‘ஒரே நாடு, ஒரே வரி’ சட்டம்: ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு ஒப்பாகுமா?..!! (கட்டுரை)
இந்திய நாட்டுக்கு ‘நள்ளிரவில் சுதந்திரம்’ கிடைத்து, இப்போது மீண்டும் நள்ளிரவில் இந்தியாவுக்கு ‘வரிச் சுதந்திரம்’ கிடைத்திருக்கிறது.
ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல், நாடு முழுவதும் ‘ஒரே வரி’ என்ற கோட்பாட்டை அமுல்படுத்தியிருக்கிறது இந்திய மத்திய அரசாங்கம்.
சுதந்திரம் பெற்று 70 ஆவது வருடத்தில், இப்படியொரு வரிச்சட்டத்தில் அரசாங்கத்தின் பலமுனை வரிகளில் இருந்து, வர்த்தக நிறுவனங்களுக்கு, நுகர்வோருக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது மத்திய அரசாங்கம் என்பதுதான் இப்போது வந்திருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் சிறப்பம்சம்.
“கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்துக்குக் கிடைத்த வெற்றி. கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் அடுத்த கட்டப் போராட்டம் இது” என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தச் சட்டத்தின் தொடக்க விழாவில் பேசியிருக்கிறார்.
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முன்னெடுத்துச் செல்லப்பட்டு, விவாதங்கள் நடத்தப்பட்டு, வரைவு ஜி.எஸ்.ரி சட்டமூலம் எல்லாம் வெளியிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.ரி தொடக்க விழாவில் பங்கேற்கவில்லை.
சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நிறைவேற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இப்போது அந்தச் சட்டத்தின் தொடக்க விழாவைப் புறக்கணித்தது, இந்திய அரசியலில் இனம் புரியாத திருப்பமாக அமைந்து விட்டது.
அதற்கு பதிலளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், “ஜி.எஸ்.ரி சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது காங்கிரஸின் நோக்கம்தான். ஆனால், இந்த ஜி.எஸ்.ரி காங்கிரஸ் கொண்டு வந்ததும் அல்ல; வரி வல்லுநர்கள் கொண்டு வந்ததும் அல்ல; இதனால் நாடு மிகப்பெரிய பணவீக்கத்தை சந்திக்கப் போகிறது” என்று தமிழகத்தில் உள்ள தன் சொந்த ஊரான காரைக்குடியில், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மத்தியில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான நரேந்திமோடி அரசாங்கம், பதவியேற்றதிலிருந்து நாட்டில் நடைபெற்றுள்ள புரட்சிகர மாற்றங்கள் இரண்டு என்றால், அதில் முதலாவது பண மதிப்பிழப்பு நடவடிக்கை. கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திரமோடியால் கொண்டு வரப்பட்ட அதிரடித் திட்டம். இது முழுக்க முழுக்க பா.ஜ.க அரசாங்கத்தின் பிரத்தியேக திட்டம் என்று கூறலாம்.
அடுத்த, ஆறு மாதத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான இன்னொரு மாற்றம் ‘ஒரே நாடு; ஒரே வரி’ என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம்.
அதாவது ஜி.எஸ்.ரி சட்டம் – இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டாலும், இந்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருப்பதுபோல், “15 வருடங்களாக விவாதித்து உருவாக்கப்பட்டுள்ள சட்டம்” என்பதில் சந்தேகமில்லை.
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தங்கள் கருத்துகளைக் கூற வாய்ப்பு தரப்பட்டது. அதற்காகவே “மாநில நிதியமைச்சர்களையும் உள்ளடக்கிய ஜி.எஸ்.ரி. கவுன்சில்” உருவாக்கப்பட்டது. அந்தக் கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசாங்கங்கள் வைத்த கோரிக்கை எல்லாவற்றையும் மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா என்பதை விட, இச்சட்டம் குறித்துக் கருத்துச் சொல்ல ஒரு வாய்ப்பு தரப்பட்டது என்பது மட்டும் உண்மை.
ஜி.எஸ்.ரி கவுன்சிலில் மாநிலங்களின் கோரிக்கைகள் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கு உதாரணமாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பட்டாசுக்கு 28 சதவீத வரி, தீப்பெட்டிக்கு வரி, மாற்று திறனாளிகளின் உபகரணங்களுக்கு வரி, சினிமாவுக்கு ஜி.எஸ்.ரி வரி மற்றும் கேளிக்கை வரி, ஜவுளித்தொழிலுக்கு வரி போன்றவற்றை குறிப்பிடலாம்.
இந்த வரிகளுக்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், அதற்கு இதுவரை சரியான தீர்வு காணப்படவில்லை. அடுத்து நடைபெறும் ஜி.எஸ்.ரி கவுன்சில் கூட்டத்திலும் இதற்குத் தீர்வு காணப்படுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஏனென்றால், ஜூலை முதல் அமுலுக்கு வந்துள்ள வரி சீர மைப்பு சட்டத்தில் உடனுக்குடன் மாற்றங்கள், திருத்தங்களைக் கொண்டு வந்து, சட்டத்தின் நோக்கத்தை கெடுத்து விடக் கூடாது என்பதில் மத்திய அரசாங்கம் பிடிவாதமாக இருக்கும் என்றே தெரிகிறது.
அதனால்தான் பட்டயக் கணக்காளர்கள் கூட்டத்தை உடனே கூட்டிய பிரதமர் நரேந்திரமோடி, “கறுப்புப் பணத்தை பாதுகாக்க நினைப்பவர்களுக்கு உதவி செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் (ஜம்மு அன்ட் காஷ்மீர் சட்டமன்றம் மட்டும் இன்னும் இந்தச் சட்டத்தை நிறைவேற்றவில்லை) ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும் என்பதுதான் ஜி.எஸ்.ரி சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
விற்பனை வரி, சேவை வரி, உற்பத்தி வரி எல்லாவற்றையும் சேர்த்து ‘சரக்கு மற்றும் சேவை’ வரி என்று ஒரே வரியாகத் திட்டமிடப்பட்டது. ஆனால், வரிகளின் பெயர் ‘ஒரே வரி’ என்று மாறியிருக்கிறதே தவிர, வரிகள் பலவிதமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பி விட்டது.
இப்போது நடைமுறைக்கு வந்துள்ள சட்டத்தின் படி 0%, 5% 12%, 18% மற்றும் 28% என்று ஐந்து வரி விகிதங்கள் உள்ளன. முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியிருப்பதுபோல், “80 சதவீத பொருள்களுக்கு” வரி விதிப்பு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் முதல் முறை. அதேபோல் மொத்த பொருள்களில் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டிய பொருள்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
குறிப்பாக 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டிற்கு 28 சதவீத வரி! அதனால்தான் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்படத்துறையினர் அனைவரும் சினிமாவுக்கு போடப்பட்டுள்ள 28 சதவீத வரியை குறையுங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். “வரியை குறைக்கவில்லை என்றால் சினிமாத்துறைக்கே முழுக்குப் போடுவேன்” என்றே கமல்ஹாசன் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.
சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தில் “கூட்டாட்சி தத்துவம்” கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசாங்கம் கூறினாலும், வரி விதிப்பில் மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் ஏதும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அரசியல் சட்டப்படி, மாநில அரசுகளிடம் இருந்த வரி விதிப்பு அதிகாரம்தான் இப்போது மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வையில் செயல்படும் ‘ஜி.எஸ்.ரி கவுன்சிலிடம்’ சென்றிருக்கிறது. இனி, தமிழகத்தில் கடலைமிட்டாய்க்கு வரி போட வேண்டும் என்றால்கூட, அது டெல்லியில் உள்ள ஜி.எஸ்.ரி கவுன்சிலால் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த அடிப்படையில் மாநிலத்தின் அதிகாரம் மத்தியில் உள்ள அரசாங்கத்திடம் போய்க் குவிந்திருக்கிறது. அதேநேரத்தில், புதிய சட்டத்தால் உற்பத்தி அதிகம் செய்யும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற வாதம் வைக்கப்பட்டது.
இந்த வாதத்தைச் சமாளிக்கவே முதல் ஐந்து வருடங்களுக்கு நூறு சதவீத இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டது. இதை வேண்டுமென்றால் “கூட்டாட்சித் தத்துவத்தின்” ஒரு பகுதி என்று மத்திய அரசு கருதலாம்.
மத்திய – மாநில அரசாங்கங்கள் இணைந்து நிறைவேற்றியுள்ள இந்தச் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின் தாக்கம் இப்போது தெரியத் தொடங்கி விட்டது.
ஹோட்டல் பில்கள் கனமாகி விட்டன; தெருவில் உள்ள ரீக்கடையில் குடிக்கும் ரீ கூட விலைகூடி விட்டது. ஒரு சில கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது என்று பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் வந்தாலும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் பெரும் சங்கடத்தை சந்திக்கும் என்றே தெரிகிறது.
அதனால்தான் தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகள் அனைவரும் “இது சிறு குறு தொழிலைப் பாதிக்கும்” என்று கூறி வருகிறார்கள். ஆனால், அந்தப் பக்கம் மத்திய அரசாங்கம் திரும்பிப் பார்த்ததாகவே தெரியவில்லை.
“ஜி.எஸ்.ரி சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை” என்று மத்திய அரசாங்கத்தின் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டாலும், அக்கட்சியின் அமைச்சர்கள் சிலர், “பாதிப்பு இருந்தால் கூட அதை மக்கள் நாட்டு நலனுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்ற ரீதியில் பேசி வருவதும், “எந்த எதிர்ப்பு வந்தாலும் அதற்கு மத்திய அரசாங்கம் அடி பணியாது” என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேட்டியளிப்பதும் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து, இப்போது வெளிவந்துள்ள ‘ஒரே நாடு, ஒரே வரி’ சட்டம் ஆகிய இரண்டிலும் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை அரசே ஒப்புக் கொள்கிறது.
ஆனால், அவற்றை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது இந்திய அரசியலில் புது வகையான நிர்வாக முறை! இந்த முழக்கத்தைக் கேட்டு மக்கள் ஆனந்தப்படுவார்களா? அல்லது அதிருப்தி அடைவார்களா என்பதும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.ரி சட்டமும் மத்திய அரசை தலைமையேற்று நடத்தும் பா.ஜ.கவுக்குக் கை கொடுக்கப் போகிறதா என்பதும் அவ்வப்போது நடைபெறும் இடைத்தேர்தல்களில் தெரியாது.
ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெளிப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating