடுகளுக்கு அடிப்படையாய் அமையக் கூடும். ஒருபுறம் தென் கொரியாவைப் பயன்படுத்தி இறுக்கமடையும் வட கொரியச் சிக்கல், மறுபுறம் தென்சீனக் கடற்பரப்பில் ஜப்பானின் மூலம் ஆத்திரமூட்டல்கள் எனப் பலமுனைகளில் சீனாவை நெருக்கடிக்குள் தள்ளும் ஒரு மூலோபாயத்தின் பகுதியாகவும் இதை நோக்கிவிட முடியும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் கீழ் கடந்த ஓராண்டுகாலமாக இந்தியப் பாதுகாப்புக்கான பெரிய மிரட்டல் சீனா என இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

குறிப்பாக இந்திய இராணுவத்தளபதி கடந்தாண்டு, “இந்தியத் துணைக்கண்டத்தில் சீனாவின் பெருகும் செல்வாக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அது இந்தியாவின் அயலுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் பிரதானமானது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே கடந்த வாரம் நிகழ்ந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பில், இந்திய அமெரிக்க கூட்டணியை விரிவுபடுத்தி ஆழப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. இருவரும் இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாயக் கூட்டணியைப் பலப்படுத்த உழைப்பதற்கு உடன்பட்டனர்.

சந்திப்பைத் தொடர்ந்து கருத்துரைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எங்கள் இராணுவப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த ஒவ்வொரு நாளும் எங்களது இராணுவத்தினர் அரும்பாடுபடுகின்றனர்.

அடுத்த மாதம், பரந்த இந்திய பெருங்கடலில் இதுவரை நடத்தப்பட்டதிலேயே மிகப்பெரிய கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்கு ஜப்பானிய கடற்படையினருடன் அவர்களும் இணைந்து கொள்வார்கள்” என்றார். இது இன்னொரு வகையில் சீனாவுக்கு எதிரான இராணுவக் கூட்டணியை வலுப்படுத்தும் நிகழ்வாகவே நோக்க வேண்டியுள்ளது. இவை இன்னொருமுறை ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் சேவகனாக இந்தியா பணியாற்றுகிறது என்பதைக் காட்டுகிறது.

இந்திய, சீன நெருக்கடியையும் இதனுடன் இணைத்துப் பார்க்க முடியும். “இப்போது நிலைமைகள் வேறு” என்ற அருண் ஜெட்லீயின் கூற்று இதனுடன் அச்சொட்டாகப் பொருந்தி வருகிறது.

எல்லைப் பிரச்சினைகளுக்கு எல்லையில்லை. ஆனால், அவை பேசித் தீர்க்க முடியாதவையல்ல. ஆனால் இன்று இவ்விடயத்தைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள பொய்களும் புனைகதைகளும் இந்தியப் பொதுப்புத்தி மனநிலையில் பேசித் தீர்வை எட்டுவதற்கு வாய்ப்பாக இல்லை.

தேசியவாதத்தில் குளிர்காயும் பி.ஜே.பி அரசாங்கத்துக்கு இந்நெருக்கடியை குறைந்தபட்ச உயிர்ப்புடன் வைத்திருப்பது வாய்ப்பானது. இதனால், இவ் எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான எல்லை எல்லையற்றுக் கண்ணுக்கெட்டாத தொலைவில் கிடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மணப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: திருமணத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஏற்பட்ட விபரீதம்..!! (வீடியோ)
Next post சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சமந்தா..!!