கற்றுக்கொண்ட நல்ல பாடத்திலிருந்து முதலமைச்சருக்கான சோதனை..!! (கட்டுரை)
பெரும் குழப்பங்களில் இருந்து மீண்டிருக்கின்ற வடக்கு மாகாண சபையில், வெளிப்படையாக அமைதி தோன்றியிருப்பது போலக் காணப்பட்டாலும், உள்ளுக்குள் நெருப்புக் கனன்று கொண்டுதான் இருக்கிறது.
எரிமலையில் இருந்து அவ்வப்போது சாம்பலும் புகையும் வந்து கொண்டேயிருக்கும்; அதுதான் எரிமலையின் அடையாளம். எப்போதாவது ஒரு தருணத்தில்தான், அது வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கும்.
அதுபோலத்தான், வடக்கு மாகாண சபையிலும் நெருப்புக் குழம்பை வெளியேற்றும் ஒரு வெடிப்புக்குப் பின்னர் இப்போது, சாம்பலும் புகையுமாக வெளியேறும் நிலை காணப்படுகிறது.
வடக்கு மாகாண சபையில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைதிநிலை தொடர வேண்டுமாக இருந்தாலும், உடனடியாக இரண்டு நெருப்பாறுகளைக் கடந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
முதலாவது அமைச்சர்களின் நியமனம்; இரண்டாவது, இரண்டு அமைச்சர்கள் மீதான புதிய விசாரணை. இந்த இரண்டையும் வெற்றிகரமாகக் கடந்தால்தான், தற்போது காணப்படுகின்ற புயலுக்குப் பிந்திய அமைதி நிரந்தரமானதாக நீடிக்கும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த 24 ஆம் திகதி மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று, மாவை சேனாதிராசாவைச் சந்தித்திருந்தார்.
கட்சித் தலைமையத்துக்குச் சென்ற போது, வெளியே வந்து வரவேற்ற மாவை சேனாதிராசாவிடம், “கனகாலத்துக்குப் பிறகு” என்று சொல்லிக் கொண்டே, உள்ளே சென்றிருந்தார் முதலமைச்சர்.
கட்சித் தலைமைக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான தொடர்பாடல் இடைவெளி அதிகம் இருந்து வந்ததை, அப்பட்டமாக அது உணர்த்தியது. இதுபோன்ற விடயங்கள்தான் பிரச்சினைகள் பூதாகாரமெடுக்கக் காரணம்.
இந்தச் சந்திப்பின்போது, வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவது மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் இணக்கமாகச் செயற்படுவது குறித்தெல்லாம் பேசப்பட்டதாகவும், இணக்கப்பாடுகள் காணப்பட்டதாகவும், மாவை சேனாதிராசா கூறியிருந்தார்.
ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் இருந்து, இந்தச் சந்திப்புத் தொடர்பான எந்த அதிகாரபூர்வ கருத்துகளும் வெளியாகவில்லை.
இந்தச் சந்திப்பின்போது, அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டிருந்தது. மாவை சேனாதிராசா அதைச் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தியிருந்தார். இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி, முடிவுகளை எடுப்பது என்று இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை, வெற்றிடமாக உள்ள இரண்டு அமைச்சுகளில் ஒன்றுக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் அனந்தி சசிதரனை நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் விருப்பம் வெளியிட்டதாகவும் அதற்கு, மாவை சேனாதிராசா இணங்கவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியது.
தமிழரசுக் கட்சியினால் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படும் அனந்தி சசிதரன், கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருப்பவர் என்பதையும் மாவை சேனாதிராசா சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், கடந்த திங்கட்கிழமை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், கல்வி அமைச்சர் பதவிக்கு இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, அது முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பதவி விலகிய கல்வி அமைச்சர் குருகுலராசா, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர். எனவே, கல்வி அமைச்சர் பதவி, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த- தமிழரசுக் கட்சியினால் முன்மொழியப்படும் ஒருவருக்கே அளிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் வாதம்.
தமிழரசுக் கட்சி, கல்வி அமைச்சர் பதவிக்கு ஆர்னோல்ட் பெயரை முன்மொழிந்ததை, சில ஊடகங்கள் தவறாக விளங்கிக் கொண்டு, அவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு விட்டதாகச் செய்திகளை வெளியிட்டன.
இதனால், அவசரமாக முதலமைச்சரின் செயலகத்தில் இருந்து ஒரு செய்திக்குறிப்பு ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. கல்வி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வெளியான செய்தி பற்றி, தாமே கேள்வியையும் எழுப்பி, பதிலையும் அளித்து ஊடகங்களுக்கு, அனுப்பியிருந்தார் முதலமைச்சர்.
அதில், கல்வி அமைச்சராக யாரும் நியமிக்கப்படவில்லை, போருக்குப் பிந்திய கால தேவைகள் முன்னுரிமைகளின் அடிப்படையில், உரிய செயல்முறைகள் மற்றும், நடைமுறைகளுக்கு அமைவாகவே, அமைச்சர்களின் நியமனங்கள் இடம்பெறும்.
விரைவில் அந்த நியமனங்கள் நடக்கும். அமைச்சர்களை நியமிப்பது முதலமைச்சரே என்று கூறப்பட்டிருந்தது.
இதன்மூலம், முதலமைச்சர், வெறுமனே, கல்வி அமைச்சராக ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை மறுக்க முனைந்தார் என்று கொள்ள முடியாது. அதற்கும் அப்பால், சில விடயங்களை அவர் கூற முனைந்திருந்தார்.
அமைச்சர்களுக்குரிய தகைமைகள் மற்றும் அதற்கு அளிக்கப்பட வேண்டிய முன்னுரிமைகள் கருத்தில் கொள்ளப்படும் என்பது முதலாவது விடயம்.
அமைச்சர்களை நியமிக்கும், இறுதி முடிவை தாமே எடுப்பேன் என்பது இரண்டாவது விடயம்.
எனினும். உரிய செயல்முறைகள், நடைமுறைகளையும் கவனத்தில் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இந்த அறிக்கை, மிகச்சிறியது என்றாலும் இதற்குள் நிறையவே முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. 2013 ஆம் ஆண்டு மாகாணசபை உருவாக்கப்பட்டபோதும், அமைச்சர்களின் நியமனத்தில் முதலமைச்சர் கடும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.
தமிழரசுக்கட்சி தமக்கு இரண்டு அமைச்சர் பதவிகளைக் கேட்டது. ஏனைய பங்காளிக் கட்சிகளும் கேட்டன. முதலமைச்சர் தவிர நான்கு அமைச்சர் பதவிகளே இருந்த நிலையில், அதைப் பங்கிடுவதில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சரே முடிவெடுக்க அனுமதிக்கப்பட்டார்.
தமிழரசுக் கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் – கல்வி மற்றும் சுகாதாரம் வழங்கப்பட்டன. ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கு ஒரு அமைச்சர் பதவியும் ரெலோவுக்கு ஒன்றும் வழங்கப்பட்டன. புளொட்டுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.
அதற்குப் பின்னரும், அமைச்சர்களைத் தெரிவு செய்யும்போது, இன்னொரு குழப்பம் ஏற்பட்டது. கட்சிகளில் இருந்து நபர்களைத் தெரிவு செய்யும் போது, தகைமை மற்றும் திறமை மற்றும் மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் தமது தரப்பில், சுரேஸ் பிரேமச்சந்திரனின் சகோதரரான, சர்வேஸ்வரனுக்கு அமைச்சர் பதவி கேட்டது. ஆனால், முதலமைச்சரோ, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்ட ஐங்கரநேசனுக்கு வழங்கினார்.
அதனால், முதலமைச்சருக்கும், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் இடையில் கடுமையான பிரச்சினை வெடித்திருந்தது. ஐங்கரநேசனை கட்சியில் இருந்து வெளியேற்றுவதாகவும் ஈ.பி.ஆர்.எல்.எப் அறிவித்தது.
அதுபோலவே, ரெலோ சார்பில், அமைச்சர் பதவியைப் பிடிக்க சிவாஜிலிங்கம் முற்பட்டார். ஆனால், மாவட்டங்களுக்கான பிரதிநிதித்துவம் என்ற பொறிக்குள் அவர் சிக்கிக் கொள்ள நேரிட்டது.
ஏற்கெனவே யாழ். மாவட்டத்தில் இருந்து முதலமைச்சர் மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் தெரிவாகிய நிலையில், ரெலோ சார்பில் மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை அமைச்சராக்க வேண்டிய தேவை இருந்தது. மன்னாரில் ரெலோவுக்கு செல்வாக்கு அதிகம். எனவேதான் டெனீஸ்வரனுக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டது.
இப்போதும் அதே பிரச்சினையும் சூழலும் மாறவில்லை. அப்போது, நான்கு அமைச்சர் பதவிகள் இருந்தன. இப்போது இருந்தது இரண்டு அமைச்சர் பதவிகள்தான். ஆனால் முன்று கூட்டணிக் கட்சிகள், மூன்று மாவட்டங்கள், இந்தப் போட்டியில் இருந்தன.
இதைவிட முதலமைச்சருக்கு ஆதரவான அணி, எதிரான அணி என்ற ஒரு சிக்கலான தேர்வும் இருந்தது.
இந்த நிலையில் ஏற்கெனவே இருந்தது போல, கல்வி அமைச்சை கிளிநொச்சிக்கும், விவசாய அமைச்சை யாழ்ப்பாணத்துக்கும் ஒதுங்குவதா அல்லது இந்த ஒழுங்கை மாற்றியமைப்பதா என்பது முதல் பிரச்சினை.
ஏற்கெனவே இருந்தது போல, தமிழரசுக் கட்சிக்கு கல்வி அமைச்சையும் ஈ.பி.ஆர்.எல்.எப்க்கு, விவசாய அமைச்சையும் கொடுக்கலாமா அல்லது அந்த ஒழுங்கை மாற்றியமைப்பதா என்பது இரண்டாவது பிரச்சினை.
மேற்சொல்லப்பட்ட இரண்டு விடயங்களிலும், முன்னைய ஒழுங்கின் கீழ் நியமனங்களைச் செய்தால், ஏற்கெனவே அமைச்சர்கள் நியமனத்தின்போது, புறக்கணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டமும் புளொட் கட்சியும் மீண்டும் அதேநிலைக்குத் தள்ளப்படும். அதுமாத்திரமன்றி, வடக்கு மாகாணசபையில் பால்நிலை சமத்துவமும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படும்.
இந்தப் பிரச்சினைகளையும் தாண்டி, அமைச்சர்களின் நியமனத்தின்போது, தனக்கு ஆதரவான அணியினர் பற்றியும் சிந்திக்கும் நிலையில் முதலமைச்சர் இருக்கிறார்.
இந்தக் காரணத்தை முன்னிறுத்தியே அவர், தற்காலிக அடிப்படையில், மூன்று மாதங்களுக்கு என்று கல்வி அமைச்சை சர்வேஸ்வரனுக்கும் பெண்கள் விவகார அமைச்சை அனந்தி சசிதரனுக்கும் வழங்க முடிவு செய்திருக்கிறார் முதலமைச்சர். இவர்கள் இருவரும் முதலமைச்சர் ஆதரவு அணியினர் என்பது முக்கிய அம்சம்.
விசாரணைகள் மற்றும் அரசியல் கட்சித் தலைமைகளுடனான கலந்துரையாடலுக்குத் தேவைப்படும் கால அவகாசம் ஆகியவற்றுக்காகவே இந்தத் தற்காலிக நியமனம் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், நிரந்தர நியமனம் ஒன்றைச் செய்யும் போது ஏற்படும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் உத்தியாகவே இது தெரிகிறது. இந்த நியமனங்கள் நிச்சயமாக கட்சிகள், மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான சமநிலையை பேணுகின்றதாக அமையவில்லை.
தற்போதைக்கு அமைதியாக இருந்தாலும், 3 மாதங்களையும் தாண்டி இவர்களை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முனைந்தாலும் சரி, தொடர்ந்து வைத்திருக்க முனைந்தாலும் சரி, முதலமைச்சருக்கு சங்கடமான சூழ்நிலைகள் ஏற்படக் கூடும்.
அண்மைய குழப்பங்கள் ஒரு நல்ல பாடமாக அமைந்திருப்பதாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார். அந்தப் பாடங்களில் இருந்து அவர் கற்றுக்கொண்டது எதை என்பதை, பரீட்சிக்கின்ற களமாகத்தான், அமைச்சர்களின் தெரிவு அவருக்கு இருக்கப் போகிறது.
Average Rating