ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க டிப்ஸ்…!!

Read Time:6 Minute, 51 Second

201707011345465659_Keep-the-blood-pressure-under-control_SECVPFஉயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்களில் பாதிப் பேருக்கு, அது இருப்பதே தெரியாது என்பதுதான் அபாயமான விஷயம். உயர் ரத்த அழுத்தத்துக்கான அறிகுறிகள் ‘பளிச்’சென்று தெரிவதில்லை. ஆனால் இப்பிரச்சினையை அறிந்தும் அறியாமலும் விட்டால், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றில் கொண்டுபோய் விட்டு விடக்கூடும்.

நமது அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றும் சில விஷயங்கள் மூலம், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். அவை பற்றி…

உடற்பயிற்சி

தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். அது உங்களுக்குப் பிடித்த நடைப் பயிற்சியாக இருக்கலாம், ஓட்டமாக இருக்கலாம், நீச்சலாக இருக்கலாம், சைக்கிள் ஓட்டுதலாக இருக்கலாம் அல்லது நடனமாடுவதாகக் கூட இருக்கலாம். உங்களுக்கு லேசாக ரத்த அழுத்தம் இருந்தாலும், அது முழு அளவிலான ‘ஹைபர்டென்ஷன்’ ஆவதை உடற்பயிற்சி தடுக்கும்.

மனஅழுத்தத்தைத் தவிருங்கள்

தொடர் மனஅழுத்தம், உயர் ரத்த அழுத்தத்துக்கு இட்டுச் செல்லும். மனஅழுத்தத்தைப் போக்க முயல்கிறேன் என்று மது, புகையை நாடுவதும், இஷ்டம்போல விரும்பியதை எல்லாம் சாப்பிடுவதும் மோசமான விளைவையே ஏற்படுத்தும். வாழ்வில் மாற்ற முடியாத விஷயங்களை அதன் போக்கில் ஏற்கப் பழகுங்கள். தீர்க்கக்கூடிய பிரச்சினைகளுக்கு எளிமையான தீர்வுகளைத் தேடுங்கள். மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களைத் தவிர்ப்பதுடன், தினமும் 15 நிமிடமாவது அமைதியாக அமர்ந்து ஆழ மூச்சை உள்ளிழுத்து விடுங்கள்.

மெக்னீசியச் சத்து

மெக்னீசிய தாதுப்பொருள், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மெக்னீசியச் சத்து உள்ள உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாத அபாயம் குறைகிறது என்று ஓர் ஆய்வு சொல் கிறது. பச்சை இலைக் காய்கறிகள், கொட்டைப்பருப்புகள், விதைகள், கறுப்பு சாக்லேட்டில் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது.

எடையைக் குறையுங்கள்

உங்களின் உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க, ரத்த அழுத்தமும் கூடுகிறது. உங்கள் எடை அதிகமாக இருந்தால், தூங்கும்போது மூச்சு விடுதலில் சிரமம் இருக்கக்கூடும். அதற்கும், ஹைபர்டென்ஷனுக்கும் தொடர்பு இருக்கிறது. நமது உயரம், வயதுக்கு ஏற்ற சரியான எடை இருக்கிறோமா என்று ‘பாடி மாஸ் இன்டெக்ஸை’ (பி.எம்.ஐ.) பாருங்கள். ஆண்களின் இடை அளவு 40 இஞ்சுக்கு மேலாகவும், பெண்களின் இடை 35 இஞ்சுக்கு மேலாகவும் இருந்தால், அபாயம். அத்தகையவர்கள், நான்கரை கிலோ எடையைக் குறைத்தாலே நல்லது.

உப்பு குறையட்டும்

வயது வந்தவர்கள், தினமும் 6 கிராம் உப்புக்கு மேல் உட்கொள்ளக் கூடாது. அதாவது, ஒரு தேக்கரண்டி அளவு. 50 வயதைத் தாண்டியவர்கள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், உப்பு விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். பதப்படுத்திய உணவுகள், கடைகளில் கிடைக்கும் நொறுக்குத் தீனிகளை தவிருங்கள். உப்பைக் குறைத்து சாப்பிட்டுப் பழகுங்கள்.

வெயில் காயுங்கள்

போதுமான வெயில் உங்கள் உடம்பில் படட்டும். அப்போது உடம்பில் நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி அதிகரிக்கிறது. அது, ரத்த நாளங்கள் விரிவடைய உதவுகிறது. சூரிய ஒளியால் கிடைக்கும் வைட்டமின் ‘டி’யும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

காபி, டீ கட்டுப்பாடு

காபியில் உள்ள ‘காபீன்’, சட்டென்று தடாலடியாக ரத்த அழுத்தத்தைக் கூட்டுகிறது. பொதுவாகவே காபி, டீ, மென்பானங்களை அளவோடு பருகுவது நல்லது.

புகை எனும் பகை

ஒருவர் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும், பல நிமிடங்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கூட்டுகிறது. எனவே, புகைப் பழக்கத்தை விட்டொழிப்பதன் மூலம், ரத்த அழுத்தத்தை இயல்பாக வைத்துக்கொள்வதுடன், நம் ஆயுளையும் அதிகரித்துக்கொள்ளலாம்.

உணவில் கவனம்

நாம் உண்ணும் உணவில் கவனம் வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழுத்தானிய உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை ஒதுக்க வேண்டும். நாம் என்னென்ன உணவுகளைச் சாப்பிடுகிறோம் என்று பட்டியலிட்டுப் பார்த்தால், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது புரியும். உணவகங்களில் சாப்பிடும்போது, சுவையான, ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை என்று எண்ணாதீர்கள். அங்கும் ஆரோக்கியமான உணவு களையே நாடுங்கள்.

‘போதை’ பொல்லாத பாதை

மதுவில் திளைப்பது, ஹைபர்டென்ஷன், எடை அதிகரிப்புக்குக் காரணமாகும். கட்டுப்பாடில்லாமல் மது அருந்துவதால், ரத்த அழுத்தம் எகிறும். மதுப் பழக்கம் உள்ளவர்கள், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்குச் சாப்பிடும் மருந்தும் சரியாக வேலை செய்யாது என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதன் முறையாக தன் மகள்களை தொலைக்காட்சிக்கு காட்டிய பிரகாஷ்ராஜ்..!!
Next post 50 வருட பசி பட்டினி.. கொமடி நடிகருக்கு வாய்ப்பு கிடைக்கும் போது இறந்து போன சோகம்..!!