கறுப்பு ஜூலை இன அழிப்பு..!! (கட்டுரை)
1983 ஜூலை 24 ஆம் திகதி, இரவு பொரளையையும் அதை அண்டிய பகுதிகளிலும் ஆரம்பித்த ‘கறுப்பு ஜூலை’ இன அழிப்பு, மெல்ல மெல்ல பொரளையை அண்டிய மற்றைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது.
பொரளை, கனத்தையில் கூடி, அதன் பின் அங்கிருந்து கலைந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என கறுப்பு ஜூலை பற்றி எழுதிய சிலர் பதிவு செய்திருப்பினும், வேறு சில பதிவுகளில், இது கனத்தைப் பொது மயானத்திலிருந்து கலைந்தவர்களால் அன்றி, அந்தக் கூட்டத்துக்குள் புகுந்த, வேறு குழுவினரால் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது.
எது எவ்வாறாயினும், 1983 ஜூலை 24 ஆம் திகதி, பொரளை, கனத்தை பொது மயானத்தில் பல்வேறு தரப்பினர்களும் கூடியிருந்தார்கள். இதில் அரசாங்கத் தரப்பினர், சாதாரண பொதுமக்கள், இடதுசாரிகள், அரசாங்கத்துக்கு எதிரானவர்கள், இராணுவத்திலிருந்து வெளியேறியோர், வெளியேற்றப்பட்டோர் எனப்பல்வேறு வகைப்பட்டவர்கள் இருந்தமை தொடர்பில், பலரும் பதிவுசெய்திருக்கிறார்கள்.
பொரளையிலும் அதை அண்டிய பகுதிகளிலுமிருந்த தமிழர்களின் வியாபார ஸ்தாபனங்களும் வீடுகளும் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்தன. பொலிஸ் மா அதிபர் ருத்ரா இராஜசிங்கம் தலைமையில், பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் நடத்தி கலவரக் கூட்டத்தை கலைக்க முயன்று கொண்டிருந்தனர்.
ஆனால், கூட்டம் கலைந்தபாடில்லை. கண்ணீர்ப் புகைக்குண்டுகள் தீர்ந்த நிலையில் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகளை நடத்தத் தொடங்கினர். இது கூட்டத்தை, அங்கிருந்து ஓரளவு கலைக்க உதவியது. ஆனால், அங்கிருந்து கலைந்த கூட்டம், பொரளையை அண்டிய இடங்களை நோக்கிப் பரவத் தொடங்கியது.
பொரளையிலிருந்து தெமட்டகொடை, மருதானை, கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளுக்கும் இனஅழிப்பு வன்முறை பரவத் தொடங்கியது. மருதானைப் பகுதியில் தமிழர்களின் சொத்துகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் இதில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பங்கு, குறிப்பாக மாநகர சபை உறுப்பினராகவும் பிரதமர் பிரேமதாஸவின் நெருங்கிய ஆதரவாளராகவும் இருந்த சுகததாசவின் பங்கு இருந்தமை பற்றிக் கண்கண்ட சாட்சியங்கள் உண்டென்று யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு பதிவு செய்கிறது.
அமைதி காத்த ஜே. ஆர்
பொரளையிலிருந்து ஒருபுறம் மருதானைக்கும் தெமட்டகொடைக்கும் கிராண்ட்பாஸூக்கும் பரவிய இன அழிப்புக் கலவரம், மறுபுறமாக திம்பிரிகஸ்யாய மற்றும் நாராஹேன்பிட்ட பகுதிகளுக்கும் பரவியது. தமிழர்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தலங்களும் வீடுகளும் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்டன.
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் எம்.சிவசிதம்பரத்தின் வீடும் எரிந்து கொண்டிருந்தது. இத்தனையும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கண்களுக்கு முன்னாலேயே நடந்தன என்றால் மிகையில்லை. பொதுவாக இதுபோல கலவரங்கள் நிகழும்போது, அரசாங்கம் உடனடியாக ஊரடங்கை அமுல்படுத்துவதுதான் வழமை. கலவரங்களை அடக்குவதன் முதற்கட்ட நடவடிக்கை அதுதான்.
ஜே.ஆரின் கண்களின் முன், தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும், ஊரடங்கை அமுல்படுத்தும் பலமிருந்தும், ஜே.ஆர் உடனடியாக ஊரடங்குச் சட்டத்தை அமுலப்படுத்தவில்லை.
இதுபற்றி, ‘இலங்கை: பெரும் இன அழிப்பும் அதன் பின்னும்’ (ஆங்கிலம்) என்ற நூலில் எல்.பியதாச இவ்வாறு பதிவு செய்கிறார். “நிகழ்ச்சி தொடங்கியிருந்தது; அது ஜே.ஆரின் இல்லம் அமைந்திருந்த வோட் ப்ளேஸின் எல்லையிலேயே ஆரம்பித்திருந்தது. ஜே.ஆர் அன்றிரவு அங்குதான் இருந்தார். அவருடைய விசேட இராணுவப் பிரிவின் பாதுகாப்புடனும் ஆயுதம் பொருத்திய கார்கள் மற்றும் டாங்கிகளுடனும் நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் பற்றி ஜே.ஆருக்கு அறியத் தந்துகொண்டிருந்த அதிகாரிகள் கூட உடனடியாக ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என நிச்சயமாக நம்பியிருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் உண்டு. ஆனால் அது அமுல்படுத்தப்படவில்லை”.
இதுபற்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, இவ்வாறு பதிவு செய்கிறது: “உண்மையைச் சொல்வதானால், ஜே.ஆர்.
ஜெயவர்த்தனவின் வீட்டின் எந்த யன்னலிலிருந்து பார்த்தாலும் கொழுந்து விட்டெரியும் நெருப்பைக் காணக்கூடியதாக இருந்திருக்கும். பொலிஸாருக்கும் என்ன நடந்ததென்று தெரியவில்லை; பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டு மூலம் கலவரத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்; ஜே.ஆரின் பாதுகாப்புப் பிரிவிலிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அபேகுணவர்தன, 25 ஆம் திகதி அதிகாலை, தனது வீட்டுக்குத் திரும்பியிருந்தார். காலையில் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த அவர், தனது மனைவியிடம் தன்னைக் காலையில் எழுப்ப வேண்டாம் என்று சொல்லியிருந்தார். காலை 6.30 மணிக்கு அவரை எழுப்பிய அவரது மனைவி, ஊரடங்கு அமுல்படுத்தப்படவில்லை என்றும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் சொன்னார். ஊரடங்கு அமுல்படுத்தப்படாமை பற்றி அவர் ஆச்சரியமடைந்தார்.”
இது பற்றித் தன்னுடைய, ‘நெருக்கடியில் இலங்கை: 1977-88’ (ஆங்கிலம்) என்ற நூலில் பதிவு செய்யும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்ஹ, “அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையைச் சொல்வதானால், மறுநாள் நிலைமை இன்னும் மோசமாகியது. அரசாங்கம் மறுநாள் மாலைவரை முன்னேற்றகரமாக எதையும் செய்யவில்லை” என்கிறார்.
ஆகவே, ஒரு மாபெரும் இன அழிப்புக் கலவரம், இலங்கையின் தலைநகரில், அதுவும் ஜனாதிபதியின் கண்முன்னால் அரங்கேறிக் கொண்டிருந்தபோது, பல மணிநேரங்களுக்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் மௌனித்திருந்தது என்பதுதான் கசப்பான நிதர்சனம்.
கொழும்பில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு, தமிழர்களின் சொத்துகள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஜே.ஆர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்; அவர் ‘பிடில்’ மட்டும்தான் வாசிக்கவில்லை. அதையும் செய்திருந்தால் சாட்சாத் ரோமாபுரியின் நீரோ மன்னனின் மறுபிறப்பாக அவரைக் கண்டிருக்கலாம்.
1983 என்பது தொலைத் தொடர்பு ரீதியில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிராத சூழல்; இன்றுபோல எல்லோரிடமும் தொலைபேசிகள் இருக்கவில்லை. கைத்தொலைபேசிகள் இல்லவே இல்லை. தொலைக்காட்சி என்பது 1979 இல்தான் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
1982 இல்தான் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. ஆகவே, செல்வாக்கான மிகச் சிலரைத் தவிர, வேறு யாரிடமும் தொலைக்காட்சிகள் இல்லை. பத்திரிகைகளும் வானொலியுமே பிரதான செய்தி ஊடகங்களாக இருந்தன.
1983 ஜூலை 24 பின்னிரவில் தொடங்கி, நள்ளிரவு, அதிகாலை தாண்டி பொரளை, மருதானை, தெமட்டகொடை, கிராண்ட்பாஸ், திம்பிரிகஸ்யாய மற்றும் நாராஹேன்பிட்ட பகுதிகளில் நடைபெற்ற இன அழிப்புத் தாக்குதல்கள் பற்றி, ஏனைய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், 25 ஆம் திகதி அதிகாலை அறிந்திருக்கவில்லை.
ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டிராத நிலையில், அவர்கள் வழமைபோல, தமது நாளை எதிர்கொண்டனர். 25 ஆம் திகதி காலை மக்கள் மேற்குறித்த கலவர பூமியைக் கடந்து சென்ற போதுதான், எரிந்திருந்த தமிழர்களுக்கு சொந்தமான வியாபார ஸ்தாபனங்களையும் வீடுகளையும் கண்டனர்.
புறக்கோட்டையிலும் தொடங்கியது இனஅழிப்பு
அதிகாலை இரண்டு மணிக்கு மேல், கொஞ்சம் அடங்கியிருந்த இன அழிப்புக் கலவரம், காலையில் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியது. காலை 9.30 மணியளவில், இனஅழிப்புக் கலவரம் கொழும்பின் தலை என்று சொல்லத்தக்க புறக்கோட்டைப் பகுதிக்கு பரவியது.
கொழும்பின் வர்த்தக தலைமையிடம் புறக்கோட்டையாகும். தமிழர்களுக்குச் சொந்தமான வர்த்தக மற்றும் வணிக ஸ்தாபனங்கள் நிறைந்த பகுதி. அங்கு களமிறங்கிய இனவெறிக்கூட்டம் பாரிய இன அழிப்பில் ஈடுபட்டது.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து (ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம்) ஏறத்தாழ 100 அடி தூரத்தில் ‘ப்ரிஸ்டல்’ கட்டடத்தில் அமைந்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமான ‘அம்பாள் கபே’ என்ற உணவகம் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. அங்கு பற்றிக்கொண்ட தீ, முழுக் கட்டடத்துக்கும் பரவி, ‘ப்ரிஸ்டல்’ கட்டடத்தையே தீக்கிரையாக்கியது.
தொடர்ந்து புறக்கோட்டை, யோர்க் வீதியில் அமைந்திருந்த ‘சாரதாஸ்’ என்ற தமிழருக்குச் சொந்தமான ஆடையகம் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. தொடர்ந்து ‘பெய்லி’ வீதி, ஒல்கொட் வீதி எனப் புறக்கோட்டைப் பகுதியெங்கிலும் தமிழர்களுக்குச் சொந்தமான வியாபார, வர்த்தக ஸ்தாபனங்கள் தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டன.
புறக்கோட்டை ரயில் நிலையத்துக்கருகே அமைந்திருந்த தமிழருக்குச் சொந்தமான ‘ஆனந்த பவன்’ என்ற உணவகமும், ‘அஜந்தா ஹொட்டேல்’ என்ற உணவகமும் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டன. ‘ராஜேஸ்வரி ஸ்டோர்ஸ்’ என்ற எண்ணெய்க் கடையும் தாக்கப்பட்டு, எரியூட்டப்பட்டது. புறக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த தமிழருக்குச் சொந்தமான கடைகள் ஒவ்வொன்றாகத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
புறக்கோட்டையில் தமிழருக்குச் சொந்தமான வியாபார மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, அதனருகே அமைந்திருந்த ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ஜே.ஆர் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
ஜனாதிபதி ஜே.ஆர் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உள்ளக பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளினதும் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
பாதுகாப்புச் சபைக் கூட்டம் முடிவடைந்ததும் பிற்பகல் ஆறு மணிக்கு அமுலுக்கு வரும் வகையில், ஊரடங்கை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிவித்தார்.
புறக்கோட்டைப் பகுதிக்குள் அதிகளவிலான வன்முறையாளர்கள் நுழைந்த வண்ணமே இருந்தார்கள். தமிழர்களின் வர்த்தக ஸ்தாபனங்களெல்லாம் தாக்கியழிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இந்த வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பொலிஸ் ஆய்வாளர் இக்னேஷியஸ், துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க குறிப்பிடுகிறார்.
ஆனால், இதன்பின் வன்முறைக் கும்பல் ஓரளவுக்குக் கலைந்தாலும், நடத்தப்பட்ட இனஅழிப்பு பாரியளவில் நடந்து முடிந்திருந்தது. மேலும் இங்கிருந்து கலைந்த வன்முறைக் கும்பல், மற்றைய பிரதேசங்களுக்குச் சென்றிருந்தது.
கொழும்பின் பலபகுதிகளுக்கும் பரவிய இனஅழிப்பு
அரசாங்கம், மாலை ஆறு மணிமுதல் ஊரடங்கை அறிவித்திருந்தபோதும், காலையிலேயே நிலைமை கைமீறிச் சென்று கொண்டிருந்தது. 25 ஆம் திகதி காலை 10 மணியளவிலெல்லாம் வனாத்தமுல்ல, ஸ்லேவ் ஐலண்ட் (கொம்பனித் தெரு), மருதானை, நாராஹேன்பிட்ட, கிராண்ட்பாஸ், ஹெட்டியாவத்தை, கிருலப்பன, கனல் பாங்க், மோதர, கொட்டஹேன ஆகிய கொழும்பு நகரின் பிரதேசங்களில் வன்முறை வலுக்கத் தொடங்கியது.
அப்பகுதிகளின் சேரிப் புறங்களிலிருந்து இரும்புக் கம்பிகள், சமையலறைக் கத்திகள் போன்ற ஆயுதங்களுடன் புறப்பட்ட இன அழிப்புக் கும்பல்கள், காணுமிடத்திலெல்லாம் தமிழர்களையும் அவர்களது சொத்துகளையும் தாக்கி அழித்தனர் என்று 1983 கறுப்பு ஜூலை பற்றிய தனது நூலில் ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவு செய்கிறார்.
கொழும்பிலே தமிழர்கள் செறிந்து வாழ்ந்த வௌ்ளவத்தை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் 24 ஆம் திகதி இரவு தாக்குதல்கள் ஏதும் நடத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனால், 25 ஆம் திகதி காலையில் இனவெறி கொண்ட கும்பல், இந்தப் பிரதேசங்களுக்குள்ளும் நுழைந்து தமிழர்களின் வீடுகளையும் வியாபார மற்றும் வர்த்தக ஸ்தாபனங்களையும் தாக்கியதோடு, அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடிப்பதிலும் ஈடுபட்டது. அங்கிருந்த தமிழ் மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அத்தோடு, தமிழர்களின் வீடுகளும் வியாபார ஸ்தாபனங்களும் எரியூட்டப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
தமிழர்கள் பலரும் கொழும்பின் அரச தொடர்மாடிகளில் வசித்து வந்தார்கள். இந்த பிரதேசங்களும் இன அழிப்புத் தாக்குதலுக்கு இலக்காகியது. நாராஹேன்பிட்டவில் அமைந்திருந்த எல்விட்டிகல தொடர்மாடித் தொகுதி மற்றும் அன்டர்சன் தொடர்மாடித் தொகுதி ஆகியவையும் திம்பிரிகஸ்யாயவில் அமைந்திருந்த ரொறிங்ரன் தொடர்மாடித் தொகுதியும் கோரத் தாக்குதலுக்கு உள்ளானது.
மேலும், கொழும்பின் இதயம் என வர்ணிக்கப்படும் கொழும்பு – 7 இன் கறுவாத்தோட்ட பிரதேசத்துக்குள்ளும் வன்முறை பரவியது. புள்ளர்ஸ் வீதி, க்றெகறீஸ் வீதியெங்கும் தமிழர்களின் வீடுகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சுருக்கமாகச் சொன்னால் இலங்கையின் தலைநகராம் கொழும்பு நகரே பற்றியெரிந்து கொண்டிருந்தது. ஆனால், எரிந்து கொண்டிருந்தது தமிழ் மக்களின் வீடுகளும் வியாபார ஸ்தலங்களும் சொத்துகளுமே! வீதியில் வடிந்தோடிக் கொண்டிருந்தது தமிழ் மக்களின் இரத்தமே! ஒரு மாபெரும் இன அழிப்பு இலங்கையின் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.
கொழும்பு நகரின் சுற்றிலுமான எல்லைப் பகுதிகளுக்கும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்முறைகள் பரவியிருந்தன. குறிப்பாக இரத்மலானை, கடவத்தை, நுகேகொட ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்கள் மீதும் அவர்களது சொத்துகள் மீதும் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடவத்தையில் ஓர் அம்புலன்ஸ் வண்டி நிறுத்தப்பட்டு, அதில் கொண்டு செல்லப்பட்ட நோயாளி தமிழர் என்று அறியப்பட்டதும், அந்த அப்பாவித் தமிழரை காட்டுமிராண்டிக் கும்பல் உயிரோடு எரியூட்டிக் கொன்ற சம்பவத்தை ரீ.டீ.எஸ்.ஏ.திசாநாயக்க பதிவுசெய்கிறார். இன அழிப்பு கொழும்பை அண்மித்த பகுதிகளுக்கும் பரவிக் கொண்டிருந்தது.
கொழும்பும் அதை அண்டிய பகுதிகளிலும் தமிழர்களுக்கெதிரான காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பு நடந்தேறிக் கொண்டிருந்த நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் இன்னொரு கொடூரம் அரங்கேறக் காத்திருந்தது.
Average Rating