சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?..!!
குட்டீஸ்… உங்க எல்லாருக்கும் சாக்லெட்னா ரொம்ப இஷ்டம்தானே? ஆனா நிறைய சாக்லெட் சாப்பிட்டா அம்மா திட்டுவாங்க அப்டித்தானே? சாக்லெட்டின் சுவை அலாதியாக இருப்பதால் நாம் நிறைய சாக்லெட் சாப்பிட ஆசைப்படுகிறோம். அளவாகச் சாப்பிட்டால் சாக்லெட் நன்மை தரக்கூடியது. நிறைய சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும். சாக்லெட் குறித்த ருசியான சங்கதிகளை இந்த வாரம் சுவைப்போம்…
சாக்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலம் கொள்வர். குறிப்பாக குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். கடைக்கு அழைத்து சென்றால், அவர்களது கை சாக்லெட்டை பார்த்து நீட்டும். பெரியவர்களும் குழந்தைகளுக்கு நிகராக சாக்லெட் சாப்பிட ஆசை கொள்வர். இருந்தாலும் உடல் பருமன் மற்றும் பல உடல் உபாதைகள் காரணமாக பெரியவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள்.
மேலும் குழந்தைகளுக்கும் பல் சொத்தை ஆகிவிடும் என்று காரணம் சொல்லி, சாக்லெட் வாங்கிக் கொடுப்பதை குறைத்துக் கொள்வார்கள். சாக்லெட்டில் அதிக கலோரி நிறைந்துள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று எண்ண வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தான் அவ்வாறு ஆகும்.
ஆனால் அளவாக சாப்பிட்டு வந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. மேலும் சாக்லெட் சாப்பிட்ட பிறகு நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன் சாக்லெட் சாப்பிட கொடுக்க வேண்டாம்.
டார்க் சாக்லெட் மாரடைப்பு அபாயத்தை 50 சதவீதமும், இதய நோய்களை 10 சதவீதமும் குறைக்கும். எனவே தினமும் ஒரு துண்டு சாக்லெட் சாப்பிடுவது ஒரு பொருட்டல்ல.
சாக்லெட்டால் மனநிலையை மேம்படுத்த முடியும். ஏனெனில் மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் இதில் அதிகம் உள்ளது.
சாக்லெட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோ தூள். இதில் குறைந்த கொழுப்பே உள்ளது. “சாக்லெட் சாப்பிட விரும்புகிறேன். ஆனால் எடை போட விரும்பவில்லை” என்று எண்ணுபவர்கள் குறைந்த கொழுப்பு கொண்ட சாக்லெட் சாப்பிட வேண்டும். ஆனால் அதையும் அளவோடு சாப்பிட வேண்டும். மேலும், சாக்லெட்டில் கொக்கோ 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதை தேர்ந்துதெடுத்து சாப்பிட வேண்டும்.
சாக்லெட் சாபிட்டால் சில காலத்திற்கு முதுமையை ஒத்தி வைக்கலாம். அதாவது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லெட் குறைக்கின்றது. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது.
* கருப்பு சாக்லெட்டில் அதிகப்படியான சாக்லெட் மூலப் பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இனிப்பு குறைவாக கலந்திருக்கும். எனவே கருப்பு சாக்லெட்டுகளை குழந்தைகளுக்கு நம்பிக்கையுடன் வழங்கலாம். அவை குழந்தைகளுக்கு பல நன்மைகளையும் வழங்கக்கூடியது.
* கருப்பு சாக்லெட்டில் உள்ள அதிகப்படியான நோய் எதிர்பொருட்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்புமண்டலத்தை பலமாக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதுடன், இதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றுக்கு உண்டு. மூளை சுறுசுறுப்பாக செயல்படவும் சாக் லெட் மூலப்பொருள் உந்துதல் அளிக்கிறது.
* அளவுக்கு அதிகமாக சாக்லெட் உண்பதால் தலைவலி ஏற்படலாம். அதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் சாக்லெட் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
* சாக்லெட் நிறைய கலோரிகள் ஆற்றலைத் தருவதால் குழந்தைகளுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். அதே நேரம் நீண்ட நேரம் பசியெடுக்காமல் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள்.
* 30 கிராம் கருப்பு சாக்லெட்டில் அதிகபட்சம் 10 மில்லிகிராம் காபின் ரசாயனப் பொருளும், பால் சாக்லெட்டில் 5 மில்லி கிராம் காபின் மூலப்பொருளும் உள்ளன. மூளைக்கு உகந்த செரோடானின், என்டார்பின் மூலப்பொருட்களும் சாக்லெட்டில் உள்ளன.
* மனஅழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு ஆற்றலும் சாக்லெட் சாப்பிடுவதால் கிடைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
* 65 முதல் 70 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை உள்ள இடத்தில் சாக்லெட்டுகளை பராமரிப்பதே அதன் சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* ஒரு கடி அளவு சாக்லெட் உங்களுக்கு 150 அடிகள் நடக்கும் ஆற்றலைத் தரும்.
குழந்தைகள் தினமும் சாக்லெட் சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படுவதாக ஆய்வுகளில் அறியப்படவில்லை. தினசரி குறைந்த அளவு சாக்லெட் உண்பதால் நோய் எதிர்ப்பாற்றலும், உடலுக்குத் தேவையான ஆற்றல்களும் கிடைப்பதாகவே தெரியவந்துள்ளது.
வழக்கமான சாக்லெட் கட்டிகளில் (25 கிராம் அளவுடையது) 6 கரண்டி சர்க்கரையும், சுமார் 2 கரண்டி சாக்லெட் பவுடரும் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு நாளைக்கு 4 கிராம் சர்க்கரையும், 1 கரண்டி சாக்லெட் பவுடருமே குழந்தைகளுக்குப் போதுமானதாகும். எனவே தினமும் சுமார் 15 கிராம் அளவுடைய சாக்லெட் சாப்பிடுவதால் எந்த பிரச்சினையும் இல்லை.
அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. பல்சொத்தை, தலைவலி, உடல் பருமன், மூளை பாதிப்பு, நீரிழிவு போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே அளவாக சாக்லெட் சாப்பிட்டு ஆரோக்கியம் பெறுவோம்.
Average Rating